Thursday, 9 February 2017

பால்குடி டேஸ் (PAAL KUDI DAYS) -
தருமபுரி நினைவுகள் - 2

ஒண்ணாம்பு முடிச்சு லீவு விட்டாங்க. மெட்றாஸ், திருச்சின்னு லீவுக்கு ஊருக்கு போயிட்டு கொட்டம் அடிச்சோம். ஸ்கூலு தெறந்துச்சு. ஆஹா ரெண்டாம்ப்பு போறோம்னு ஜாலியா ஸ்கூலுக்குப் போனேன். அங்க போனா பெரிய அதிர்ச்சி. எனக்கு மட்டும் இல்ல என் க்ளாஸ் பசங்களுக்கும்தான். ஒண்ணாம் க்ளாஸ்ல (இப்ப பெரிய ஆளாயிட்டோம்ல, அதுனால க்ளாஸ்) A செக்ஷன்ல படிச்ச எங்களை ரெண்டாம் க்ளாஸ்ல B செக்ஷன்ல போட்டாங்க. என்ன ஒரு கேவலம். போயும் போயும் B செக்ஷனா? நான் ஆத்திரம் (அழுகை) தாங்காம மறுபடியும் ஒண்ணாம் க்ளாஸுக்கே போய் உக்காந்துட்டேன். அமிர்தம் டீச்சர் என்ன ஏதுன்னு கேட்டு சமாதானப்படுத்தி அந்த டீச்சரும் நல்லவுங்கதான்னு சொல்லி ரெண்டாம் க்ளாஸ்ல கொண்டு போயி விட்டாங்க. அரை மனசோட போய் உக்காந்தேன். அன்னிக்கு பாடம் எதுவும் நடத்தலை. எல்லார் பேரும் கேட்டாங்க. சொன்னோம். இன்டரவேலு (INTERVAL) விட்டாங்க. வீட்டுக்கு வந்தவன் மதியம் திரும்பி ஸ்கூலுக்கு போகல. வீட்டுலேயும் முதல் நாளுதானேன்னு கண்டுக்கல.

மறுநாள் என்னதான் நடக்குதுன்னு பாக்கலாமேன்னு வீரத்தோட ஸ்கூலுக்கு போனோம் நானும் என் நண்பர்களும் (உபேந்திரன், சுப்ரமணி, மாதேஸ்வரன்). மொதோ பிரீடு (PERIOD) தமிழ். ஓகே. ரெண்டாவது பிரீடு வந்துச்சி. அதுக்கு வேற ஒரு டீச்சரு வந்தாங்க. இப்பதான் வாழ்க்கைல பெரிய அதிர்ச்சியை சந்திச்சோம் நானும் உபேந்திரனும். கணக்குன்னு ஒரு பாடத்தை ஆரம்பிச்சாங்க. முதல்ல ரெண்டாம் வாய்ப்பாடு எழுதி போட்டாங்க போர்ட்ல. அத எழுதிக்க சொன்னாங்க. நமக்கு புரியல. அப்பறம் அதை டீச்சர் நாலஞ்சு தடவ சொல்லிட்டு எங்களை திருப்பி சொல்ல சொன்னாங்க. ஒரு மாதிரி அந்த பிரீடும் முடிஞ்சுது. போறப்ப அந்த வாய்ப்பாட மறுநாள் வீட்டுப் பாடமா எழுதிட்டு வர சொன்னாங்க. இங்கதான் ஆரம்பிச்சிச்சி சனியன் நமக்கு. (அப்பவே 7 1/2 போல).

மறுநாள் எல்லார் ஸ்லேட்டையும் காமிக்க சொன்னாங்க. எல்லாரும் வாய்ப்பாடு எழுதிட்டு வந்தா நானும் உபேந்திரனும் மட்டும் ஒன்னு, ரெண்டு 100 வரைக்கும் எழுதிட்டு வந்தோம். ஏன்ன்னு கேட்டதுக்கு அப்படிதான், எங்களுக்கு இதுதான் தெரியும்னு சொன்னோம். அன்னிக்கு டீச்சர் நல்ல மூட்ல இருந்தாங்க போல. தம்பி இப்படி எல்லாம் செய்யக் கூடாதுன்னு. சொன்னபடி கேக்கணும்னு சொல்லிட்டு அன்னிக்கு 3 ஆம் வாய்ப்பாடு. என்னடா தலைவலி போயி திருகு வலி வந்துடுச்சேன்னு புலம்பிக்கிட்டே வீட்டுக்கு வந்து சாப்பிட்டோம். சாப்பிட்டு விளையாட கிளம்பினவன பாட்டி தரதரன்னு இழுத்துட்டு போய் ஸ்கூல்ல விட்டாங்க (கட்டல போறவனேன்னு திட்டிக்கிட்டே).

மதிய வகுப்புகளுக்கு இன்னொரு டீச்சர். அவங்க இயற்கை, (SCIENCE), பூகோளம், எல்லாம் நடத்தினாங்க. அதெல்லாம் என்னவோ கண்ணக் கட்டி காட்டுல விட்டா மாதிரி இருந்துச்சி. ஆனா அந்த டீச்சர் நல்லவங்க போல. வீட்டுப் பாடம் எதுவும் தரல.

இப்படியே வாய்ப்பாடு, தமிழ்ப் பாடம், இயற்கை, பூகோளம், சரித்திரம்னு வகுப்புகள் போயிட்டிருந்துச்சி. 30 - 40 நாள் போயிருக்கும். இன்டரவேலு விட்டா ரோட்ல மனேரியான்னு ஒரு பொம்பள விக்கற, ஜவ்வு மிட்டாய், கமர்கட், கோணப் புளியங்காய், எலந்தவடைன்னு வாங்கித் தின்போம். டீச்சர் சொல்வாங்க, "டேய், மனேரியாகிட்ட வாங்கித் தின்னா மலேரியா வரும்டா"ன்னு. அதெல்லாம் கண்டுக்க மாட்டோம். வாரம் ஒரு நாள் குச்சி ஐஸ், சேமியா ஐஸ்.
Image may contain: drawing

திடீர்னு ஒருநாள் இன்னிக்கு உங்களுக்கு கூட்டல் கணக்கு சொல்லித் தரப் போறேன்னு டீச்சர் ஆரம்பிச்சாங்க. என்னடா தகடூருக்கு வந்த சோதனைன்னு நெனச்சுக்கிட்டே கவனிச்சோம். ஒன்னும் புரியல. புரியாம ஒரு வாரம் ஓடிடுச்சி. மறுநாள் கணக்குல பரீச்சைனு சொன்னாங்க. அதெல்லாம் நமக்கு டோன்ட் கேர். 2 கூட்டல் கணக்கு குடுத்து விடை எழுதி ஸ்லேட்டை கொண்டு வந்து டீச்சர்கிட்ட வைக்க சொன்னாங்க. நான் ஒரு ஐடியா செஞ்சேன். டீச்சர் சொன்ன உடனே மொதோ ஆளா ஸ்லேட்டை கொண்டு போய் வெச்சேன். எல்லாரும் வரிசையா கொண்டு போய் என் ஸ்லேட் மேல அவங்க ஸ்லேட்டை அடுக்கவே என்னுது அடில போச்சு. டீச்சர் ஒரு பையன கூப்டு அவனை விடைகளை போர்ட்ல எழுத சொன்னாங்க. உடனே நான் "டீச்சர், என் ஸ்லேட்ல பேர் எழுத மறந்துட்டேன்னு சொல்லி ஸ்லேட்டை எடுத்துக்கிட்டு வந்து அவன் விடை எழுதினவுடனே அதை பாத்து காப்பி அடிச்சு எழுதி கொண்டு போய் வெச்சுட்டேன். இப்படி ஒரு வாரம் ஓடியிருக்கும். ஒரு நாள் இப்படி செய்யும்போது பக்கத்துல இருந்த பையன் பாத்துட்டு டீச்சர் இவன் காப்பி அடிக்கறான்னு சொல்லிட்டான் (நம்ம வீரபாண்டியனோ இல்லையோ, நம்மள சுத்தி எட்டப்பர்கள் எப்பவுமே ஜாஸ்தி). டீச்சர் கூப்பிட்டு என்னை போர்ட்ல விடை எழுத சொன்னாங்க. நான், டீச்சர் எனக்கு தெரியாது, எனக்கு கணக்கு வரலைன்னு சொன்னேன். டீச்சர் அடிக்கல, திட்டல. தம்பி, நல்ல படிக்கணும்பா, இதெல்லாம் தெரிஞ்சாதான் படிக்க முடியும்னு சொல்லிட்டு விட்டாங்க.

அதே ஸ்கூல்ல என் அண்ணன் 3 ஆவது A, அக்கா 5 ஆவது A (அதுல பெருமை வேற) படிச்சிட்டிருந்தாங்க. அவங்க வீட்டுல வந்து போட்டுக் குடுத்துட்டாங்க. எங்க அம்மா பொறுமையா சாக்பீஸ், சாக்லேட் எல்லாம் வெச்சு கூட்டல் கணக்கு சொல்லிக் குடுத்தாங்க. கொஞ்ச நாள்ல நல்லா கத்துக்கிட்டேன்.

இப்படியா நம்ம ரெண்டாம் க்ளாஸ் நல்லபடியா போயிட்டிருந்துச்சி.

தொடரும்.

பால்குடி டேஸ் (PAALKUDI DAYS) -
தருமபுரி நினைவுகள்.

தருமபுரி (தர்ம்ப்ரி) பத்தி எனக்கு ரெண்டு வயசுலேர்ந்தே ஞாபகம் இருக்குன்னு சொன்னா நம்பணும். தர்மபுரில நான் ஆஸ்பத்திரில பொறக்காம எங்க வீட்டுல ஒரு மூலைலேயே பொறந்தேனாம். அதுனாலதானோ என்னவோ எனக்கு ஊர் மேலயும், வீட்டு மேலயும் பாசம் ஜாஸ்தி. ஊர விட்டு வந்து 33 வருஷம் ஆகியும் இன்னும் கனவுல எங்க வீடு வரும். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்க நடக்கற மாதிரி கனவு வரும்.

எங்க தெரு 20 பிளாட்டுங்கள்ல ஒரு 30 வீடுகள் கொண்ட தெரு. BLIND STREET ங்கிற முட்டு சந்து. அதுல தெரு ஆரம்பத்துல மொதோ வீடு எங்களுது. முட்டு சந்துங்கிறதுனால தெருக் கடசில கொழந்தைங்களை எல்லாம் தைரியமா வெளயாட விடுவாங்க. சரி நம்மளப் பத்தி விஷயத்துக்கு வருவோம்.

நம்ம பால்குடி டேஸ் சுவாரஸ்யமாதான் இருந்திருக்கு. ஒரு அக்கா, அப்பறம் அண்ணன், கடைக்குட்டி நானு. பொறக்கும்போதே ஐயா வெயிட் பார்ட்டி. கஷுக்கு முஷுக்குன்னு. நம்ம பொறந்தப்ப குடும்பத்துல கொஞ்சம் கஷ்டம் (பொறக்கும்போதேவா). அதுனால பால், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா மாதிரி காஸ்டலி பானங்கள் கெடயாது. ஜவ்வரிசி கஞ்சிதான். அது இன்னும் நம்மள தாட்டியா ஆக்கிடுச்சு. நம்ம உடன்பிறப்புகள் எல்லாம் பாவம், ஈர்குச்சி மாதிரி. அப்பல்லாம் ஊதுபத்தி தகரக் குழாய்லதான் வரும். அதை எடுத்துக்கிட்டு பாசத்தோட அக்காவையும் அண்ணனையும் அவங்க அலற அலற தொரத்திக்கிட்டு ஓடுவேனாம். அதுலேர்ந்து அவங்களுக்கு விடுதலை வேணும்னு அவங்களை சீக்கிரமே ஸ்கூல்ல போட்டாங்க. நமக்கு பொழுது போகல. என்ன செய்யறது. வீட்டுல இருக்கற கரண்டிகளை எடுத்து வெச்சுக்கிட்டு கூடத்துல உக்காந்துக்கிட்டு வாசப் பக்கம் இருக்கற ஜன்னல் வழியா,, ஜன்னல் கம்பில படாம THROW அடிக்க வேண்டியதுதான். யாராவது எதிர்வீட்டுக்காரங்க பாத்தா அதெல்லாம் திருப்பி வரும் வீட்டுக்கு. இல்லேன்னா அதெல்லாம் நாட்டுக்கு. நான் பெரிய கிரிக்கெட் வீரனா வருவேன்னு நெனைச்சாங்க இதை வெச்சு (எங்க, மரத்துல மாங்கா அடிக்கதான் இந்த THROW பயன்பட்டுச்சு)

எவ்வளவு நாளைக்கு இதெல்லாம் நடக்கும்? அலுப்பு தட்டிடுச்சு. நானும் ச்சூலுக்குப் போவேன்னு அடம் புடிச்சேன். நம்ம அடம் தாங்காம நர்சரி (அப்பல்லாம் எல் கே ஜி கெடையாது) ச்சூல்ல சேத்து விட்டாங்க. ச்சூலுக்குப் போன ஒடனே ஒரே ஒரு பாட்டு, நிலா நிலா ஓடி வா, அப்பறம் தூங்க வெச்சுடுவாங்க, எழுந்தவுடனே மிட்டாய் எல்லாருக்கும் குடுப்பாங்க. எனக்கு மட்டும் இல்ல. நான் டீச்சர் கிட்ட கேட்டேன். அதுக்கு உங்க அம்மாவைக் கேளுன்னு திட்டினாங்க. (ஸ்கூல்ல விடறப்ப அம்மா குடுத்துட்டுப் போனாதான் நமக்கு தருவாங்களாம்). நம்ம தன்மானம் சும்மா இருக்குமா? டீச்சர கொரங்குன்னு திட்டிட்டேன். அடிக்க வந்தா ஓட்டம் ஓடி ஆட்டம் காட்டினதுல முடியாம டீச்சர் ஆயாம்மா கூட என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. மறுநாள் மறுபடியும் எங்க அம்மா ஸ்கூல்ல கொண்டு போய் விட்டப்ப டீச்சர் ஒரே கம்பளையின்ட். எங்க அம்மா கொழந்தைங்கன்னா அப்படிதான் இருக்கும்னு டீச்சரை திருப்பித் திட்டிட்டு இந்த ஸ்கூலும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்னு என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆக ஆரம்பமே வாக் அவுட்தான் நம்ம.

மறுபடியும் அடம் புடிக்கவே, அடுத்த வருஷம் என்ன அக்கா, அண்ணாவோட எலிமெண்டரி ஸ்கூல்ல (அப்பல்லாம் அப்படிதான்) போட்டாங்க, எஸ்மாடர் (ஹெட்மாஸ்டர்) பையன் சின்னவனா இருக்கானேன்னு சொல்ல, எங்க அப்பா 1 1/4 வயசு கூட்டி பொறந்த தேதி குடுத்தார். ஒடனே அவர் தலைய சுத்தி காதத் தொட சொன்னாரு (5 வயசு சமயத்துலதான் அப்படி தொட முடியும், இல்லேன்னா காது எட்டாது) நான் காதத் தாண்டி மோவாய் வரை தொட்டேன். சேத்துக்கிட்டாரு.

No automatic alt text available.


ஒண்ணாப்புல அமிர்தம் டீச்சர் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். அவங்க கிட்ட படிக்காதவங்க பாவிங்க. அவ்வளவு அன்பு புள்ளைங்க மேல. கிறிஸ்டியன். கொண்டை போட்டு எப்பவுமே சிரிச்ச மொகத்தோட இருப்பாங்க, அடிக்கவே மாட்டாங்க. என்னை இடுப்புல தூக்கி வெச்சு பாடம் நடத்துவாங்க. உபேந்திரன்னு எனக்கு ஒரு ஃபிரண்டு. மன்த்லி டெஸ்ட்ல அரச மரம், ஆலமரம் எல்லாம் எழுத சொன்னா, நானும் அவனும் மட்டும் 1, 2 - 100 வரைக்கும் எழுதிடுவோம் (அது மட்டும்தான் தெரியும், பின்ன டீச்சரே செல்லம் கொண்டாடினா படிப்பு எப்படி வரும்). இருந்தாலும் எங்களுக்கு மட்டும் 100/100 போட்டுடுவாங்க. மத்தவங்களுக்கு தப்புக்கு ஏத்த மாதிரி மார்க் கொறயும். (இதோட வெளவு மூணாப்பு வரைக்கும் கஷ்டப்பட்டோம், கூட்டல் கழித்தல் வராம).

கிளாஸ்லேர்ந்து ஜன்னல் வழியா பாத்தா ரோட்ல போறவங்க தெரிவாங்க. எங்க அப்பாவோ அவனோட அப்பாவோ அந்தப் பக்கம் போனா, நாங்க ரெண்டு பேரும் எழுந்து நின்னு டீச்சர் அப்பா போறாங்கன்னு சொல்வோம், அவ்வளோதான். சரி நீங்க போங்கன்னு அனுப்பிடுவாங்க, அப்பாகிட்ட ஓடிப்போய் மிட்டாய் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடி வந்துடுவோம். எங்க அம்மா சிரிச்சுக்கிட்டே சாப்பிட சொல்லி தூங்க வெச்சுடுவாங்க. (பாட்டி இருந்தா கட்டல போறவனேன்னு முதுகுல ரெண்டு சாத்துவாங்க)

இப்படியா ஒண்ணாம்பு முடிச்சு ரெண்டாம்ப்பு போனோம்.

(தொடரும்)