Friday, 30 June 2017

பால்குடி டேஸ் - 10 PAALKUDI DAYS
(தருமபுரி நினைவுகள்)

ஆறாவது லீவுல எங்களுக்கு பூணூல் போடறதுன்னு முடிவு செஞ்சாங்க. மொதல்ல எங்க ஊர் சத்திரத்துல எளிமையா முடிச்சிலாம்னு நினைச்சாங்க. அப்பறம் எங்க அம்மா "இது பசங்களுக்கு செய்யற முக்கியமான ஃபங்க்ஷன். அதுனால வீட்டுல கொஞ்சம் பெரிசா எல்லாரையும் கூப்பிட்டு செஞ்சுடலாம்னு சொன்னாங்க. அப்படியே முடிவாச்சு. அப்பல்லாம் ஒரு வாரம் முன்னாடியே ஒரம்பறைங்க (தருமபுரியில் உறவுமுறைக்கு வழக்குச் சொல்). வந்துடுவாங்க. எங்க சித்தப்பா, சித்தி குடும்பமும் அப்படியே வந்தாங்க. அவங்களுக்கு நாலு பசங்க. அதுல ரெண்டு பேருக்கு ஏற்கெனவே பூணல் போட்டாச்சு. மூணாவது பையனுக்கு எங்க கூட போட்டுடலாம்னு முடிவு பண்ணாங்க. எங்க அப்பாவும் செலவோட செலவா இருக்கட்டும், மூணு பேருக்கு போடக்  கூடாது, அதுனால ஒன் கடைசிப் பையனுக்கும் சேத்து நாலா போட்டுடலாம்னு சொல்லிட்டாரு. அந்தப் பையனுக்கு மூணரை  வயசுதான்.  எல்லாருக்கும் ஒரே ஜாலி.

மறுநாள் பூணல். அதுக்கு முன்னாடி நாள் ராத்திரி நல்ல மழை. நாங்க பகல்ல வீட்டுல எல்லாம் வேலையா இருந்தப்ப, தெருக்கடைசில தேங்கியிருக்கற தண்ணில குதிச்சு உருண்டு புரண்டு விளையாடினோம். அங்க எதிர் வீட்டுல ஒரு அய்யங்கார் இருந்தாரு. அவர் எங்களை விளையாடக் கூடாதுன்னு மெரட்டினாரு. நாங்க விளையாட்டு சுவாரசியத்துல அவரைக் கண்டுக்கல. போங்க மாமான்னு சொல்லிட்டு வெளையாடிட்டிருந்தோம். அது அவருக்கு அவமானமா போச்சாம். வெளில கெளம்பிட்டிருந்தவர், போற வழில எங்க வீட்டுல பசங்களை நான் தண்ணியில வெளையாடாதீங்கன்னு சொன்னதுக்கு என்னைப் போய்யான்னு மரியாதை இல்லாம பேசறாங்கன்னு பத்த வெச்சுட்டு போயிட்டாரு. எங்க பாட்டி எப்பவுமே இது மாதிரி கம்ப்ளயின்ட் வந்தா என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டாங்க. எங்களை செல்லமா வளக்கறாங்கன்னு கொஞ்சம் ஆங்காரம் ஜாஸ்தி. எங்கம்மாவ நல்லா அடிக்க சொல்லித் தூண்டி விடுவாங்க. அன்னிக்கும் அப்படிதான் தூண்டி விடவே, மறுநாள் ஃபங்க்ஷன் வேலைல மும்முரமா இருந்த எங்க அம்மா, கோவத்துல ஒரு தடி எடுத்து எங்களை வெளுவெளுன்னு வெளுத்துட்டாங்க. அது நல்ல வார்னிஷ் போட்ட தடி. முனைல பாம்பு மூஞ்சி. அதுக்குப் பேரே பாம்புத் தடிதான். கண்ணுமண்ணு தெரியாம அடிச்சதுல என் வலதுகைல (5 ஆவது படிக்கும்போது ஒடஞ்சு Z மாதிரி ஆச்சே, அதே கை) நல்ல அடிபட்டு ஆரஞ்சு சைஸுக்கு வீங்கிடுச்சு. பூசை போட்டு எல்லாரையும் படுக்க சொல்லிட்டாங்க. அப்பறம் மதியம் எங்க அம்மா வந்து சாப்பிடக் கூப்பிட்டாங்க. நான் வரமாட்டேன், நீ ஏன் என்ன அடிச்சே, நாங்க அப்படி சொல்லலைன்னு சொன்னேன். எங்க அம்மா வீங்கியிருந்த என் கையைப் புடிச்சு விட்டு அழுதாங்க. அவங்க அழுகையைப் பார்த்தவுடனே என் புடிவாதம் எல்லாம் போயிடுச்சு. அம்மா அழாதேம்மா, எனக்கு வலிக்கலன்னு அவங்களை ஆறுதல் செஞ்சு சாப்பிட்டேன்.

மறுநாள் பூணல் போட்டாங்க, வீடு நெறய சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, எங்க ஃபிரெண்ட்ஸ்னு சரியான கூட்டம்.  பிரும்மோபதேசம் செஞ்சு வெச்சாங்க. அதை விட பெருசுங்க எல்லாரும், "அடேய் பசங்களா, தினமும் 3 தடவை சந்தியாவந்தனம் பண்ணனும், 108 தடவை காயத்ரி மந்திரம் சொல்லணும்னு செஞ்ச ஒபதேசம்தான் பெரிய ஒபதேசம்.

சந்தியாவந்தனம் சொல்லிக் கொடுக்க எங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கற அய்யங்கார் மாமா முன்வந்தாரு. அவர் எல்லாத்துலயும் எக்ஸ்பர்ட். அன்னிக்கு சாயங்காலமே ஆரம்பிச்சுட்டாரு. நம்மளே செஞ்சா 20 நிமிஷம்தான். ஆனா மொதோ மொதல்ல செய்யறதால சொல்லிக்கொடுக்க ஒண்ணரை மணி நேரம் ஆச்சு. அந்த சின்னப் பையனுக்கு தூக்கம் கண்ணை சொக்கிச்சு, பாவம். அதை பாத்த எங்க சித்தப்பாவுக்கு அவமானமா போயிடுச்சாம், தன் பையன் மந்திரம் சொல்லாம தூங்கி வழியறான்னு. (என்னமோ இவர் டெய்லி செஞ்சா மாதிரி)  துர்வாச முனி, சரியான கோவத்துல பந்தல்ல கட்டியிருந்த வாழைமரத்திலேர்ந்து மட்டையை உரிச்சு அவனை விளாசு விளாசுன்னு விளாசிட்டாரு. பாவம், அவன் அடி தாங்காம "பூர்புவஸ்ஸுவஹ: தத் ஸ விதுர் வரேண்யம்" னு சொல்லிட்டே அங்கியும்  ஓடினதப் பாக்க எங்களுக்கு பரிதாபமா இருந்துச்சு.. அவனை இழுத்து வந்து ஒத்தக் கையால புடிச்சுக்கிட்டு நல்லா பின்னி எடுத்துட்டாரு. எங்க அப்பா வந்து சொன்னப்பறம்தான் நிறுத்தினார். எங்களுக்கு ரொம்ப பாவமா இருந்துச்சி. 

ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு எல்லாம் அவங்க அவங்க ஊர் போய் சேந்தாங்க. எங்க அப்பா லீவுல சவுத்ல இருக்கற கோவில் எல்லாம் போய் வரலாம்னு முடிவு பண்ணாரு. (ஒன்லி  தமிழ் நாடு & கேரளா). ஒரு அம்பாஸடர் கார் புக் பண்ணார். எங்களுக்கு ஒரே சந்தோஷம். மொதோ தடவையா கார்  சவாரி,அதுவும் ஊர் ஊரா. 

கெளம்பற நாள் வந்தது. காலைல ஒரு SHOCKING NEWS. பெட்ரோல் வெல 85 காசுலேர்ந்து 1.15 ஆயிடுச்சு. (அப்ப அது பெரிய விஷயம். பட்ஜெட்ல சரி அடி). என்ன செய்ய, வந்துதானே செட்டில் செய்யப் போறோம்னு கெளம்பியாச்சு. நாங்க பசங்க மூணு பேரு, எங்க அப்பாஅம்மா, பாட்டி, எதிர்வீட்டு மாமி ஒருத்தங்க, அவங்களுக்கு யாரும் கெடையாது. எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. ஏழு பேர் + ட்ரைவர், ஒரு அம்பாஸடர்ல, இதுல அந்த மாமி கொஞ்சம் தாட்டியானவங்க வேற. எப்படித்தான் போயிட்டு வந்தோமோ, ஒரு வாரம் டூர்! டிக்கில ஒரு பம்ப் ஸ்டவ், தேவையான அரிசி, ரவை, பருப்பு வகைகள், போடு வகைகள் னு சமைக்க தேவையான சாமான்கள். (எனக்கு நாங்க போன கோயில்கள் முழுக்க நினைவில்லை, நெனைவு இருக்கறது மட்டும் சொல்றேன்.)

முதல்ல போனது குருவாயூர். எங்க அப்பாவுக்கு குருவாயூரப்பன் மேல ரொம்ப பிரியம். அங்க எங்க அண்ணனுக்கு எடைக்கு எடை வெல்லம் தர்றதா வெகு நாள் வேண்டுதல். அதை நிறைவேத்தினோம். குருவாயூரப்பன் அழகா இருந்தாரு. நல்ல தரிசனம். அங்க ஒரு பிரசாதம் தந்தாங்க. சர்க்கரைப் பொடி. நல்ல இருந்துச்சி. கொஞ்சம்தான் கிடைச்சுது. தரிசனம் முடிச்சு தங்கியிருக்கற ரூம் வந்தோம். சமையல் எல்லாம் ரெடி ஆச்சு. நான் கொஞ்சம் தூங்கி எழுந்து வந்தேன், எல்லாம் தயாரா எடுத்து வெச்சிருந்தாங்க. ஒரு பாத்திரத்துல கோயில்ல தந்த அந்த சர்க்கரைப் பொடி பிரசாதம்! ஆஹா! லபக்குன்னு ஒரு பெரிய கட்டியை (எலுமிச்சம்பழம் அளவு) எடுத்து எல்லாரும் டேய் திங்காத திங்காதன்னு கத்தக் கத்த வாயில போட்டு விழுங்கிட்டேன். அப்பா! ஒரே கரிப்பு, ஒமட்டல் வந்திடுச்சு. டேபிள் சால்ட்டு! ரொம்ப நாள் என் அண்ணனும் அக்காவும் இதை சொல்லி சொல்லி கேலி செய்வாங்க.

அங்கேர்ந்து காலடி போனோம். ஆதி சங்கரர் அவதரிச்ச புண்ணிய பூமி. கோயில் போறதுக்கு முன்னாடி அங்க ஓடற ஆத்துல குளிச்சிட்டு போனோம். அன்னிக்குத்தான் எனக்குத் தெரியும் எங்க அப்பாவுக்கு நல்லா நீச்சல் தெரியும்னு. நல்லா ரொம்ப தூரம் நீந்தி போயி வந்தாரு. (ஆனா அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது, கத்துக்கிட்டப்ப ஸ்கூல் செவுத்துல மோதி முட்டில அடி, சீ மனுஷன் ஓட்டுவானா இதன்னு விட்டுட்டாரு)

அங்கிருந்து திருவனந்தபுரம்.  திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு வழி கேட்டா எல்லா மலையாளிகளும், வாயாலவோ , இல்ல கைநீட்டியோ பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. தலை ஆட்டிதான். தலையை கீழேருந்து மேலுக்கு ஆட்டி இடது பக்கம் ஓடிச்சா, நேர போயி இடது பக்கம் திரும்பணுமாம். தமிழன்னா அவ்வளோ அலட்சியம். எங்களுக்கு வழி கொஞ்சம் சிரமமாயிடுச்சி  இருந்தாலும் விசாரிச்சிட்டேதான் இருந்தோம். ஒருத்தர் தமிழ்ல பேசினார், பாலக்காடாம், நான், வழி காட்டேறேன்னு கார்ல ஏறி உக்காந்துட்டாரு.  (கடைசில பாத்தா அவரும் கோவிலுக்குத்தான் போறாரு, ஓசில கார் சவாரி) ஏற்கெனவே இட நெருக்கடி. ஏறி ஒக்காந்தவர் கோவிலோட அருமை பெருமைகளை சொல்லிட்டே வந்தாரு. திடீர்னு "வண்டி திரும்பட்டும்"னு வலது பக்கம் கையை நீட்ட ட்ரைவர் மூஞ்சில அடி. அதுல இவர் திரும்ப இடம் வந்தப்பறம்தான் சொல்றாரு. ட்ரைவர் ஒகேனக்கல், ஏற்காடுன்னு வண்டி ஒட்டி பழக்கப்பட்டவரு. அதுனால நல்லா வீலை ஒடிச்சி திருப்பினாரு. மறுபடியும் அவரோட கதையை ஆரம்பிச்சுட்டாரு. திடீர்னு வண்டி நிக்கட்டும்னாரு. சடன் பிரேக்தான். என்னன்னு பாத்தா கோவில் தாண்டி வந்துட்டோம். அவரு இறங்கிக்கிட்டாரு. நாங்க ரிவர்ஸ் எடுத்து கோவில் போயி வந்தோம். 

அங்கிருந்து திருச்சூர், கன்யாகுமரி, சுசீந்திரம் கோவில் எல்லாம் போனோம். எனக்கு கோவில்ல அவ்வளோ இன்டரஸ்ட் இல்ல, ஏன் ட்ராவல்லயே இன்டரஸ்ட் கிடையாது. ஆனா கன்னியாகுமாரி. சுசீந்திரம் கோவில் எல்லாம் நல்லா இருந்தது. கன்யாகுமாரில விவேகானந்தர் பாறைக்கு போட்ல போனது நல்ல இருந்துச்சு. அங்க தங்கி சூரிய அஸ்தமனம், மறுநாள் காலை சூரிய உதயம் எல்லாம் பாத்துட்டு தான் சுசீந்திரம் கிளம்பினோம். சுசீந்திரத்துல கோயில்ல நல்ல சிற்ப வேலைப்பாடுகள். யாளிங்கற சிங்கமுகம் கொண்ட ஒரு அதிசய விலங்கு. அப்பறம் சப்தஸ்வர தூண்கள். அங்க உள்ள ஏழு தூண்களைத் தட்டினால், சரிகமபதநி ஓசை கேட்கிறது. அவ்வளவு தொழில் நுட்பம்.

அங்கிருந்து மதுரை, அன்றிரவு மீனாட்சி கோவிலுக்கு போய் வரும்போது எங்க அப்பாவுக்கு லோ பிபி. வர்ற வழியெல்லாம் சத்தம் போட்டுக்கிட்டே வந்தார். அப்பறம் ரூம் வந்து ரெஸ்ட் எடுத்தவுடன் பரவாயில்லை, மறுநாள் பழமுதிர்சோலை போயிட்டு வந்தோம். ரொம்ப நல்லா  இருந்தது. ஆனா எனக்குதான் எப்படா ஊர் வந்து சேருவோம்னு ஆச்சு. மதுரைலேர்ந்து திருச்சி வழியா ஊர் வந்து சேந்தோம். இன்னும் சில கோயில்கள் நினைவில் இல்லை. ஊர் வந்து வீட்டுக்குள் நுழைந்ததும்தான் "அப்பாடா" என்றிருந்தது.

"சொர்கமே என்றாலும், அது தருமபுரி போலாகுமா?"

தொடரும்
.
பால் குடி டேஸ் - 9. PALKUDI DAYS.
தருமபுரி நினைவுகள்.

நாயும் நானும் யாராகியரோ!

ஆறாம் வகுப்பு லீவு. புது ஃபிரெண்ட்ஸ் கிடைச்சாங்க. எங்க ஹவுஸ் ஓனர் ஒரு செட்டியாரம்மா. அவங்க கணவர் எம் ஜி  நடேச செட்டியார்னு அந்த காலத்துல ஜமீன்தார். காங்கிரஸ் எம் எல் ஏவா இருந்தவர். அவருக்கு நிறைய சொத்து ஜில்லா பூரா. அதெல்லாம் என் அப்பாதான் கவனிச்சிட்டிருந்தார். அவருக்கு ரெண்டு பசங்க. ஜி என் தாஸ், ஜி என் குப்தா, ன்னு. சுதந்திரப் போராட்ட வீரர்ங்கிறதால இப்படி பேர் வெச்சார். தாஸ் தஞ்சாவூர்ல இருந்தார். அவரோட பசங்கதான் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்தாங்க. மீனா அக்கா, ரத்தினவேலு என்ற பாபு, உமா, சுமதி, சிக்கி என்ற பாலாஜின்னு செம செட்டு. அங்க அவங்களுக்கு விளையாட யாரும் இல்லை. அதுனால எங்க வீட்டுக்கு வந்து  விளையாட  கூட்டிட்டு போயிடுவாங்க. காலைல அவங்க 8 மணிக்கெல்லாம் டிஃபன் சாப்பிட்டுடுவாங்க, அதுனால உடனேயே சிக்கி எங்க வீட்டுக்கு வந்து "பிடி வாரண்டு" வந்திருக்கேன்னு சொல்லி வெய்ட் செய்வான் எங்களை கூட்டிட்டு போக.  நாங்க 9 மணிக்கு சாப்பிட்டவுடன் அவங்க வீட்டுக்கு போயிடுவோம் விளையாட. அங்க நெறைய காலி இடம் இருக்கும், நெறைய மரம் செடி கொடி  கூட. அப்பறம் ஒரு பெரிய கிணறு பாசனம் செய்ய. அது மூடிட்டாங்க. அந்த இடமெல்லாம் முதல்ல வயலா இருந்ததாம்.

நாங்க கிரிக்கெட் விளையாடுவோம். முதல்ல அவங்களும் நான், எங்க அண்ணன் மட்டும் விளையாடுவோம், ரெண்டு மூணு நாள்ல என்னோட ஃபிரெண்ட்ஸும் விளையாட வந்துட்டாங்க. ஒரே குஷிதான். அங்கேதான் ராணி அப்படிங்கிற ஒரு நாய் - அவங்க வளத்தது. ஏற்கெனவே எனக்கு அஷ்டமத்துல பைரவர் பார்வை. நம்ம ராசி கூட்டத்துல நம்மளை மட்டும் பைரவர் தனியா அடையாளம் கண்டுக்குவார். அந்த நாய் சங்கிலில கட்டிப் போட்டிருக்கும். அது ஒரு ரெண்டு மூணு நாள் என்னை கவனிச்சுது. நான் வேகமாக பந்து எறிவேன். (LIVE WIRE என்று எனக்குப் பட்ட பெயர்) ஓடிவந்து வேகமாக அதோட எஜமானர் வீட்டு பசங்க மேல பந்து எரியறேன்னு நெனச்சுடுச்சு போல. அதற்கு என் மேல கோபம் உருவாகிடுச்சு. பௌலிங் போடாத சமயங்களில் என்ன லாங்ல  நிறுத்திடுவாங்க, கிணத்துல பந்து விழாம கேட்ச் புடிக்க. அப்ப அது ஆக்ரோஷமா சங்கிலிய இழுத்துக்கிட்டு குரைக்கும் என்னப்  பாத்து. ஒருநாள் சங்கிலிய அறுத்துக்கிட்டு வந்து அப்படியே என்மமேல பாஞ்சு என்னை கீழே தள்ளிவிட்டு என் நெஞ்சுல முன்னங்கால் ரெண்டையும் வெச்சு நின்னுக்கிச்சு. எல்லாரும் வந்து கஷ்டப்பட்டு அந்த நாயை இழுத்துக்கிட்டு போயி கட்டினாங்க. இது மாதிரி ரெண்டு மூணு தடவை ஆயிடுச்சி. அதுனால நான் அதை ஃபிரெண்டு புடிச்சிக்கலாம்னு வீட்டுல எனக்கு குடுக்கறதில கொஞ்சம் ஜோபில வெச்சிக்கிட்டு அதுக்கு போடுவேன். அதெல்லாம் தின்னுட்டு மறுபடியும் என்ன பார்த்து ஆக்ரோஷமா குரைக்கும். எனக்கு ஒரே கடுப்பு. (நாய் கூட லஞ்சம் வாங்கிக்கிட்டு ஏமாத்திடுதே. எம் எல் ஏ வீட்டு நாய் இல்லியா!)

இதுக்கு ஒரு பாடம் கத்துத் தரணும்னு நெனைச்சேன். ஒரு ஐடியா கிடைச்சது. தீபாவளி வந்தது நான் நிறைய  டபுள் சரம் யானை வெடி எடுத்துட்டு அவங்க வீட்டுக்கு போனேன். (நாங்க எல்லாம் பட்டாசை கைலயே கொளுத்திப் போடற வீரங்க. அணுகுண்டையே கைல பத்த வெச்சு வானத்துல வீசி எறிவோம். அது உயரக்க போய் வெடிக்கறப்ப அதுல ஒரு ஆனந்தம்) ஒவ்வொரு சரமா பத்த வெச்சு அது மேல வீசி எறிஞ்சேன். அது பயந்து அலறி சங்கிலியை அறுக்க முடியாம அங்கேயும் இங்கேயும் பாஞ்சு தவிச்சது. அப்படியும் என் வெறி அடங்கல. மறுபடியும் வீட்டுக்கு வந்து இந்த முறை ஒரு பாக்ஸ் அணுகுண்டு எடுத்துக்கிட்டு அத்தனையையும் பத்த  வெச்சு அது கிட்ட வீசி எறிஞ்சேன். அரண்டு போன அது சங்கிலியை அறுத்துக்கிட்டு கொஞ்ச தூரத்துல இருக்கற அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு ஓடிடுச்சி. திருப்பி அதை அவங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர ரொம்ப கஷ்டப் பட்டாங்க . அதுக்கப்பறம் அது என்னப் பாத்தாலே ஓட ஆரம்பிச்சிடுச்சு.

நாய்க்கும் நமக்கும் இருக்கற விரோதம் 11 ஆம் வகுப்பு வரை தொடர்ந்துச்சி. நான் டியூஷன் போயிட்டு வர்றப்பெல்லாம் கும்பலா நாய்ங்க என் சைக்கிளைத் தொரத்தும். இதுங்களுக்கும் பாடம் கத்துத் தரணும்னு, கிரிக்கெட் ஸ்டம்ப் கைல எடுத்துப்  போக ஆரம்பிச்சேன். அதுங்க தொரத்திச்சுன்னா சைக்கிளை நிறுத்தி ஸ்டம்பால அதுங்கள விளாசிடுவேன். அதுவுமில்லாம மத்தியானமா நெறைய கல் ஒரு பைலை போட்டுக்கிட்டு போயி அதுங்கள தொரத்தி தொரத்தி அடிப்பேன்.  நம்ம குறி எப்பவுமே தப்பினதில்ல. அதுனால ஒரு வழியா நாய்த் தொந்தரவு விட்டுச்சு என்ன.
No automatic alt text available.

அப்படியே இப்ப 1983க்கு வருவோம். நான் டேபிள் டென்னிஸ் விளையாட க்ளப்க்கு டெய்லி போவேன்,  கிழட்டு நாய் ஒண்ணு பரிதாபமா சுத்திட்டிருக்கும். சாயங்காலம் பெரும்பாலும் அங்க டீ சாப்பிடுவோம், சைக்கிள்ல கொண்டு வருவாங்க. அப்ப நான் அந்த நாய்க்கு பிஸ்கட் வாங்கிப் போடுவேன்.   சில சமயம் பால் வாங்கி ஒரு கிண்ணத்துல வெப்பேன். அது சாப்பிட்டு போயிடும். ஒரு நாள் சாயங்காலம் நான் கொஞ்சம் சீக்கிரமே போனேன். யாரும் வரல. அதுனால அங்க இருக்கற டென்னிஸ் கோர்ட் சிமெண்ட் பெஞ்சுல உக்காந்திருந்தேன். அப்ப அந்த நாய் என்கிட்டே வந்து என்னையே உத்துப் பார்த்துகிட்டு இருந்துச்சு. அது என்னவோ சொல்ல  வராப்ல தோணிச்சு எனக்கு. நானும்  கவனிச்சேன். அப்பத்தான் பாத்தேன் அதோட ஒரு கண்ண சுத்தி பிரௌனா ஒரு தழும்பு மாதிரி இருந்தது. அப்பதான் புரிஞ்சுது அது சொல்ல வந்தது "நான்தான் ராணி"ன்னு.

என்ன ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்த நாய் அது. செட்டியாரம்மா இறந்து சொத்தெல்லாம் பிரிச்சப்பறம் இந்த நாயை  அம்போன்னு விட்டிருக்காங்க. ரொம்பவே பாதிச்சிடுச்சி  இந்த நிகழ்ச்சி எனக்கு. 83 ல நாங்க  சென்னை வந்துட்டோம். நான் க்ளப் வாட்ச்மேன்கிட்ட கொஞ்சம் பணம் குடுத்து டெய்லி  எதாவது வாங்கிப் போட சொன்னேன். அவரும் செஞ்சார் பாவம் அவர் செலவிலேயே (நான் குடுத்த பணத்தை ஒரு வாரத்திலேயே காலி பண்ணிட்டாரு மனுஷன் ஃ புல்லா) ஒவ்வொரு வருஷமும் ஊருக்கு போறப்ப க்ளப்புக்கு போவேன், வாட்ச்மேனை கேப்பேன். 3 மாசத்துல அது செத்துப் போச்சாம். அவர் அதை எங்க கிளப்பிலேயே ஒரு  மரத்தடில அடக்கம் செஞ்சதா சொன்னாரு (அதுக்கு ஒரு அமௌன்ட்  வாங்கிட்டாரு,அது வேற விஷயம்)

இதுனாலயே எனக்கு வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கறதுல விருப்பம் இல்ல.

 அடுத்த வாரம் பூணல் போட்ட கதை:

தொடரும்.

Monday, 26 June 2017

பால் குடி டேஸ் - 8. (PAALKUDI DAYS)
தருமபுரி நினைவுகள்.

ஆறாம் வகுப்பு ஹைஸ்கூலில் சேர எழுத்துத் தேர்வு, ஸ்கூல் மைதானத்துல வெச்சாங்க. ஒரு 250 பேர் எழுதினாங்க. "ஏழைக்கிழவன், வியாழக்கிழமை வாழைப்பழம் தின்றான்" என்பது போன்று இன்னும் சில வாக்கியங்கள், இது மட்டும் ஞாபகத்துல இருக்கு. எங்க ஊர் வழக்கப்படி நெறய பசங்க வாயப்பயம்னுதான் எழுதினாங்க.பேருக்குத்தான் பரீட்சை. அத்தனை போரையும் சேத்துக்கிட்டாங்க.

6 ஆம் க்ளாஸ் என் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. இங்குதான் என்னோடு கடைசிவரை ஃபிரெண்டா இருக்கற உயிர்நண்பர்கள், ஜீவா என்கிற வெங்கட்ராமன், ரவிச்சந்திரன், மோகன்ராஜ், செல்வம், சபாநாயகம் எல்லாம் அறிமுகம் ஆனாங்க. இன்னும் சிலர், தொடர்ந்து 7ஆவது, 8 ஆவது, 10ஆவது  க்ளாஸ்ல  அறிமுகம் ஆகி இன்னிவரை ஃபிரெண்டா இருக்காங்க. . அது இல்லாம  இன்னும் நிறைய பேர் இருக்காங்க  அவங்க எல்லாம் டச்ல  இல்லை. 2010 ஆம் ஆண்டு 65 நண்பர்களைத் திரட்டி பள்ளியில் 15 ஆசிரியர்களை கௌரவித்தோம். மறக்க முடியாத நிகழ்ச்சி அது. (ஒரு சோகம் என்னன்னா, அது வரை எங்க கூடப் படிச்ச பொண்ணுங்க எல்லாம் கேர்ள்ஸ் ஹைஸ்கூல், நாங்க பாய்ஸ் ஹைஸ்கூல்னு தனித் தனியா போயிட்டோம். அவங்க ஸ்கூல் கிழக்கால, எங்க ஸ்கூல் மேக்கால) ஒண்ணாவதுலேர்ந்து படிச்ச பாய்சும் வேற பிரான்ச் போயிட்டாங்க, இங்க எல்லாம் புது ஃபிரெண்ட்ஸ்தான்.

பாடத்தோட பேர் எல்லாம் மாறிப் போச்சு.. இயற்கை, விஞ்ஞானம் ஆச்சு., சரித்திரம் பூகோளம் , வரலாறு புவியியல் ஆச்சு. .  பாடம் எல்லாம் ஆரம்பிச்சாங்க.. பொஸ்தகம் என்ன என்ன வாங்கணும்னு  வாத்தியார்ங்க லிஸ்ட் தந்தாங்க. நான் வீட்டுல அப்பா கிட்ட சொன்னேன், எல்லாம் ரெடி பார், பைண்ட் செஞ்சு வெச்சிருக்கேன்னு சொன்னார், சந்தோஷத்தோட ஓடிப் போய் பாத்தா, V புத்தன், V குமணன். S வத்சலா, V பாலன், S அனந்தகிருஷ்ணன்னு வரிசையா பேர் எழுதி அடிச்சி, அதுக்கு கீழ S V ரமணின்னு எழுதியிருந்தார் எங்க அப்பா. அங்க அப்பாவோட நண்பர் பசங்க புத்தன், குமணன் படிச்சப்பறம், எங்க அக்கா வஸ்தலாவுக்கு வந்து அப்பறம் மறுபடி அவங்க வீட்டுல பாலனுக்கு போயி, எங்க அண்ணனுக்கு வந்து கடைசில எனக்கு. புது புஸ்தகம் இல்லையான்னு கேட்டப்ப இதுதான்னு சொல்லிட்டாரு எங்க அப்பா (அவங்க வீட்டுல பசங்க பொஸ்தகத்தை தொடவே இல்லை போல பேர் எழுதினப்பறம்). SSLC வரை இதே கதைதான். SSLC ல நான் புது புஸ்தகம் தந்தாதான் படிப்பேன்னு பிடிவாதம் புடிச்சதால எனக்கு புது புஸ்தகம். அதுவும் இல்லாம நான் விருப்பப்பாடமா பொறியியல் எடுத்திருந்தேன். அதனால புஸ்தகம் புதுசு வாங்க வேண்டியதாப் போச்சு.

சரி ஆறாவதுக்கு வருவோம். கணக்குல பின்னம் ஆரம்பிச்சாங்க, அப்பறம் S V சேகர் டிராமால வர்ற  மாதிரி 8 பேர் ஒரு வேலையை 7 நாள் செஞ்சான்னு வேற கணக்கு. நம்ம அபீட். விஞ்ஞானம் (சயன்ஸ்னு வெச்சுப்போம்) ஹிஸ்டரி ஜியாகிரபி வேற ஒரேயடியா ஜாஸ்தி செஞ்சுட்டாங்க. முதல் மாசம் டெஸ்ட். முடிஞ்சு திருத்தின பேப்பர் எல்லாம் குடுத்தாங்க.சீதாராமன் வாத்தியார்தான், கணக்கு, சயன்ஸ், ஹிஸ்டரி ஜியாகிரபி பேப்பர் எல்லாம் தந்தாரு. என்னோட முறை வந்தது. சயன்ஸ் 0, ஹிஸ்டரி ஜியாகிரபி 0, கணக்கு 7 அப்படின்னு சொல்லி, 007 ன்னு பேர் வெச்சாரு (இப்ப தெரியுதா நம்ம ஜேம்ஸ் பாண்ட் பேர் ரகசியம்) இங்கிலிஷ் தமிழ் எப்பவுமே 70க்கு மேலதான்.

இப்படியே கால் பரீட்சை வந்துச்சி. சயன்ஸ், ஹிஸ்டரி ஜியாகிரபி கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் மார்க் வாங்க ஆரம்பிச்சிட்டேன். கணக்குதான் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும் 29 தான் வாங்க முடிஞ்சுது. (இமாலய சாதனை). எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருந்த அய்யங்கார் மாமா என்னைக் கூப்பிட்டு என்னோட மார்க் எல்லாம் கேட்டார். இங்கிலிஷ் 75 ன்ன உடனே ஆஹா, பேஷ் பேஷ், அப்படின்னாரு. தமிழ் 68, பரவாயில்லைன்னாரு, சயன்ஸ், ஹிஸ்டரி ஜியாகிரபி தட்டுத் தடுமாறி 45 பக்கம், அதுக்கு ஒன்னும் சொல்லலை, மேத்ஸ் எவ்வளோன்னு கேட்டார், 29 மாமான்னு சொன்னேன், ஏன்பா, இங்கிலிஷ் இவ்வளோ வாங்கறப்ப மேத்ஸ் நல்லா வரணுமேன்னு சொன்னாரு. நான் மாமா, மேத்ஸ் எவ்வளோ படிச்சாலும் புரியலன்னு சொன்னேன். அவரு உடனே நாளைலேர்ந்து காலைல நீ என்கிட்டே வா, நான் உனக்கு சொல்லித் தரேன், நீ அரைப் பரிட்சைல 92 வாங்குவேன்னாரு, சொன்னா மாதிரியே 92. அதுக்கப்பறம் 11ஆவது வரை க்ளாஸ் ஃபர்ஸ்ட் நான்தான். நெறைய தடவை சென்டம் வேற  இதுல அவருக்கு பார்வை மங்கல். உருவம் மட்டும்தான் பிசுபிசுன்னு தெரியும், தரைல சாக்பீஸ் வெச்சுதான் கணக்கு போடுவாரு.

சரி படிப்பை ஒதுக்கி வைப்போம். எல்லாருமே கொஞ்சம் விளையாட்டுப் பசங்கதான், ரவிச்சந்திரனைத் தவிர. அதுவும் நானும் மோகன்ராஜும் நல்ல செட்டு. கட்டுரை நோட்டு, டெஸ்ட் பேப்பர் எல்லாம் வாத்தியார் கட்டுக் கட்டி அவர் ரூம்ல வெக்க சொல்லுவாரு. நானும் அவனும் நல்ல பிள்ளையாய் போயிட்டு வெச்சிட்டு வரும்போது ஸ்கூல் மணியை 5 முறை அடிச்சிட்டு ஓடி வந்துடுவோம். 5 முறை அடிச்சா ஸ்கூல் அன்னிக்கு அரைநாள்னு அர்த்தம். புள்ளைங்க எல்லாம் ஓன்னு வெளில ஓடிடுவாங்க. யாரு அடிச்சாங்கன்னு கண்டு பிடிக்க முடியல கடைசி வரைல.

இந்த மோகன்ராஜ் இருக்கானே வினோதமான சந்தேகம் எல்லாம் வரும். வட்டத்தின் பரப்பளவை கண்டு பிடிக்கிற கணக்குல கயிறுல கட்டியிருக்கற மாடு எவ்வளவு புல் மேயும் சுத்தி வந்துன்னு தான் கணக்கு. அதுக்கு சூத்திரம் போட்டு விடை சொல்லணும். இவன் வாத்தியார் போர்ட்ல கணக்கு போட்டு விடை போட்டவுடனே, "சார், மாடு கொஞ்சம் கழுத்தை நீட்டி மேயுமே, அதை எப்படி சார் கணக்கு வெச்சுக்கறது?"ன்னு கேப்பான். அதுக்கு கைல பிரம்பால் 6 அடி கிடைக்கும். அதெல்லாம் டோன்ட் கேர்.

PT க்ளாஸ் எப்பவுமே லாஸ்ட் பீரியட்தான், எல்லாரும் கும்பலா ஃபுட்பால் வெளையாடனும், அதுதான் எங்களுக்கு PT பெரும்பாலும். நாங்க பாலோட ஓடிக்கிட்டே கிரௌண்ட் கடைசி வந்தவுடனே, முட்டிக்கால் அளவு இருக்கற செவுத்த தாண்டி பக்கத்துல இருக்கற மோகன் வீட்டுக்கு ஓடிப்போயிடுவோம். க்ளாஸ் முடிஞ்சவுடனே, மத்த பசங்க எங்க பைய எடுத்துக்கிட்டு சட்டையையும்தான், வந்து தருவாங்க.
Image may contain: drawing

மோகன்ராஜ் வீடு ஸ்கூல் காம்பௌண்ட் ஒட்டி இருந்தது. அப்ப எல்லாம் எங்க ஊர்ல நல்லாவே மழை பெய்யும் (நாங்க அங்க இருந்ததால) மழை பெஞ்சா லீவு விட்டுடுங்க. இந்த மோகன்ராஜ், சிறு தூத்தல் போட்டாலே, "இன்று மழையின் காரணமாக பள்ளி விடுமுறை" தலைமை ஆசிரியர் - அப்படின்னு ஒரு ஸ்லேட்ல சாக்பீஸால எழுதி கேட்ல தொங்க விட்டுடுவான். வர பசங்க எல்லாம் அதைப் பாத்துட்டு திரும்பி ஓடிடுவாங்க. வேற வழியில்லாம லீவு விட்டுடுவாங்க.

வாத்தியார்ங்களுக்கு பேர் வெக்கறதெல்லாம் அப்பதான் ஆரம்பிச்சுது. ஹெட்மாஸ்டர் பீடி குடிப்பார். ஒரு தடவை குடிச்சிட்டு வீசி எரிஞ்சு பீடியை, எடுத்து கடைசி வரை இழுத்துட்டு மறுபடி வீசியெறிஞ்சாரு. உடனே அவருக்கு துண்டு பீடி ன்னு பேர் வெச்சுட்டோம்.

எங்க க்ளாஸ்ல மேத்ஸ் இங்கிலீஷ் ரெண்டுலயும் மொத மார்க் வாங்கறவங்கதான் லீடர், அது மட்டுமில்லாம அவங்க கையெழுத்து அழகா இருக்கணும். நமக்கு ஒரு தடவை அரைப் பரீட்சை முடிஞ்சு சான்ஸ் கிடைச்சது. லீடர்தான் ஒவ்வொரு மாசமும் அட்டெண்டன்ஸ்ல பேர் எழுதணும். அப்படி நான் எழுதறப்ப என் முழுப் பேர் S வெங்கட்ரமணின்னு எழுதிட்டேன், டீச்சர் கேட்டதுக்கு அதுதான் டீச்சர்  என் முழுப் பேர்னு சொன்னேன். அதுலேர்ந்து என் பேர் வெங்கட்ரமணி ஆயிடுச்சி. இதோட விளைவு 9 ஆவது படிக்கறப்ப தான் தெரிஞ்சுது.

தொடரும்.

V