Monday, 6 November 2017


பால்குடி டேஸ் 17 - தருமபுரி நினைவுகள்.
இறுதிப் பகுதி.

10 ஆவது பாஸ் பண்ணி 11 ஆவது போயாச்சு. இந்த வருஷம் கொஞ்சம் சீரியஸா படிக்க வேண்டிய வருஷம். அதுனால ஊர் சுத்தறத கொஞ்சம் கொறைச்சுட்டோம் நாங்களாவே. ஆனாலும் க்ளாஸ்ல கலாட்டா செய்யறது நிக்கல. எங்க இன்ஜினியரிங் சைன்ஸ் வாத்தியார் பேர் ரங்கநாதன். (கு.ரங்கநாதன் இல்ல, இன்னொரு ரங்கநாதன்) அவர் அப்பறம்னு சொல்றதுக்கு பதில் பிற்பாடுன்னு தான் சொல்லுவாரு. அதுனால அவருக்கு பிற்பாடுன்னே பேரு. நாங்களும் அவர் ஏதாவது கேட்டா பிற்பாடுன்னே சொல்லுவோம். ஒருதடவை அவருக்கு டவுட் வந்துடுச்சு. நீங்கள்லாம் என்னை கிண்டல் செய்ய பிற்பாடுன்னு சொல்றீங்களா இல்ல நெஜமாவே அப்படிதான் சொல்றீங்களானு கேட்டாரு. மோஹன்னு எங்க செட் பையன் ஒருத்தன், இல்ல ஐயா, தமிழ் ஐயா அப்படிதான் சொல்ல சொல்லிருக்காரு அதான்னு சொன்னான். ஏதோ அரைகுறையா நம்பிட்டாரு.

அவரு வந்த ஒடனே "எல்லாரும் ஓம் ஒர்க் (அப்படிதான் சொல்வாரு) எடுத்து வெளில வைன்னு சொல்வாரு. பிற்பாடு "ஓம் ஒர்க்" செய்யாதவன் எல்லாம் எந்திரிச்சி நில்லு அப்படிம்பாரு (அவரோட தமிழ் அப்படிதான்) பிற்பாடு "எந்திரிச்சி நின்னவன் எல்லாம் இங்க வா"ன்னு கூப்பிடுவார். ஒரு பய போக மாட்டான், அவருக்கு கிட்டப் பார்வை. எதையும் உத்துப் பாத்தாதான் தெரியும். கண்ணுக்கிட்ட வெச்சு உத்துப் பாப்பாரு. அதுனால பின்னாடி நிக்கற பையன் எல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க. சில பேரு வேணும்னே எழுந்து நிப்பாங்க, இவரு என்ன செஞ்சுடப் போறாருன்னு. யாரும் வரலைன்னதும் "உப்போ (இப்ப) நீ இங்க வரியா, இல்ல நான் அங்க வரட்டுமா"ன்னு கேப்பாரு. அவரோட பேச்சு இப்படியேதான் இருக்கும் எல்லாத்துக்கும். அதுனால பையன்களும் அப்படியே பேசுவானுக. நான் கொஞ்சம் மிமிக்ரி செய்வேன். அதுனால என்ன கடைசி பெஞ்சுல கூப்பிட்டு வெச்சுவாங்க இவர் பீரிட்ல (அப்படிதான் அப்ப சொல்வோம் யுவர் ஆனர், இன்னும் சில பேர் பிரீடுன்னு சொல்வாங்க) அவர் வந்து அவரோட வழக்கமான கேள்விங்கள முடிச்சவுடனே நான் அவர் கொரல்ல ஆரம்பிப்பேன். "யூனிஃபார்ம் போடாதவன்லாம் எந்திரி" னு, ஒரு 4, 5 பேரு எந்திரிப்பாங்க. "எல்லாம் இங்க வா"ன்னு சொல்வேன் பிற்பாடு. அதுக்கும் பிற்பாடு "உப்போ நீ யூனிஃபார்ம் போட்டுனு வரியா இல்ல நான் போட்டுனு வரட்டா"ன்னு நான் சொன்ன ஒடனே க்ளாஸே "கொல்"லுனு சிரிக்கும். இவருக்கு எவன் சொன்னான்னு கண்டு படிக்க முடியாது இவரோட ஷார்ட் சைட்னால.

அப்பல்லாம் ஸ்கூல் ஃபைனலா இருந்தா கூட லேப் கிடையாது. சும்மா பிப்பெட், பியூரெட் எல்லாம் எடுத்துட்டு வந்து ஒரு நாள் டெமான்ஸ்ட்ரேட் செய்வாங்க, அதோட சரி. இப்படித்தான் பியூரெட் எடுத்து வந்து அவர் டெமான்ஸ்ட்ரேட் செஞ்சாரு ஒரு வாட்டி. அதுல ஸல்யூஷன் எந்த ரீடிங்க்ல இருக்குன்னு அவரால கரெக்ட்டா பாக்க முடியல, அதுனால என்னைக் கேட்டாரு, நான் கரெக்ட்டா சொன்னேன். அவருக்கு நம்பிக்கை வரல. இன்னொருதனைக் கூப்பிட்டு கேட்டாரு, அவன் தப்பா சொன்னான். இன்னும் ரெண்டு பேரும் இப்படியே சொல்லவே, கடைசில அவரோட நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆல் ஃபிரெடை (ஆல் ஃபிரெடா அவன், ஆல் ஃபிராடு) அவன் சான்ஸே இல்லாத ஒரு ரீடிங் சொன்னான். அவர் நம்பிட்டாரு. எங்களுக்கெல்லாம் கடுப்பு. இப்படியே எங்க கடுப்பு ஏறிக்கிட்டே போச்சு.

ஏன்னா, அவரு ஆல் ஃபிரெடை நம்பித்தான் ஸ்பெஷல் டீ வாங்கியார சொல்லுவாரு. அவன் என்ன செய்வான்னா, சாதா டீ வாங்கி அதுல மாஸ்டர் டீ போட்டு வெளில கொட்டி வெச்சிருக்கற தூள எடுத்து இந்த டீல கலந்து வடிகட்டி எடுத்து வருவான். சார், "இன்னிக்கு டீ நல்லா இக்குதே"ன்னு சொல்வாரு, அதுக்கு அவன் "உங்களுக்காக ஸ்பெஷலா போட சொல்லி வாங்கி வந்தேன்னு சொல்லுவான். சாதா டீ 15 பைசா. ஸ்பெஷல் டீ 20 பைசா. மீதி 5 பைசாக்கு முறுக்கு, வடை இப்படின்னு வாங்கித் தின்னுட்டு வருவான். இது எங்களுக்கும் தெரியாது. நம்ம மோஹன் ஒரு நாள் அவன் கூட போயிட்டு இதை கண்டுக்கினு வந்துட்டான். எங்க கிட்ட சொல்லிட்டான். நாங்க சமயம் வரட்டும்னு வெயிட் பண்ணோம்.

ஒரு தடவ இவர் க்ளாஸு ரொம்ப போர் அடிக்கவே எல்லாம் சத்தம் போட்டு பேசிட்டிருந்தோம். இவர் கோவம் வந்து எல்லாசையும் நல்லா திட்டிட்டாரு. அதோட விட்டிருந்தா பரவாயில்ல. "ஆல் ஃபிரெட பாருங்க, எவ்வளோ நல்ல பையன், நீங்க எல்லாம் அவன மாதிரி இருக்கோணும்"னு சொன்னாரு, உடனே நம்ம மோகன் "எப்படி சார், ஸ்பெஷல் டீன்னு சொல்லி சாதா டீ வாங்கி உங்களை ஏமாத்தறானே, அப்படியா"ன்னு கேட்டான். வாத்தியாருக்கு, முகம் கறுத்துப் போச்சு. கோவத்துல வார்த்தை வரல. "ஆல் ஃபிரெடு, நீதான் நல்ல பையன்னு, நெனச்சேன், உப்பதான் தெரியுது நீ நல்ல பையன் இல்லன்னு" சொல்லிட்டு க்ளாஸ விட்டு வெளிய போயிட்டாரு. (அதுக்கப்பறமும் அவனேதான் டீ வாங்கி வந்ததும், அவன் டீ வெலைய அவனாகவே 25 பைசாவா ஏத்திட்டதும் வேற கத)

ஒரு நாள் இவரு "நாளைக்கி நான் பிரிஸம் மூலம் "ஒளி ஊடுருவல்" (REFRACTION OF LIGHT THROUGH PRISM) பாடம் நடத்தப் போறேன், அல்லாரும் ஆப்சென்ட் ஆகாம வந்துருங்கோ, பிற்பாடு நான் வரல, எனக்குத் தெரியலன்னு சொல்லாதீங்கோ"ன்னு சொன்னாரு. நாங்களும் இது புதுசா இருக்கேன்னு ஆர்வமா வந்தோம். இவருக்கு பீடி குடிக்கற பழக்கம் உண்டு. மிலிட்டரி கிரீன் கலர்ல ஒரு துணிப்பை எடுத்து வருவாரு. அதுலதான் அன்னிக்கு பாடம் நடத்த வேண்டிய புக், சாக்பீஸ், பீடிக்கட்டு எல்லாம் இருக்கும். வந்த ஒடனே மொதல்ல சாக்பீஸ் எடுத்து வெப்பாரு, அன்னிக்கு அவசரத்துல பீடிக் கட்ட எடுத்து வெச்சுட்டாரு. நாங்களும் கவனிக்கல, போர்டுல எதோ எழுதறதுக்கு சாக்பீஸ் எடுக்கறப்பதான் தெரிஞ்சுது அது பீடிக் கட்டுன்னு. அவசரத்துல அவரால அத பைக்குள்ள வெச்சுட்டு சாக்பீஸ எடுக்க முடியல. அப்பறம் என்ன ஒரே தமாஷ்தான். சரி சரி, பாடத்துக்கு வருவோம்னு சொல்லிட்டு பைலேர்ந்து பிரிஸம் எடுத்தாரு. ஒரு பையனை வெளில போயி நிக்க சொன்னாரு, ஒளி ஊடுருவி அவன் பிம்பம் அது வழியா அவர் பிரிஸம் பின்னாடி வெச்சிருக்கிற அட்டைல தெரியும்னு காமிக்கறது அவரோட ஐடியா, ஆனா போன ஆளு நம்ம மோகன்ராஜ். அவன் சும்மா நிக்காம அவர் பிரிஸத்த அட்ஜஸ்ட் செஞ்சிட்டிருக்கிறப்ப பரதநாட்டியம் எல்லாம் ஆடினான். இவருக்கு கடுப்பாயிடுச்சு. யாரும் வெளில நிக்க வேணாம், நான் ஒரு மெழுகுவத்தி கொளுத்தி டெமான்ஸ்ட்ரேட் செய்யறேன்னு சொல்லி பசங்க கிட்ட நெருப்புப் போட்டு கேட்டாரு. நம்ம மோகன் சார், உங்க பையிலேயே இருக்குமேன்னு சொன்ன ஒடனே மறுபடி குபீர் சிரிப்பு. சாருக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. சரின்னு மெழுகுவர்த்தியை கொளுத்தி டெமோன்ஸ்ட்ரேட் செய்ய ஆரம்பிச்சாரு. எல்லாரும் அவரை சுத்தி நின்னுக்கிட்டு குனிஞ்சி பாத்திட்டிருந்தாங்க. எங்க செட்ல ரவிச்சந்திரன்னு ஒருத்தன். ஸ்கூல்லயே பிரபலம். அவ்வளவு நல்லா படிப்பான். அவன் குனிஞ்சு பாத்திட்டிருந்தான். அவன் தலைக்கு மேல மோகன்ராஜ். அவன் லேசா ஒரு ஊது ஊதி மெழுகுவர்த்தியை அணைச்சுட்டான். வாத்தியார் ஏற்கெனவே கடுப்புல இருந்தாரு. ரவிச்சந்திரன்தான் மெழுவத்திக்கிட்ட நின்னிட்டிருந்ததால அவன்தான் அணைச்சுட்டான்னு ஓங்கி ஒரு அறை விட்டாரு அவன் கன்னத்துல. அவனுக்கு ஒரே கோவம், பின்னாடி வந்து நின்னுட்டான். அவன சமாதானப் படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.



இதெல்லாம் ஜெனெரலா ரெண்டு மூணு க்ளாஸ கூட்டி வெச்சு நடத்தினது. எங்களுக்கு எலெக்டிவ்ஸ் என்ஜினீரிங்க்ல சைன்ஸ் இன்ஜினியரிங் வாத்தியாரும் இவரேதான். நாங்க பதினாலு பேர்தான் அதுல. அதுனால இவர் ஒவ்வொருத்தரா வர சொல்லி நோட் வாங்கி கரெக்ஷன் செய்வாரு. நான் என் நோட்ட ரெடியா எடுத்து வெச்சிருந்தேன். நான் ரஃப் நோட்டுக்கு அந்த வருஷ புது டைரிதான் யூஸ் பண்ணுவேன். எதுக்கோ டைரிய எடுத்துப் பாத்தப்ப அதுல ஒரு மாச ஷீட் கிழிச்சிருந்தாங்க யாரோ, நான் பக்கத்துல இருந்த பையன் கிட்ட கேட்டப்ப அவன் ஜனார்தன் சிங்தான் கிழிச்சான்னு சொன்னான். அப்ப ஜனார்தன் சிங் சார் கிட்ட கையெழுத்து வாங்கிட்டிருந்தான். நான் கீழே குனிஞ்சு பாத்தேன், தரை அங்க இங்க பேர்ந்து சின்ன சின்ன செங்கலா இருந்துச்சு. நல்லா ஒரு எலுமிச்சம்பழம் அளவு இருக்கற கல்ல எடுத்து குறி பார்த்து அவன் மேல அடிச்சேன், அவன் கையெழுத்து வாங்கி நகந்துட்டான், கல் வாத்தியார் நெஞ்சுல விழுந்து நல்ல அடி பாவம். அவருக்கு படபடப்போட நல்ல கோவமும், யார் அடிச்சதுன்னு கேட்டப்ப யாரும் சொல்லல. ஆல்ஃபிரெட இன்னொரு கிளாஸ்லேர்ந்து குச்சி வாங்கி வர சொன்னாரு. அதுவரை குச்சியே யூஸ் பண்ணதில்ல, நல்ல மனுஷன் பாவம். அவன் வாங்கி வந்த ஒடனே அவனுக்குத்தான் மொதோ அடி , பழைய டீ வன்மத்தை தீத்துக்கிட்டாரு போல. வரிசையா ஒவ்வொருத்தரா அடிச்சிட்டே வந்தாரு. அப்பயும் ஒருத்தனும் சொல்ல யார் அடிச்சாங்கன்னு. நான்தான் 14ஆவதா ஒக்காந்திருந்தேன். எனக்கு முன்னாடி சுந்தர்னு ஒருத்தன், கிராமத்துப் பையன் வாட்ட சாட்டமா இருப்பான். அவனை அடிச்ச ஒடனே அவன் "சார் இவன்தான் அடிச்சான்"ன்னு என்ன கைய காமிச்சிட்டான், எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி, "யூ டூ ப்ரூட்டஸ்"னு அவன ஒரு பார்வ பாத்தேன். வாத்தியார் கோவம் உச்சிக்கு ஏற, என்ன அடிக்காம வெளில போடா க்ளாஸ விட்டுன்னு தொரத்திட்டாரு, அவர் அப்படி சொல்லவும், லஞ்சுக்கு ஸ்கூல் பெல் அடிக்கவும் சரியா இருந்தது. சந்தோஷமா வெளில வந்துட்டேன்.

என்னடா இந்த எபிசோட் பூரா பிற்பாடுதானான்னு பாக்கறீங்களா. ஸ்கூல் ஃபைனல்ங்கிறதால மத்த வாத்தியார் கிட்ட எல்லாம் வாலாட்ட முடியல. இவர்தான் மாட்டினார் கைப்புள்ள. அதான்.

ஃபைனல் எக்ஸாம் வந்தாச்சு. இங்கிலீஷ் மொதோ பேப்பர். நான் நல்லா எழுதிட்டேன் ஒண்ணேமுக்கால் மணி நேரத்துல முடிச்சிட்டேன், பேப்பரை நூல் கட்ட போனேன். சடார்னு பக்கத்துல இருந்த ஜனார்தன் சிங் என் பேப்பர இழுத்துக்கிட்டான். என்கிட்டே இப்ப ஒரு பேப்பர் கூட இல்ல. வாத்தியார் பாத்துட்டா இன்ன செய்யறதுன்னு இன்னும் ரெண்டு எக்ஸ்டரா ஷீட் வாங்கினேன், அதுல அவனுக்குத் தெரியாத கேள்விகள் ரெண்டுக்கு சுமாரா பதில் எழுதி நேரத்த கடத்தினேன். அவன் எழுதி முடிச்சப்பறம், எல்லாத்தையும் ஒழுங்கா பரிமாற்றம் செஞ்சு என்னோட பேப்பர நல்லா செக் செஞ்சு கொடுத்துட்டு வந்தேன், பலர சைலண்டா அலற விட்ட என்ன அன்னிக்கு சிங் நல்லா பதற வெச்சுட்டான். இதுதானோ "பிறர்கின்னா முற்பகல் செயின்?"

இத்துடன் பால்குடி டேஸ் முடிகிறது. ஏதாவது நினைவுக்கு வந்தால் அதை தனியாக எழுதுகிறேன். மற்றபடி தருமபுரி நினைவுகள் அதே தலைப்பிலேயே அவ்வப்போது தொடரும்.

பால்குடி டேஸ் முற்றும்.
பால்குடி டேஸ் - 16 தருமபுரி நினைவுகள்.

அப்பாடி! அப்படி இப்படி ஒழுங்கா படிச்சு பத்தாவது போயாச்சு. 10ஆவதுல எலெக்டிவ்ஸ் னு ஒரு சப்ஜெக்ட். விருப்பப் பாடம். கூடுதல் பாடமும். அது  ஒரு நல்ல ஸ்கீமா இருந்துச்சு. பின்னாடி காலேஜ்ல நம்ம எதுல படிக்கப் போறோமோ அதுக்கு ஸ்கூல்லயே நம்மள தயார் படுத்திடுவாங்க. நான் எஞ்சினீரிங். மத்தவங்க எல்லாம் என்ஜினீயர் ஆகற கனவோடு அந்த சப்ஜெக்ட் எடுத்தாங்களோ என்னவோ, நான் அந்த சப்ஜெக்ட் எடுத்தா, ஹிஸ்டரி ஜியாகிரஃபி, சயின்ஸ், தமிழ் இலக்கணம் இதெல்லாம் கிடையாதுங்கறதால இதுதாண்டா நம்ம சப்ஜெக்ட்ன்னு எடுத்துட்டேன். ஜெனரல் மேத்சும் கிடையாது. இந்த சுப்ஜெக்ட்களுக்கு பதில் எலெக்டிவ் மேத்ஸ், ஜெனரல் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் சயின்ஸ், என்ஜினீயரிங் டிராயிங், என்ஜினீயரிங் பிராக்டிகல் (கார்பெண்டரி &ஃபிட்டிங்).

மொதோ மாசம் மன்த்லி டெஸ்ட்ல எலெக்டிவ் மேத்ஸ்ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எல்லா பசங்களும் "டேய், இவன் எலெக்டிவ் மேத்ஸ்ல ஃபர்ஸ்ட்னு பேசிக்கிட்டப்ப கொஞ்சம் பெருமையாதான் இருந்தது. இங்கிலீஷிலேயும் நல்ல மார்க். எங்க அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். (பாவம்,வாழ்க்கைல என்னால அவர் பட்ட ஒரே ஒரு சந்தோஷம் இதுவாத்தான் இருக்கும்). ஒரு செகண்ட் ஹான்ட் சைக்கிள் வாங்கித் தந்தார். ஃபிலிப்ஸ் சைக்கிள். நல்ல தரமானது. மொதோ வேலையா அதுல என் பேர அழகா எழுதினேன். (அடடா, இப்பதான் ஞாபகம் வருது, நம்ம சைக்கிள் கத்துக்கிட்ட படலம் எழுத மறந்தே போச்சு. சரி அதை தனி ஒரு படலமா எழுதிடுவோம்)

ஒண்ணு ரெண்டு மாசத்துலயே எங்கள கார்பெண்டரில வாத்தியார் நல்லா தட்டி கொட்டி வேலை செய்ய பழக்கிட்டாரு. அவர் பேர் ஆரோக்கியசாமி. நாகேஷ் மாதிரி உடம்பு, அவ்வளவு ஆரோக்கியம். (ஆனா நல்ல ஸ்ட்ராங்கான பாடி). பசங்க கிட்ட ஜாலியா பழகுவாரு. சின்ன சின்ன ரிப்பேர் வேலையெல்லாம் வீட்டுல செய்யறதுக்கு டூல்ஸ் எடுத்துப் போறதுக்கு விட்டுடுவாரு.

எங்க இங்கிலீஷ் வாத்தியார் அமிர்தலிங்கம். அசப்புல அந்த கால நடிகர் M K ராதா (சந்திரலேகா ஹீரோ) மாதிரியே இருப்பாரு. மீசை கொஞ்சம் சின்னதா வெச்சிருப்பாரு. அதுனால அவருக்கு ஹிட்லர்னு பேரு. ரொம்ப நல்ல வாத்தியார்தான். தினமும் மனப்பாட செய்யுள் ஒப்பிக்கணும். எனக்குக் கொஞ்சம் கீச்சுக் கொரல். அதுனால ஒரக்க ஒப்பிப்பேன். பசங்க எல்லாம் சிரிப்பானுவ. வாத்தியாரும் லைட்டா சிரிச்சுப்பாரு. கொஞ்ச நாள் போன ஒடனே என்னையும் என் பக்கத்துல ஒக்கார்ற கமலாகரனையும் நீங்க ரெண்டு பெரும் சொல்ல வேண்டாம்னு சொல்லிடுவாரு. அவனும் நல்லா படிப்பான். இதுல எல்லாருக்கும் கடுப்பு, பின்ன காலைல வந்தவுடனே இங்கிலீஷுல செய்யுள் கேட்டா, கிராமத்துலேர்ந்து வர பசங்க என்ன செய்வாங்க, அவனுகளுக்கு தமிழ் செய்யுளே வராது. இதுல நம்ம என்ஜினீயரிங் பசங்கதான் ரொம்ப கடுப்பா இருந்தாங்க.

இந்த வருஷம்தான் ஆல்ஃப்ரெட் கனகராஜ் என்ட்ரி. கொஞ்ச நாள்லயே என்கூட நல்லா பழகி க்ளோஸ் ஃபிரெண்டாயிட்டான் (என்னை அன்று சிந்திய ரத்தம் கூட்டிட்டு போனவன் இவன்தான்) ஏதாவது செய்யணும்னு யோசிச்சு எஞ்சினீரியங் பசங்க திட்டம் தீட்டினாங்க. இவங்க திட்டம் தீட்ட என்கிட்டதான் ஐடியா கேப்பாங்க. எங்க வகுப்புக்கு கதவு கிடையாது. அப்பத்தான் புதுசா சில வகுப்புகள் கட்டினதால கதவு வெக்கல. உள் பக்கமும் சிமெண்ட் பூசல. அப்படியே செங்கல்செங்கலா இருக்கும். கார்பெண்டரி வாத்தியார் கிட்ட சொல்லி, உளி, மர சுத்தியல் (பெருசா இருக்கும்), ஸ்க்ரூ ட்ரைவர் எல்லாம் தேவையானது எடுத்துட்டாங்க. ஸ்கூல் 4.30 க்கு விடும். எல்லாரும் கிரௌண்ட்ல விளையாடிட்டு 6 மணிக்கு க்ளாஸ்ல நுழைஞ்சாங்க. முத வரிசைல இருக்கற ஒரு 4, 5 டெஸ்குக்கு டாப்ப ஓபன் பண்ணி பழையபடி அது இருக்காரா மாதிரியே வெச்சுட்டாங்க. எங்க வாத்தியாருக்கு ஒரு பழக்கம். நுழைஞ்சவுடனே நாங்க "குட் மார்னிங்" சொன்னவுடனே அத சிரிச்சுக்கிட்டே ஏத்துப்பாரு (எவ்வளோ நல்ல மனுஷன்) அதுக்கப்பறம் சட்டை கழுத்துல கைவெச்சு அதை ஒரு முறை மேல தூக்கி விட்டுப்பாரு. அடுத்ததுதான் இன்டெரெஸ்ட்டிங் மேட்டர். லைட்டா மேஜையை ஒரு முறை தூக்கி வெப்பாரு. அப்பறம் அவர் ஒக்கார்ற ஸ்டூல தூக்கி அடஜஸ்ட் செஞ்சுட்டு ஒக்காருவாரு. நம்ம பசங்க என்ன செஞ்சாங்க தெரியுமா. மேஜையை பார்ட் பார்ட்டா கழட்டி அப்பறம் அதே மாதிரி சும்மா செட் பண்ணி வெச்சுட்டாங்க. ஸ்டூலையும்தான். இது தவிர செங்கல் செவுரு பூரா "ஹிட்லர் ஒழிக" னு எழுதி வெச்சுட்டானுக.

மறுநாள் காலைல சார் வந்தாரு, வந்தவுடனே வழக்கம் போல எங்களை ஹோம்ஒர்க் நோட்ட எடுத்து வெக்க சொன்னாரு. பசங்க டெஸ்க்க ட்ரங்க் பொட்டி தொறக்கறா மாதிரி தொறந்து புஸ்தகத்த எடுத்து வெச்சாங்க. வாத்தியார் கடுப்பாயிட்டாரு. அப்பறம்தான் கவனிச்சாரு செவுத்துல பூரா ஹிட்லர் னு எழுதியிருக்கறத. அவர் அப்படி கோவப்படுவார்னு நான் எதிர்பார்க்கல. "எனக்கு ஹிட்லர்ன்னு பேர் வெச்சிருக்கீங்கனு எனக்கு தெரியும்டா. ஒரு வரலாற்றுப் புகழ் பெற்றவரின் பேர எனக்கு வெச்சிருக்கீங்கறதுல எனக்கு பெருமைதான்" அப்படின்னு கத்திட்டு மேஜையை தூக்கினாரு பாருங்க டாப் அவர் கைல மீதியெல்லாம் சரிஞ்சு விழுந்துடுச்சு. அப்படியே அதை கீழே போட்டாரு. ஸ்டூல்ல உக்கார்ந்தாரு. ஸ்டூல் பொத பொதன்னு சரிஞ்சு அப்படியே பின்னாடி சாஞ்சிட்டாரு. நான் இதை எதிர்பார்த்தேன். நானும் இன்னொரு ஃபிரெண்டும் ஓடிப் போயி அவரை கீழ விழாம புடிச்சுட்டோம்.அவர எங்க பெஞ்சுக்கு கூட்டி வந்து ஆசுவாசப் படுத்தினோம். தண்ணி குடுத்தோம். தண்ணி குடிச்சிட்டு ஒன்னும் சொல்லாம எழுந்து க்ளாஸ விட்டு போயிட்டாரு.
எனக்கு ஒரு வித கில்டி ஃபீலிங்.

அன்னிக்கு அவர் கிட்ட ட்யூஷன் படிக்க வந்த பசங்கள கண்னா பின்னான்னு திட்டியிருக்காரு. அந்தப் பசங்க ஒண்ணுமே செய்யல பாவம். எங்க குரூப்தான் செஞ்சது. இது யாருக்கும் தெரியாது. அந்தப் பசங்க கடுப்பாயி வீட்டுக்குப் போறப்ப பெரிய பெரிய செங்கலா அவர் வீட்டு ஓட்டுக் கூரை மேல வீசி எறிஞ்சிருக்காங்க. பாவம் அதுல அவருக்கு பிபி எகிறி அவர் ஒரு வாரம் லீவு போட வேண்டியதா போச்சு. இதுல எனக்கு ரொம்ப வருத்தம். ஒரு நல்லவர இப்படி செஞ்சுட்டாங்களேன்னு. ஆனா அவர் மறுபடி வந்து க்ளாஸ் எடுக்கறப்ப பசங்க ரொம்ப நல்லபடியா இருந்தாங்க. அவரும் ஒண்ணுமே கேக்கல யாரையும். ஹெட்மாஸ்டர் கிட்டக்க கூட ரிப்போர்ட் செய்யல.

நான் 9ஆவது படிக்கறப்ப காந்தி ஜயந்தி அன்னிக்கி (1975) காமராஜர் இறந்து போயிட்டாரு. எங்க தெருவுல வெங்கடேசன்னு ஒரு அண்ணன். எங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கற மாமாவோட பையன். அவர் காங்கிரஸ் அபிமானி. தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சிலவும் நிரந்தர மெம்பர். அவர நாங்க தலைவர் னு தான் கூப்பிடுவோம். அவர் யோசனைப்படி எங்க தெருவுல "காமராஜர் நினைவு நற்பணி மன்றம்" னு ஆரம்பிச்சோம். எங்க தெரு முட்டுத் தெரு. அந்த முட்டு ஒரு வீட்டோட பின் சுவர். அதுல மன்றத்தோட பேர் எழுதி ஆரம்பிச்சோம். நான்தான் எழுதினேன். மொதோ மொதோ ஒரு நல்ல காரியத்துக்கு எழுதினேன். இப்ப பத்தாவதுல ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு. அவருடைய மொதோ நினைவு நாளையும், மன்றத்தின் மொதோ ஆண்டு விழாவையும் ஒண்ணா கொண்டாட முடிவு செஞ்சோம். உங்களுக்கு நினைவு இருந்தா அப்பல்லாம் கரெக்ட்டா காந்தி ஜெயந்தி அப்பத்தான் ஆயுத பூஜை வரும். விழா கொண்டாட தெருல எல்லார் கிட்டயும் வசூல் பண்ணோம். விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டி, ஓவிய போட்டி எல்லாம் நடத்தினோம். ஷியாம் சுந்தர் னு ஒரு அண்ணன். கலை ஆர்வம் மிக்கவர். "பவளக்கொடி" நாடகம் போடலாம்னு முடிவு செஞ்சாரு. அதுக்கு அவரே ஸ்க்ரிப்ட் ரெடி செஞ்சு வசனம் எல்லாம் எழுதினார். கதை அப்படியே இருக்கும். ஆனா வசனம் எல்லாம் கொஞ்சம் தமாஷா இருக்கும். எல்லாருக்கும் சந்தோஷம். எங்க அண்ணன்தான் கிருஷ்ணர். அவனுக்கு நல்ல சுருட்டை முடி. அவன் முக அமைப்பு கிருஷ்ணர் வேஷத்துக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். ரமணி நீயும் நடிக்கறேன்னு சொன்னாரு சுந்தர். ஆஹான்னு நெனைக்கறதுக்குள்ள நீதான் பவளக்கொடின்னு ஒரு குண்டு போட்டாரு பாருங்க. என்னோட இது தகடூருக்கு வந்த சோதனைன்னு நெனச்சு நொந்து போயிட்டேன். ஆனா தப்பிக்க முடியாது. விழாவுக்கு முன்னால 3 நாள் ரிகர்சல். இதுல நாரதரா நடிக்க ஆள் கிடைக்கல, எங்க அண்ணனே நாரதர் வேஷமும். கிருஷ்ணரும் நாரதரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காத நாடகம் இதுவாத்தான் இருக்கும். நாரதரா வர்றப்ப ஒரு காவி வேஷ்டியை கிருஷ்ணர் வேஷத்து மேலேயே சுத்திண்டு வந்துடுவான்.

சுந்தர் எழுதின வசனம் எப்படி தெரியுமா? அர்ஜுனனுக்கும் பவளக்கொடிக்கும், அந்தக் காலத்துலே வடிவேலு-கோவை சரளா டைப். எங்க அண்ணன் கிருஷ்ணருக்கு தேங்காய் ஸ்ரீநிவாசன் டைப்.

பகல்ல வெளையாட்டுப் போட்டிகள். வயதுக்கேத்தாப்பல க்ரூப் பிரிச்சு ரன்னிங் ரேஸ். பெண்களுக்குத் தனியா ஸ்கிப்பிங் போட்டி. பப்ளிக்ல ஓட யாரும் வரல. அப்பறம் டிராயிங் போட்டி. டிராயிங்ல நான்தான் ஃபர்ஸ்ட். காமராஜர் படம் வரைஞ்சேன். (வேற யாருமே கலந்துக்கல) என்னோட வயசுப் பசங்க ரன்னிங் ரேஸ்லயும் நான் தான் ஃபர்ஸ்ட்.
No automatic alt text available.

மாலைல தெருவிலேயே ஒருத்தர தலைமை தாங்க சொல்லி விழா ஆரம்பமாச்சு. மொதல்ல பாட்டுப் போட்டி. அதுலயும் நான்தான் ஃபர்ஸ்ட், ரெண்டாவதா வந்த சுகுமார்ங்கிற பையன் என்ன விட நல்லா பாடுவான். அவன் ஒரு சரியான பாட்டு செலெக்ட் செய்யாததால எனக்கு மொதோ ப்ரைஸ். (அடுத்த வருஷம் அவன்தான் ஃபர்ஸ்ட் வந்தாங்கிறது வேற விஷயம். நான் செகண்ட். இதுல பெரிய விஷயம் என்னன்னா நாங்க ரெண்டே பேர்தான் பாடினோம்)

அப்பறம் ப்ரைஸ் டிஸ்ட்ரிபியூஷன் செஞ்சாங்க. அடுத்து எல்லாரும் எதிர்பார்த்திருந்த நாடகம் ஆரம்பம். சும்மா சொல்லக் கூடாது. தெரு மக்கள் அனைவரும் திரண்டு மேடைக்கு முன்னாடி உக்கார்ந்தாங்க. அடுத்த தெரு ஆளுங்களும் நெறைய பேர். சுமார் 100 பேராவது இருக்கும். நாடகத்துக்கு நல்ல வரவேற்பு. சுந்தர் எழுதிய வசனங்கள் குபீர் சிரிப்பை வரவழைத்தன. என் அண்ணன் கிர்ஷ்ணராக தோன்றியபோது உண்மையிலே ஒரு பெரியவர் உணர்ச்சி வசப்பட்டு விட்டார். ஒரு கணம்தான். உடனேயே தன்னிலைக்கு வந்து விட்டார். ஆனால் நாடகத்தின் ஹைலைட் பவளாகக்கொடியாக தோன்றிய நான்தான். கிருஷ்ணர், அர்ஜுனனைவிட நான் உயரம். நல்ல ஜடை பின்னி, கீச்சுக் குரலில் நான் நாதா என்று ஆரம்பித்தபோதே பலத்த கைதட்டல். பிறகு நான் வசனம் பேசும்போதெல்லாம் நல்ல சிரிப்பு. நாடகம் இனிதே முடிந்தது. எல்லாரும் மகிழ்வுடன் திரும்பினர். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது, எப்போதாவது கோயில் விழாக்களில் நடக்கும் ஆர்கெஸ்டராதான். அதனால் வந்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.  நாடகம் முடிந்தவுடனே, நான் புடவையைத் மேலே தூக்கிக்கொண்டு ஓடி வீட்டுக்கு வந்தபோது அனைவருக்கு சிரித்தார்கள். இதில் இன்னொரு காமெடி. வீட்டில் நான் புடவை கட்டிக் கொண்டு ரூமிலிருந்து வெளியே வரும்போது கொலுவுக்கு வந்திருந்த என் அக்காவின் சிநேகிதியும் அவர்களின் தங்கைகளும் என்னைப் பார்த்து "கொல்"லென்று சிரித்ததுதான் .

மூன்று வருடங்கள் இதை போல் நாடகம் நடத்தினோம். இரண்டாம் வருடம் அல்லியாக நடித்த பையன் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான். SSLC போயிட்டானாம். நானும்தான் SSLC. அதனால் நானே அவன் வேடத்தையும் நடித்தேன். டபுள் ஆக்ட். மூன்றாம்  வருஷம்தான் டாப். சுபத்திரையாக நடித்த பையன் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று விட்டான். நான் 3 வேடங்கள் போட வேண்டியதாயிற்று. அதற்கு அடுத்த வருடம் நானே இனி என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டேன். அதனால் நாடகம் நின்று ஒரு இசைக்கச்சேரி நடத்தினோம். சுமாராக இருந்தது. அதற்கப்புறம் நான் ஊரை விட்டு வந்து விட்டேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

அதற்கப்புறம் அந்த வருடம், ஸ்கவுட், கிரிக்கெட், பால் பேட்மிண்டன் என்று போயிற்று.
அடுத்த வரம் 11ஆவது வகுப்பில் நடந்தவை. நிறைவு வாரம் பால்குடி டேஸிற்கு.

சந்திப்போம் 

Monday, 23 October 2017

பால்குடி டேஸ் 14 - தீபாவளி ஸ்பெஷல்

"அது ஒரு கனாக்காலம்,
தீபாவளி விழாக் கோலம்"

எல்லார்க்கும் தீபாவளின்னா சின்ன வயசுல ஒரே மாதிரி அனுபவம்தான் இருந்திருக்கும். புது ட்ரஸ், டப்பாசு, வாங்கின பெருமை, முடியாதவங்களுக்கு துக்கம், பண்டிகை இல்லாதவங்களுக்கு ஏக்கம், இது மாதிரி ஒரு 3, 4 வகைல அவங்க அவங்க அனுபவத்தை அடக்கிடலாம். இதுபத்தி நெறய பேர் எழுதிட்டாங்க, எழுதறாங்க, எழுதுவாங்க. நான் எழுதப் போறது "காலேசு டேஸ்" தீபாவளி. "பால்குடி டேஸ்" தீபாவளி இல்ல.

அப்பல்லாம் ஓல்ட் SSLC முடிச்ச ஒடனே நேர காலேசுதான். PUC னுட்டு டிகிரி படிக்கறதுக்கு முன்னாடி நம்மள காலேசுன்னா என்னன்னு பழக்கப் படுத்திடுவாங்க.

இஸ்கோல்ல படிக்கறப்ப இருந்த மாதிரி, தீபாவளிக்கு இன்னும் 100 நாள், 99 நாள்னு எல்லாம் எண்ணிக்கினு இருக்க மாட்டோம். வளந்துட்டோம்ல. ஒரு பிளானிங்கும் கெடையாது. தீபாவளி வந்துச்சுன்னா, புது ட்ரஸ் மாட்டிக்கிட்டு டப்பாசு வெடிச்சுட்டு ஒரு 3 பேர் கிளம்புவோம் (நான், லட்சுமணன், கணபதி சுப்பிரமணியம்) மத்த ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு. மொதல்ல ஸ்ரீதர் வீடு. எல்லார் வீட்டுலயும் அப்பா, அம்மா எங்கள அவங்க  வீட்டு பசங்க மாதிரிதான் நடத்துவாங்க. அங்க சில பல மல்லிப்பூ இட்லிகள், தும்பைப்பூ போல தேங்காய் சட்னி முழுங்கிட்டு அடுத்து ஜீவாங்கற வெங்கட்ராமன் வீடு. அங்கேயும் இதே கதைதான், அதே காலனில  நாலு வீடு தள்ளி மோகன்ராஜ்  வீட்டுக்கு போயி அங்கேயும் இட்லி. அப்பறம், ரவிச்சந்திரன், லக்ஷ்மணன் வீடு, கணபதி சுப்பிரமணியம் வீடுன்னு எல்லார் வீட்டுலயும் இட்லி தின்னாம விட மாட்டாங்க. லக்ஷ்மணன் வீட்டுக்கு போறதுக்குள்ள ஆல்ஃபிரட்ங்கிற கிறிஸ்டியன் எங்க கூட சேந்துக்குவான். நடு நடுல சோடா குடிச்சுக்குவோம்.  இதுல நடுல யார் கண்ணுலேயாவது பட்டோம் அவ்வளவுதான். அவங்க வீட்டுலயும் இட்லி தின்னணும். இப்படி ஒரு 6, 7 வீட்டுல ஒரு த்ரீ ஹவர்ஸ்ல 50 இட்லியாவது தின்னுடுவோம் அந்த வயசு அப்படி. இப்ப நெனச்சா மலைப்பா இருக்குது. எல்லாம் முடிச்சு எங்க வீட்டுக்கு வருவோம். எங்க வீட்டுலதான் பசங்க கொஞ்சம் பயப்படாம இருப்பாங்க, ஏன்னா நாங்க இட்லி செய்ய மாட்டோம். அங்க எங்க  பிளானிங் ஆரம்பிக்கும், மேட்னி படம் எங்க, ஃபர்ஸ்ட் ஷோ எங்க பாக்கறதுன்னு. டிக்கெட் சொல்லி வெக்கறது எங்க அப்பாவோட வேல. நேர தியேட்டர் மேனஜரப் பாத்து இன்னின்ன ஷோக்கு இத்தினி டிக்கெட் வேணும், என் பையன் வருவான்னு சொல்லிடுவாரு. சில சமயம் டிக்கெட்ட அவரே வாங்கி வந்துடுவாரு. மேட்னிக்கு ஒரு 8 லேர்ந்து 10 பேர்தான் போவோம். அநேகமா, சென்ட்ரல் இல்லாட்டி கணேசா தியேட்டர்தான். எங்க தீபாவளியே சாயங்காலம் ஃபர்ஸ்ட் ஷோ ரத்னா தியேட்டர்லதான். ரெண்டு பாக்ஸ் இருக்கும். ஒவ்வொண்ணும் 24 சீட். 48யும் புக் செஞ்சுடுவோம். ஒரு 24 பியூர் எங்க கும்பல். மத்ததுல தெரிஞ்சவங்களுக்கு குடுத்துடுவோம்.

எங்களுக்கு படத்தப் பத்தி கவலை கிடையாது. ஒரே கலாட்டாதான். பட்டாசு வெடிக்க மாட்டோம் தியேட்டர்ல. ஆனா கேப் ரோல், துப்பாக்கி எடுத்துட்டு போயிடுவோம். ஹீரோவ காமிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து ஒரே கலாட்டாதான். பாட்டுக்கு டேன்ஸ். இப்படியே போகும். கிளைமாக்ஸ்ல துப்பாக்கில சுடற சீன் வந்தா, வில்லனோ, இல்ல கதாநாயகனோ மொழ நீளம் வசனம் பேசறப்ப நாங்க ஒரு 4, 5 பேர் துப்பாக்கியால டுமீல் டுமீல்னு சுட்டு, பால்கனில இருக்கற சில தாய்குலங்களுக்கு பீதிய கெளப்புவோம். (இது தாய் மீது சத்தியம் படத்தப்ப நடந்தது)

படம் முடிஞ்ச ஒடனே அவங்க அவங்க வீடுதான். எங்களுக்கு அன்னிக்கு கெடச்ச சுதந்திரத்த மதிச்சு, வீட்டுக்கு நேரத்தோட நல்ல புள்ளைங்களா வந்துடுவோம். வந்து சாப்பிட்டு எங்க தெருவுல நைட் பத்து மணிக்கு ஒரு மாபெரும் வான வேடிக்கை (வான வேடிக்கைதான்) நடத்துவோம். அதுக்கு ஒரு 5, 6 ஃபிரெண்ட்ஸ் வந்துடுவாங்க. எங்க தெரு ஆளுங்க எல்லாரும் அவங்க அவங்க வீட்டு வாசல்ல நின்னுக்குவாங்க. பக்கத்துக்கு தெரு ஆளுங்களும் வந்துடுவாங்க.

எங்க தெரு ஒரு முட்டுத் தெரு. அதுல கடைசில ஒரு டெலிஃபோன் போஸ்ட் போட்டிருந்தாங்க. ஆனா யாரும் டெலிஃபோன் கனெக்க்ஷன் கொடுக்கல. நாங்க எல்லார் வீட்டுலேர்ந்தும் சிங்கம் மார்க் டபுள் சரம் கலெக்ட் பண்ணி வெச்சிருப்போம் மொதோ நாளே. எப்படியும் ஒரு 20, 25 சரம் சேரும். அது இல்லாம ஒரு டஜன் மத்தாப்பு. அப்பிப்ராம் ரெண்டு டஜன் ராக்கெட். மொதல்ல ஒரு 6 கம்பி மத்தாப்பஒண்ணா கட்டி தலைகீழா வெச்சு அது எரிஞ்சு முடிக்கற இடத்துல டபுள் சரம் கட்டுகள ஒண்ணா சேத்து கட்டுவோம். சரம் முடிஞ்சவுடனே மீதி இருக்கற மத்தாப்பு அத்தனையும் பத்திக்கறா மாதிரி செட் பண்ணிடுவோம். அதெல்லாம் எரிஞ்சவுடனே 2 டஜன் ராக்கெட்டையும், அழகா கூம்பை கவுத்த மாதிரி கட்டி வெச்சுடுவோம்.
No automatic alt text available.

இப்பதான் ஃபைனல் டச். மாஞ்சா கயிறால இதுங்களை சேத்துக் கட்டி, நுனில ஒரு கல்ல கட்டி டெலிஃபோன் போஸ்ட்ல மேல குறுக்குக் கம்பில தூக்கி வீசி அது கீழே வந்தவுடனே, பட்டாசுல இருக்கற மத்தாப்ப பத்த வெச்சு கயிறை இழுத்து பட்டாசு எல்லாம் மேல போற  மாதிரி புடிச்சுப்போம். மொதல்ல அந்த மத்தாப்பு எரிஞ்சு, பட்டாசு எல்லாம் அந்தரத்துல வெடிக்கும். ஒரு 15 நிமிஷம் காதப்பொளக்கற சத்தம். அது முடிஞ்சவுடனே மீதி இருக்கற கம்பி மத்தாப்பு எல்லாம் எரியும் பாருங்க. ஜெகஜோதியா இருக்கும். ஹைலைட்டே கடைசில ராக்கெட் எல்லாம் வானத்துலேர்ந்து சும்மா நிலாவுக்கு போறா மாதிரி சீறிக்கிட்டு திசைக்கு ஒண்ணா பாயும் பாருங்க. எந்த வித வாணவேடிக்கையும் இதுக்கு ஈடாகாது. இதெல்லாம் எங்க சீனியர்ங்கதான் செய்வாங்க. ஏன்னா மத்தவங்க சொதப்பி ஏதாவது ஆச்சுன்னாங்கிற ஒரு தற்காப்புதான். ஒரு 5, 6 வருஷம் இதெல்லாம் நடந்துச்சு. அப்பறம் நான் 83 ல மெட்றாஸ் வந்துட்டேன். அதுக்கப்பறம் இது படிப்படியா கொறஞ்சு கடைசில நின்னே போச்சு. ஆனா ஒரு 4, 5 வருஷம் மட்டும் தீபாவளி பொங்கலுக்கு ரத்னா தியேட்டர் சினிமா மட்டும் நிச்சயம் இருந்துச்சு. எல்லாரும் கல்யாணம் ஆகாதவங்க அதுனால எந்த ஊர்ல இருந்தாலும் பண்டிகைக்கு ஒண்ணா தர்மபுரில கூடிடுவோம். ஒவ்வொருத்தரா கல்யாணம் ஆகி தர்மபுரி வர்றது கொறைஞ்சு போச்சு. அதுனால இந்த சந்தோஷங்களும் மறந்தே போச்சு. கல்யாணம் ஆனா ஆண்களும் பலத எழக்கத்தான் வேண்டியிருக்கு. என்னமோ பொம்பளைங்கதான் அவங்க சொந்தங்கள விட்டு வந்துட்ட மாதிரி சொல்றாங்க. நம்ம நட்புங்கள விட்டுப் பிரிஞ்ச வலி எங்கே புரிய போவுது?

(யாரேனும் விடுபட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளவும். எழுதும்போது பலவித உணர்ச்சிகள். மிகுந்த பிரயாசையுடன்தான் எழுத வேண்டியிருந்தது)


பால்குடி டேஸ் 13  - தருமபுரி நினைவுகள்.

"விளக்கெண்ணையும் வேதியியலும்"

(சிறுவயதில் வயிறு சரியாக இருப்பதற்கும், குடலிலுள்ள புழுக்களை நீக்குவதற்கும் பேதிக்கு கொடுப்பார்கள். அதை சில இடங்களில் வேதிக்கு என்று சொல்வார்கள். ஆகவே இந்த தலைப்பு)

ஜனவரில பொங்கல் முடிஞ்ச  அடுத்த ஞாயிறும், ஜூலை மாசம் கடைசி ஞாயிறு வரும்போதும், சனிக்கிழமை நைட்டே வயித்தைக்  கலக்க ஆரம்பிக்கும்.. ஏன்னா அடுத்த நாள் காலைல  வெறும் வயித்துல விளக்கெண்ணெய் தருவாங்க, அதான். குறிப்பா ஏன் இந்த ரெண்டு மாசம்னு கேக்கறீங்களா? தீபாவளி பொங்கல்னு சும்மா இஷ்டத்துக்கு பலகாரம் தின்னுருப்போம். அதெல்லாம் சரி செய்ய வேண்டாமா? அதே மாதிரி ஆகஸ்ட் பொறந்தாலே வரிசையா கிருஷ்ண ஜெயந்தி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரின்னு சில பல பண்டிகைகைகள். தமிழனைப் பத்திதான் தெரியுமே! எண் ஜாண் உடம்புக்கு அவனுக்கு வயிறே பிரதானம்.

காலைல எழுந்து பல் விளக்கினவுடனே என்னோட அண்ணன் என்னை அம்மா கூப்பிடறாங்கன்னு சொல்லிட்டு நைசா திண்ணைக்கு போயிடுவான். எஸ்கேப்பாம். நமக்குத் தெரியும், இதுலேர்ந்து தப்பிக்க முடியாதுன்னு. பலியாடு மாதிரி தலையாட்டிக்கிட்டே சமையல் ரூமுக்கு போவேன். எதிர்த்து ஒண்ணும் பிரயோஜனம் இல்லேன்னு தெரியும். அதுனால சமரசமா, "எனக்கு கிண்டில ஊத்திக் கொடுத்துடுங்க, நான் ஒரே மடக்குல குடிச்சுடறேன்"னு சொல்லி வாங்கி ஒரே உறிஞ்சுதான். வெளில வரும்போது மூஞ்சியை ஒண்ணும்  நடக்காத மாதிரி வெச்சுக்கிட்டு வாசல் திண்ணைல இருக்கற அண்ணன்கிட்ட போய் "நமக்கு அடுத்த வாரம்தானாம், அக்காக்கு மட்டும்தான் இன்னிக்கு, உன்னை காப்பி குடிக்க கூப்பிட்டாங்க"ன்னு  சொல்லி உள்ளே அனுப்புவேன், ஏன்னா அக்காக்கு குடுத்தது அவனுக்கு தெரியும். அவன் ஒரு சந்தேகத்தோடயே உள்ளே போவான்.காப்பி அரை கப் இருக்கறத பாத்தவொடனேயே அவனுக்குத் தெரிஞ்சுடும் இது வெளக்கெண்ணைதான்னு, ஓடப் பாப்பான். வாசல்ல எங்க பாட்டி வழியை மறிச்சி நின்னுக்குவாங்க. வேற வழியில்லாம டம்ப்ளரை கைல வாங்கி அரை டம்ப்ளர் குடிக்கறதுக்குள்ள ஆயிரம் அலப்பறை செய்வான். வாந்திவர்றா மாதிரி ஆக்ட் எல்லாம் குடுப்பான். எங்க பாட்டி கிட்டயா நடக்கும்? ரொம்ப அலட்டினா முதுகுல சுரீர்னு விழும்னு தெரியும். அதுனால ஒரு வழியா குடிச்சிட்டு, வெளில வந்து என்னைத் தேடுவான், எதுக்கு, நொங்குன்னு ஒரு கொட்டு வைக்கத்தான். அவனுக்கு எலும்பு தேகம். கொட்டினான்னா கபாலமே பொளந்துக்கறா மாதிரி கொட்டுவான். நான் நைசா பக்கத்து வீட்டு திண்ணைல போய் ஒளிஞ்சுக்குவேன். 10 நிமிஷத்துல வீட்டுக்கு வந்துதான் ஆகணும். ஒரே ஓட்டம்தான் பாத்ரூமுக்கு. போயிட்டு வந்தா அவன் எரிச்சலோடு காத்துகிட்டிருப்பான். அப்ப அடிக்க முடியாது. ஒரே ஓட்டம்தான் உள்ளே.
No automatic alt text available.

இப்படி கௌண்டமணி கணக்கா 9 மணி வரை போயிவந்து கை காலெல்லாம் வெலவெலத்துப் போயிடும். சாப்பிட எதுவும் தர மாட்டாங்க, இன்னொரு காப்பிதான். அது தேவாம்ருதமா இருக்கும் அப்ப. ஒரு வழியா ஒரு 11 மணிக்கு எல்லாம் செட்டில் ஆயிடுச்சின்னு உறுதிப்படுத்திக்கிட்டு எங்கப்பா ஒரு பெரிய செம்பு அண்டால தண்ணி எடுத்து வெயில்ல வெப்பார். அது வெய்யில்லேயே சூடேறணும். அதுல தண்ணி கலக்காம குளிப்பாட்டுவாங்க. அப்பத்தான் ஜலதோஷம் புடிக்காதாம். எப்படா 1 மணி ஆகும்னு காத்திட்டிருப்போம். அப்பவும் குளிச்சப்பறமும் ஏதாவது போனோமான்னு செக் செஞ்சிட்டுதான் சாப்பாடு போடுவாங்க. அருமையான சீரக ரசம். பருப்பு துவையல் காரம் இல்லாம. மத்த சமயத்துல செய்யற பருப்புத்துவையல் எல்லாம் எந்த மூலைக்கு. பத்தியமா போடற இந்த துவையலை ஒரு வெட்டு வெட்டுவோம்.

சாயங்காலம் ரொம்ப பசின்னா ரெண்டு இட்லி, இல்ல ஒரு தோசை, அதே பருப்பு துவையல் தொட்டுக்கிட்டு. அப்பறம் டீ இல்லாட்டா காப்பி. (வழக்கமா எங்களுக்கு காப்பி டீ கிடையாது, கஞ்சி இல்லேன்னா ஓவல்டின் தான்) அன்னிக்கு விளையாட வெளில அனுப்ப மாட்டாங்க. வீட்டுலயே தாயக்கட்டை, கேரம் போர்ட் இது மாதிரிதான். எங்க அப்பா வெளில போயிட்டு வரப்ப, பாவம் பசங்கன்னு ஜாங்கிரி, இல்லேன்னா குளோப் ஜான் (அப்படிதான் அப்பெல்லாம் சொல்லுவோம்) வாங்கிட்டு வருவாரு. ஆஹா, தீபாவளி அன்னிக்கு தின்னற இனிப்பு கூட அவ்வளவு பிரமாதமா இருக்காது.

நைட் மோர்சாதம் போடுவாங்க, அதே பருப்பு துவையலோட. எங்க வீட்டுல தினமும் தயிர் கடைஞ்சு வெண்ணெய் எடுப்பாங்க, அந்த மோர் தனி சுவைதான். சீக்கிரம் புளிக்காது. நல்லா வயிறு நிறைய சாப்பிடுவோம். எங்களுக்காக அன்னிக்கு பெரியவர்களும் பத்தியமாதான் சாப்பிடுவாங்க. அப்ப தெரியல. இப்ப நெனைச்சா சின்ன சின்னதாவும் பெருசாவும் எவ்வளோ தியாகமெல்லாம் செஞ்சிருக்காங்கன்னு ஒரு ஃபீலிங் வர்றதை அடக்க முடியல.

இந்த வெளக்கெண்ணெய் மேட்டர் என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்க்கு தெரியாம பாத்துக்கணும். இல்லேன்னா மறுநாள் ஸ்கூல்ல மானத்த வாங்கிடுவாங்க.

நான் 6 ஆம் கிளாஸ் படிக்கற வரை இதே கதைதான். நான் 7 ஆவது போனவொடனே எங்க அண்ணன் மெட்ராஸ் வந்துட்டான் படிக்கறதுக்கு. அக்காவும் பெரியவங்களாயிட்டாங்க. அதுனால நிறுத்தியாச்சு. இப்பெல்லாம் டாக்டர்ங்க குழந்தைங்களுக்கு இதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்றதை கேட்டு இதெல்லாம் செய்யறதில்ல. அதுனாலதான் பலவித வியாதிகள்.

ஓகே மீண்டும் சந்திப்போம்.


சுதந்திர தினமும் பங்கஜமும் - தருமபுரி நினைவுகள். - 12
(நடுவில் கொஞ்சம் "பால்குடி டேஸ்" பக்கங்களிலிருந்து)

நான் 3 ஆவது படிக்கும்போது (5 ஆவது வரை இதே கதைதான்) சுதந்திர தினத்தன்று எங்கள் பள்ளியில் 7.30க்கெல்லாம் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் தந்துடுவாங்க. சட்டையில் தேசியக் கொடியை குத்திக்கிட்டு பஸ் ஸ்டேன்ட் போனாக்க, எல்லா டவுன் பஸ்லயும் கலெக்டர் ஆபீஸ் போறதுக்கு ஃப்ரீ, கலெக்டர் கொடியேத்தறத பாக்கறதுக்கு, (ஸ்கூல் புள்ளைங்களுக்கு மட்டும்தான்). ஓசில அதுவும் தனியா பஸ்ல போறோம்ன்ற ஒரு வீரம்தான்.

கலெக்டர் ஆபீஸ் போய் நாங்க பார்வையாளர் இடத்துல உக்காந்துக்குவோம். போலீஸ், ஹோம்கார்ட், என் சி சி, ஸ்கவுட் னு வரிசையா ரெடியா இருப்பாங்க. கலெக்டர் வந்தவுடனே, இவங்க எல்லாரும் ஒரு மார்ச் பாஸ்ட், செஞ்சு கலெக்டருக்கு சல்யூட் அடிப்பாங்க, எங்களுக்கெல்லாம் இதே பெரிய ப்ரம்மாண்டமா இருக்கும்.  மார்ச் பாஸ்ட் முடிச்சு கலெக்டருக்கு சல்யூட் அடிச்சவுடனே அவர் கொடியேத்துவாரு, அப்ப துப்பாக்கில 3 தடவை சுடுவாங்க, கொஞ்சம் பயமாத்தான் இருக்கும், யார் மேலயாச்சும் பட்டா என்ன ஆவுறதுன்னு. எல்லாம் முடிஞ்சு 5 பைசா பாரீஸ் சாக்லேட் தருவாங்க, சூப்பரா இருக்கும்.

இது முடிஞ்சவுடனே கலை நிகழ்ச்சிகள். மொதல்ல போலீஸ்ல ஒரு க்ரூப் கலர் கலரா வேஷ்டியை பஞ்சகச்சம் மாதிரி கட்டிக்கிட்டு மேல வெள்ளை பனியன் போட்டுக்கிட்டு, "லெசீம்" அப்படித்தான்  சொல்வாங்க - அதை தட்டிக்கிட்டு டான்ஸ் ஆடிட்டு வருவாங்க, இது தாண்டியா மாதிரி தாள நடை. ஆனா கட்டை ரெண்டும் ஒரு சின்ன சங்கிலியால ஜாயின் ஆயிருக்கும், நுனில சலங்கை கட்டியிருக்கும். (பார்க்கவும் : படம்) அதை ஷ்க், ஷ்க் னு தட்டிட்டு டான்ஸ் ஆடிட்டு வருவாங்க. போலீஸ்காரவுங்களுக்கு இதெல்லாம் தெரியுமான்னு ஆச்சரியமா இருக்கும். அது முடிஞ்சா உடனே போலீஸ் பாண்ட் குரூப் பாண்ட் வாசிப்பாங்க. தேவனே என்னைப் பாருங்கள் பாட்டு கூட வரும். (இதே போலீஸ் பெரிய அதிகாரிங்க வீட்டுல சாவுன்னா "வீடு வரை உறவு" பாட்டுக்கு பாண்ட் வாசிப்பாங்கன்றது வேற விஷயம்)
Image may contain: 8 people, people standing and outdoor  No automatic alt text available.

11 மணி வாக்குல கெளம்பிடனும். இல்லாட்டி ஃப்ரீ சேவை முடிஞ்சு போயிடும். ஒரு வாட்டி என் சித்தப்பா பையனும் கூட வந்தான் (அவனுக்கு 5 வயசுதான் இருக்கும், பூணல் போடறப்ப அடி வாங்கினானே அவனேதான்) திரும்பி வந்தவுடனே, எங்க அம்மா அவனை எப்படிடா இருந்துச்சுன்னு கேட்டாங்க, அவன், "பெரியம்மா, பெரியம்மா ஜோரா இருந்துச்சு, போலீஸ்காரங்க எல்லாம் பங்கஜத்தைக் கட்டிக்கிட்டு ஆடினாங்க"ன்னான் பாருங்க, எல்லாருக்கும் தூக்கி வாரிப் போட்டுச்சு. ஏன்னா அப்ப பங்கஜம் மாமியும் அங்க இருந்தாங்க. "என்னடா சொல்றே"ன்னு கேட்டதுக்கு "ஆமாம் பெரியம்மா, அப்பா, பெரியப்பா எல்லாம் கட்டிப்பாங்களே (அப்பவும் பொடி வெச்சே பேசறான் பாருங்க) தவசத்துக்கு" அப்படின்னு அவன் சொன்னவுடன்தான் புரிஞ்சுது அது பஞ்சகச்சம்னு, எல்லாருக்கும் நிம்மதி, பங்கஜம் மாமி பெருமூச்சு விட்டாங்க.

இப்படி போச்சு எங்க சுதந்திர தினம்.


பால்குடி டேஸ் (PAALKUDI DAYS) - 11

(தருமபுரி நினைவுகள்)

 பள்ளி திறந்து 7 ஆம் வகுப்பிற்கு போயாச்சு. நான் அப்ப்பாவு நகர் ஸ்கூல்லேர்ந்து டவுன் ஸ்கூலுக்கு மாத்திக்கிட்டேன், எனக்கும் அக்கா மாதிரி ஸ்கூலுக்கு லன்ச் கட்டித் தருவாங்கன்னு. அதெல்லாம் கெடையாது, வந்து சாப்பிட்டுப் போன்னுட்டாங்க. இங்க விளையாட மைதானம் கெடையாது. வேஸ்டு. என்ன புதுசா ஃபிரண்ட்ஸ் கெடைச்சாங்க. பார்த்தசாரதி, உதயா, பாஸ்கர் னு. இங்க குறும்பு செய்ய ஒண்ணும் வழியில்ல.  அதுனால ஸ்கூல் விட்டவுடன் வீட்டுக்கு ஓடி வந்துடுவோம். வந்து தெருல விளையாட்டு.

அந்த வருஷம் நடந்த ஒரே ஒரு இன்ட்ரஸ்டான விஷயம் பெங்களூர், மைசூர் டூர்தான். 20 ருபாய் ஆளுக்கு. 20 ரூபாய்க்கு தருமபுரிலேர்ந்து மைசூர்-பெங்களூர் பஸ்ஸுல கூட்டிட்டுப் போய், மூணு வேளை சூப்பர் சாப்பாடு ரெண்டு நாளைக்கு. 1972 ஆம் வருஷம், இப்ப முடியுமா?டூர் ரொம்ப நல்லா இருந்துச்சி. அப்பத்தான் வசந்த மாளிகை ரிலீஸ் ஆன சமயம். பஸ்சுல அந்தப் படத்தோட பாட்டுதான் திருப்பித் திருப்பி பாடிட்டுப் போனோம். மொதல்ல சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி. அங்கேருந்துதான் ஹொகேனல்லுக்கு தண்ணி வருதுன்னு சொன்னாங்க. பிரமாண்டமா இருந்துச்சு. கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு. அருளானந்தம்னு ஒரு தமிழ் வாத்தியார்தான் பொறுப்பு. அவருக்கு என்னைக் கண்டாலே என்னவோ புடிக்காது. அங்கிருந்து சாமுண்டி மலை, சிரவண பெலகோலா எல்லாம் போனோம்  அப்பா, கோமதேஸ்வரர் சிலைதான் எவ்வளோ பெருசு. அது அடில நின்னா, அதோட கணுக்கால் உயரம் கூட வரல. எல்லாம் பாத்துட்டு அன்னிக்கு எதோ ஒரு ஸ்கூல்ல நைட் ஹால்ட். நைட் சாப்பாடு ஹோட்டல்ல. சாப்பாடு எல்லாம் அருமையா இருந்தது.  மறுநாள் பெங்களூர். பெங்களூர்ல எனக்கு ஞாபகம் இருந்தது எல்லாம் கப்பன் பார்க், லால் பாக் பார்த்ததுதான். (அதைக் கூட ரொம்ப நாள் லால் பார்க்னுதான் சொல்லிட்டிருந்தோம்). அங்க கண்ணாடி மாளிகை ரொம்ப புடிச்சிருந்தது. அது லண்டன் க்ரிஸ்டல் பேலசோட மாதிரியாம்.

Image result for chamundi hills statue

நீ ஒன்னும் கலாட்டா பண்ணலியான்னு கேக்கறீங்களா? பெங்களூர்ல நைட் சாப்பிட ஹோட்டல் வாசல்ல நிக்கறப்ப பசங்க மோரிஸ் வாழைப்பழம் வாங்க வெலை கேட்டாங்க. அவன் கன்னடத்துல சொன்னான். நான் இருங்கடா, நான் பேரம் பேசறேன்னு சொல்லி, "எஷ்டு"ன்னு கேட்டேன், அவன் ஒந்து ஹத்து பைசா ன்னு சொன்னேன். நான் ஹத்து பைசாக்கு ஹத்து கொடுதியான்னு கேட்டேன். அவன் கோவம் வந்து என்னை தொரத்த நான் ஒரே ஓட்டம் நடு ரோட்ல. வாத்தியார் கிட்ட செம அடி. ரோஷம் எல்லாம் அப்பறம் வெச்சுக்கலாம்னு சாப்பாட்டை முடிச்சோம். தயிர் கட்டித் தயிர். அருமையா இருந்தது. நாங்க ஒரு நாலு பேரு சீக்கிரம் சாப்பிட்டோம். நான் வாங்கடா நம்ம பஸ்சுல போய் உக்காந்துக்கலாம்னு அவங்களைக் கூட்டிட்டுப் போயிட்டேன். சாப்பிட்டு முடிஞ்சவுடனே ஆளுங்களை எண்ணிப் பாத்திருக்கார் வாத்தியார். 4 பேர் இல்லை. ரொம்ப நேரம் தேடியிருக்காங்க. யாரோ 4 பசங்க பஸ் பக்கம் போனாங்கன்னு  சொல்லவே பஸ்சுல வந்து பாத்தா நாங்க இருந்தோம். கோவத்துல என்ன மட்டும் பின்னி எடுத்துட்டார் அருளானந்தம் சார். எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு.

கைச்செலவுக்கு குடுத்த பணத்துல நான் 4 முலாம்பழம் வாங்கினேன். ஃபுட்பால் சைஸ் ஒண்ணொண்ணும். ஒண்ணு  50 பைசாதான். அதெல்லாம்  ஒரு பனியன் துணிமாதிரி ஒரு துணிலதான் கட்டித்தருவாங்க. அதை பஸ் கம்பில முடிச்சு போட்டு கட்டி வெச்சேன். அருளானந்தம் சார் ரொம்ப டயர்ட் ஆயிட்டாரு, எங்களையெல்லாம் கட்டி மேச்சு. நான் கீழே படுத்துக்கறேன்னு ஒரு துணியை விரிச்சு கீழே படுத்துட்டாரு. நல்ல தூக்கம் வேற அவருக்கு. மணி பன்னெண்டாச்சு. நம்ம வேலையைக் காட்டவேண்டிய நேரம் வந்தாச்சு. நான் கட்டித்தொங்க விட்டிருந்த 4 பழங்கள்ல அவர் தலைக்கு நேர இருக்கற ஒண்ணை அவுத்து விட்டேன். அது நல்லா பழுத்துருந்த பழம் வேற, "டிஸ்யூங்" ன்னு அவர் தலைல விழுந்து அப்படியே அவர் மூஞ்சில்லாம் அப்பிக்கிச்சு. அவர் கத்திகிட்டே எழுந்தாரு. நான் வேணும்னே பயத்துல கத்தறா மாதிரி அய்யோ பேயின்னு பலமா கத்தவே, ட்ரைவர்லேர்ந்து தூங்கிட்டிருந்த அத்தனை பேரும் அலறிட்டாங்க.  அதுல அவர் இன்னும் திகில் ஆயிட்டாரு. அப்பறம் பஸ்ஸ நிறுத்தி அவருக்கு மூஞ்சி கழுவ தண்ணி குடுத்து, ஒரு ஜன்னலோர சீட்ல தூங்க வெச்சோம். அப்பறம் நான் தூங்கினேங்கிறீங்க. மனசுக்குள்ள எம் என் நம்பியார் மாதிரி சிரிச்சிட்டே இல்ல வந்தேன் ஊருக்கு.


அதைத் தவிர வேற சுவையான விஷயம் இல்ல. அடுத்து 8 ஆவது. அதுலதான் ஸ்ரீதர் வந்து சேர்ந்தான். இன்னி வரைக்கும் தொடர்புல இருக்கற ஃ பிரண்டுல ஒருத்தன். அந்த வருஷம் எங்களுக்கு பப்ளிக் எக்ஸாம். அப்பல்லாம் அப்படிதான். எனக்கு எக்ஸாம் சமயத்துல பயங்கர டைபாயிடு . அப்பல்லாம் 45 நாள் வைத்தியம் அதுக்கு. என்னால எக்ஸாம் எழுத முடியல, ஒரு டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுத்துட்டேன். அப்ப எங்க ஃபேமிலி ஃபிரண்ட் சரோஜா டீச்சர் (Anandhakumar Mak​, YOUR MOTHER ONLY) வந்தாங்க, அவங்க கிட்ட எங்க அக்கா அண்ணன் எல்லாம் அவங்க வாங்கின சர்டிபிகேட் கப் எல்லாம் காமிச்சிட்டு இருந்தாங்க. நீ ஒண்ணும் வாங்கலியானு  அந்த டீச்சர் என்னைக் கேட்டப்ப, நான் டாக்டர் சர்டிபிகேட் வாங்கியிருக்கேன்னு சொன்ன உடனே சிரிச்சுட்டாங்க.

9 ஆவதும் அவ்வளவு சுவாரஸ்யமில்ல. என்ன பழையபடி மெயின் ஸ்கூலுக்கே போனதுதான். 10, 11 ல நடந்த சுவையான விஷயங்கள் அடுத்த பதிவில்.

(தொடரும்)


Friday, 30 June 2017

பால்குடி டேஸ் - 10 PAALKUDI DAYS
(தருமபுரி நினைவுகள்)

ஆறாவது லீவுல எங்களுக்கு பூணூல் போடறதுன்னு முடிவு செஞ்சாங்க. மொதல்ல எங்க ஊர் சத்திரத்துல எளிமையா முடிச்சிலாம்னு நினைச்சாங்க. அப்பறம் எங்க அம்மா "இது பசங்களுக்கு செய்யற முக்கியமான ஃபங்க்ஷன். அதுனால வீட்டுல கொஞ்சம் பெரிசா எல்லாரையும் கூப்பிட்டு செஞ்சுடலாம்னு சொன்னாங்க. அப்படியே முடிவாச்சு. அப்பல்லாம் ஒரு வாரம் முன்னாடியே ஒரம்பறைங்க (தருமபுரியில் உறவுமுறைக்கு வழக்குச் சொல்). வந்துடுவாங்க. எங்க சித்தப்பா, சித்தி குடும்பமும் அப்படியே வந்தாங்க. அவங்களுக்கு நாலு பசங்க. அதுல ரெண்டு பேருக்கு ஏற்கெனவே பூணல் போட்டாச்சு. மூணாவது பையனுக்கு எங்க கூட போட்டுடலாம்னு முடிவு பண்ணாங்க. எங்க அப்பாவும் செலவோட செலவா இருக்கட்டும், மூணு பேருக்கு போடக்  கூடாது, அதுனால ஒன் கடைசிப் பையனுக்கும் சேத்து நாலா போட்டுடலாம்னு சொல்லிட்டாரு. அந்தப் பையனுக்கு மூணரை  வயசுதான்.  எல்லாருக்கும் ஒரே ஜாலி.

மறுநாள் பூணல். அதுக்கு முன்னாடி நாள் ராத்திரி நல்ல மழை. நாங்க பகல்ல வீட்டுல எல்லாம் வேலையா இருந்தப்ப, தெருக்கடைசில தேங்கியிருக்கற தண்ணில குதிச்சு உருண்டு புரண்டு விளையாடினோம். அங்க எதிர் வீட்டுல ஒரு அய்யங்கார் இருந்தாரு. அவர் எங்களை விளையாடக் கூடாதுன்னு மெரட்டினாரு. நாங்க விளையாட்டு சுவாரசியத்துல அவரைக் கண்டுக்கல. போங்க மாமான்னு சொல்லிட்டு வெளையாடிட்டிருந்தோம். அது அவருக்கு அவமானமா போச்சாம். வெளில கெளம்பிட்டிருந்தவர், போற வழில எங்க வீட்டுல பசங்களை நான் தண்ணியில வெளையாடாதீங்கன்னு சொன்னதுக்கு என்னைப் போய்யான்னு மரியாதை இல்லாம பேசறாங்கன்னு பத்த வெச்சுட்டு போயிட்டாரு. எங்க பாட்டி எப்பவுமே இது மாதிரி கம்ப்ளயின்ட் வந்தா என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டாங்க. எங்களை செல்லமா வளக்கறாங்கன்னு கொஞ்சம் ஆங்காரம் ஜாஸ்தி. எங்கம்மாவ நல்லா அடிக்க சொல்லித் தூண்டி விடுவாங்க. அன்னிக்கும் அப்படிதான் தூண்டி விடவே, மறுநாள் ஃபங்க்ஷன் வேலைல மும்முரமா இருந்த எங்க அம்மா, கோவத்துல ஒரு தடி எடுத்து எங்களை வெளுவெளுன்னு வெளுத்துட்டாங்க. அது நல்ல வார்னிஷ் போட்ட தடி. முனைல பாம்பு மூஞ்சி. அதுக்குப் பேரே பாம்புத் தடிதான். கண்ணுமண்ணு தெரியாம அடிச்சதுல என் வலதுகைல (5 ஆவது படிக்கும்போது ஒடஞ்சு Z மாதிரி ஆச்சே, அதே கை) நல்ல அடிபட்டு ஆரஞ்சு சைஸுக்கு வீங்கிடுச்சு. பூசை போட்டு எல்லாரையும் படுக்க சொல்லிட்டாங்க. அப்பறம் மதியம் எங்க அம்மா வந்து சாப்பிடக் கூப்பிட்டாங்க. நான் வரமாட்டேன், நீ ஏன் என்ன அடிச்சே, நாங்க அப்படி சொல்லலைன்னு சொன்னேன். எங்க அம்மா வீங்கியிருந்த என் கையைப் புடிச்சு விட்டு அழுதாங்க. அவங்க அழுகையைப் பார்த்தவுடனே என் புடிவாதம் எல்லாம் போயிடுச்சு. அம்மா அழாதேம்மா, எனக்கு வலிக்கலன்னு அவங்களை ஆறுதல் செஞ்சு சாப்பிட்டேன்.

மறுநாள் பூணல் போட்டாங்க, வீடு நெறய சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, எங்க ஃபிரெண்ட்ஸ்னு சரியான கூட்டம்.  பிரும்மோபதேசம் செஞ்சு வெச்சாங்க. அதை விட பெருசுங்க எல்லாரும், "அடேய் பசங்களா, தினமும் 3 தடவை சந்தியாவந்தனம் பண்ணனும், 108 தடவை காயத்ரி மந்திரம் சொல்லணும்னு செஞ்ச ஒபதேசம்தான் பெரிய ஒபதேசம்.

சந்தியாவந்தனம் சொல்லிக் கொடுக்க எங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கற அய்யங்கார் மாமா முன்வந்தாரு. அவர் எல்லாத்துலயும் எக்ஸ்பர்ட். அன்னிக்கு சாயங்காலமே ஆரம்பிச்சுட்டாரு. நம்மளே செஞ்சா 20 நிமிஷம்தான். ஆனா மொதோ மொதல்ல செய்யறதால சொல்லிக்கொடுக்க ஒண்ணரை மணி நேரம் ஆச்சு. அந்த சின்னப் பையனுக்கு தூக்கம் கண்ணை சொக்கிச்சு, பாவம். அதை பாத்த எங்க சித்தப்பாவுக்கு அவமானமா போயிடுச்சாம், தன் பையன் மந்திரம் சொல்லாம தூங்கி வழியறான்னு. (என்னமோ இவர் டெய்லி செஞ்சா மாதிரி)  துர்வாச முனி, சரியான கோவத்துல பந்தல்ல கட்டியிருந்த வாழைமரத்திலேர்ந்து மட்டையை உரிச்சு அவனை விளாசு விளாசுன்னு விளாசிட்டாரு. பாவம், அவன் அடி தாங்காம "பூர்புவஸ்ஸுவஹ: தத் ஸ விதுர் வரேண்யம்" னு சொல்லிட்டே அங்கியும்  ஓடினதப் பாக்க எங்களுக்கு பரிதாபமா இருந்துச்சு.. அவனை இழுத்து வந்து ஒத்தக் கையால புடிச்சுக்கிட்டு நல்லா பின்னி எடுத்துட்டாரு. எங்க அப்பா வந்து சொன்னப்பறம்தான் நிறுத்தினார். எங்களுக்கு ரொம்ப பாவமா இருந்துச்சி. 

ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு எல்லாம் அவங்க அவங்க ஊர் போய் சேந்தாங்க. எங்க அப்பா லீவுல சவுத்ல இருக்கற கோவில் எல்லாம் போய் வரலாம்னு முடிவு பண்ணாரு. (ஒன்லி  தமிழ் நாடு & கேரளா). ஒரு அம்பாஸடர் கார் புக் பண்ணார். எங்களுக்கு ஒரே சந்தோஷம். மொதோ தடவையா கார்  சவாரி,அதுவும் ஊர் ஊரா. 

கெளம்பற நாள் வந்தது. காலைல ஒரு SHOCKING NEWS. பெட்ரோல் வெல 85 காசுலேர்ந்து 1.15 ஆயிடுச்சு. (அப்ப அது பெரிய விஷயம். பட்ஜெட்ல சரி அடி). என்ன செய்ய, வந்துதானே செட்டில் செய்யப் போறோம்னு கெளம்பியாச்சு. நாங்க பசங்க மூணு பேரு, எங்க அப்பாஅம்மா, பாட்டி, எதிர்வீட்டு மாமி ஒருத்தங்க, அவங்களுக்கு யாரும் கெடையாது. எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. ஏழு பேர் + ட்ரைவர், ஒரு அம்பாஸடர்ல, இதுல அந்த மாமி கொஞ்சம் தாட்டியானவங்க வேற. எப்படித்தான் போயிட்டு வந்தோமோ, ஒரு வாரம் டூர்! டிக்கில ஒரு பம்ப் ஸ்டவ், தேவையான அரிசி, ரவை, பருப்பு வகைகள், போடு வகைகள் னு சமைக்க தேவையான சாமான்கள். (எனக்கு நாங்க போன கோயில்கள் முழுக்க நினைவில்லை, நெனைவு இருக்கறது மட்டும் சொல்றேன்.)

முதல்ல போனது குருவாயூர். எங்க அப்பாவுக்கு குருவாயூரப்பன் மேல ரொம்ப பிரியம். அங்க எங்க அண்ணனுக்கு எடைக்கு எடை வெல்லம் தர்றதா வெகு நாள் வேண்டுதல். அதை நிறைவேத்தினோம். குருவாயூரப்பன் அழகா இருந்தாரு. நல்ல தரிசனம். அங்க ஒரு பிரசாதம் தந்தாங்க. சர்க்கரைப் பொடி. நல்ல இருந்துச்சி. கொஞ்சம்தான் கிடைச்சுது. தரிசனம் முடிச்சு தங்கியிருக்கற ரூம் வந்தோம். சமையல் எல்லாம் ரெடி ஆச்சு. நான் கொஞ்சம் தூங்கி எழுந்து வந்தேன், எல்லாம் தயாரா எடுத்து வெச்சிருந்தாங்க. ஒரு பாத்திரத்துல கோயில்ல தந்த அந்த சர்க்கரைப் பொடி பிரசாதம்! ஆஹா! லபக்குன்னு ஒரு பெரிய கட்டியை (எலுமிச்சம்பழம் அளவு) எடுத்து எல்லாரும் டேய் திங்காத திங்காதன்னு கத்தக் கத்த வாயில போட்டு விழுங்கிட்டேன். அப்பா! ஒரே கரிப்பு, ஒமட்டல் வந்திடுச்சு. டேபிள் சால்ட்டு! ரொம்ப நாள் என் அண்ணனும் அக்காவும் இதை சொல்லி சொல்லி கேலி செய்வாங்க.

அங்கேர்ந்து காலடி போனோம். ஆதி சங்கரர் அவதரிச்ச புண்ணிய பூமி. கோயில் போறதுக்கு முன்னாடி அங்க ஓடற ஆத்துல குளிச்சிட்டு போனோம். அன்னிக்குத்தான் எனக்குத் தெரியும் எங்க அப்பாவுக்கு நல்லா நீச்சல் தெரியும்னு. நல்லா ரொம்ப தூரம் நீந்தி போயி வந்தாரு. (ஆனா அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது, கத்துக்கிட்டப்ப ஸ்கூல் செவுத்துல மோதி முட்டில அடி, சீ மனுஷன் ஓட்டுவானா இதன்னு விட்டுட்டாரு)

அங்கிருந்து திருவனந்தபுரம்.  திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு வழி கேட்டா எல்லா மலையாளிகளும், வாயாலவோ , இல்ல கைநீட்டியோ பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. தலை ஆட்டிதான். தலையை கீழேருந்து மேலுக்கு ஆட்டி இடது பக்கம் ஓடிச்சா, நேர போயி இடது பக்கம் திரும்பணுமாம். தமிழன்னா அவ்வளோ அலட்சியம். எங்களுக்கு வழி கொஞ்சம் சிரமமாயிடுச்சி  இருந்தாலும் விசாரிச்சிட்டேதான் இருந்தோம். ஒருத்தர் தமிழ்ல பேசினார், பாலக்காடாம், நான், வழி காட்டேறேன்னு கார்ல ஏறி உக்காந்துட்டாரு.  (கடைசில பாத்தா அவரும் கோவிலுக்குத்தான் போறாரு, ஓசில கார் சவாரி) ஏற்கெனவே இட நெருக்கடி. ஏறி ஒக்காந்தவர் கோவிலோட அருமை பெருமைகளை சொல்லிட்டே வந்தாரு. திடீர்னு "வண்டி திரும்பட்டும்"னு வலது பக்கம் கையை நீட்ட ட்ரைவர் மூஞ்சில அடி. அதுல இவர் திரும்ப இடம் வந்தப்பறம்தான் சொல்றாரு. ட்ரைவர் ஒகேனக்கல், ஏற்காடுன்னு வண்டி ஒட்டி பழக்கப்பட்டவரு. அதுனால நல்லா வீலை ஒடிச்சி திருப்பினாரு. மறுபடியும் அவரோட கதையை ஆரம்பிச்சுட்டாரு. திடீர்னு வண்டி நிக்கட்டும்னாரு. சடன் பிரேக்தான். என்னன்னு பாத்தா கோவில் தாண்டி வந்துட்டோம். அவரு இறங்கிக்கிட்டாரு. நாங்க ரிவர்ஸ் எடுத்து கோவில் போயி வந்தோம். 

அங்கிருந்து திருச்சூர், கன்யாகுமரி, சுசீந்திரம் கோவில் எல்லாம் போனோம். எனக்கு கோவில்ல அவ்வளோ இன்டரஸ்ட் இல்ல, ஏன் ட்ராவல்லயே இன்டரஸ்ட் கிடையாது. ஆனா கன்னியாகுமாரி. சுசீந்திரம் கோவில் எல்லாம் நல்லா இருந்தது. கன்யாகுமாரில விவேகானந்தர் பாறைக்கு போட்ல போனது நல்ல இருந்துச்சு. அங்க தங்கி சூரிய அஸ்தமனம், மறுநாள் காலை சூரிய உதயம் எல்லாம் பாத்துட்டு தான் சுசீந்திரம் கிளம்பினோம். சுசீந்திரத்துல கோயில்ல நல்ல சிற்ப வேலைப்பாடுகள். யாளிங்கற சிங்கமுகம் கொண்ட ஒரு அதிசய விலங்கு. அப்பறம் சப்தஸ்வர தூண்கள். அங்க உள்ள ஏழு தூண்களைத் தட்டினால், சரிகமபதநி ஓசை கேட்கிறது. அவ்வளவு தொழில் நுட்பம்.

அங்கிருந்து மதுரை, அன்றிரவு மீனாட்சி கோவிலுக்கு போய் வரும்போது எங்க அப்பாவுக்கு லோ பிபி. வர்ற வழியெல்லாம் சத்தம் போட்டுக்கிட்டே வந்தார். அப்பறம் ரூம் வந்து ரெஸ்ட் எடுத்தவுடன் பரவாயில்லை, மறுநாள் பழமுதிர்சோலை போயிட்டு வந்தோம். ரொம்ப நல்லா  இருந்தது. ஆனா எனக்குதான் எப்படா ஊர் வந்து சேருவோம்னு ஆச்சு. மதுரைலேர்ந்து திருச்சி வழியா ஊர் வந்து சேந்தோம். இன்னும் சில கோயில்கள் நினைவில் இல்லை. ஊர் வந்து வீட்டுக்குள் நுழைந்ததும்தான் "அப்பாடா" என்றிருந்தது.

"சொர்கமே என்றாலும், அது தருமபுரி போலாகுமா?"

தொடரும்
.