பால்குடி டேஸ் - 7 (PAALKUDI DAYS)
தருமபுரி நினைவுகள்.
4ஆவதுலேர்ந்து 5 ஆவது போயாச்சு. புதுத்துணியா? மூச்! அதான் 5 வருஷத்துக்கு வராப்பல போன வருஷமே தெச்சாச்சே. இனிமே தீபாவளி, பொங்கலுக்குத்தான். பொறந்தநாள்ங்கிற பேச்செல்லாம் அப்ப கெடையாது. அன்னிக்கு நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா ஒரு பாயசம் வெப்பாங்க. ரொம்ப அதிர்ஷ்டம் இருந்தா, சாயங்காலம், தேங்காய் பர்பி செய்வாங்க. அவ்வளோதான்.
5 ஆம் க்ளாஸ்ல கொஞ்சம் இங்கிலிஷ் நெறைய சொல்லித் தர ஆரம்பிச்சாங்க. மொதல்ல கொஞ்சம் ஜாலியாதான் இருந்துச்சி. ஆனா க்ராமர் னு சொல்லித்தர ஆரம்பிச்சாங்க (ரொம்ப பெருசா நெனச்சிடாதீங்க, இதெல்லாம் க்ராமர்ல சேத்தியான்னு இப்ப பசங்க நக்கலா கேப்பாங்க, அது மட்டுமில்ல என்னவோ அந்த காலத்துலன்னு நாங்க படிச்சப்பன்ன்னு எதுக்கெடுத்தாலும் சொல்வீங்களேன்னு மானத்தை வேற வாங்குவாங்க)
I, HE, SHE எல்லாம் சொல்லித்தர ஆரம்பிச்சாங்க (மெய்யாலுமே அப்பத்தான் சொல்லித் தர ஆரம்பிச்சாங்க, அதுவரை RHYMES தான்). ஓகே I னா நான், HE னா அவன், SHE னா அவள் அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டோம். அடுத்ததுதான் மண்டை காய ஆரம்பிச்சிச்சு. GENDER - பால் - சொல்லித்தர ஆரம்பிச்சாங்க. நமக்கு தமிழிலேயே, ஆண்பால், பெண்பால், பலவின்பால் புரியல, இதுல இங்கிலீஷிலே வேறயா? நமக்கு தெரிஞ்சதெல்லாம் பசும்பால், எருமைப்பால் தான். (அப்ப ஆவின் பால் எங்க ஊர்ல கெடையாது)
HE - ஆண்பால், SHE - பெண்பால்ன்னு சொன்னாங்க, சரின்னு சொன்னோம். அடுத்தது. HIS (அவனுடைய), அதுக்கு அவளுடையன்னு சொல்ல HER ன்னாங்க. என்னடாதுன்னு யோசிச்சோம். துளியும் யோசிக்க விடாம HIM க்கும் HER தான்னு சொன்னாங்க. இதுல YOU பரவாயில்லை. அதுக்கு YOUR தான், கொஞ்சம் நியாயம் இருக்கு. அப்ப என்னுடையன்னு சொல்ல என்னன்னு கேட்டேன் டீச்சர் கிட்ட. MY ன்னு சொன்னாங்க. அடுத்து என் புத்திசாலித்தனத்தை டீச்சர்கிட்ட காட்டினேன் பாருங்க, டீச்சர் அசந்து போயிட்டாங்க. அப்ப பொண்ணுங்க எல்லாம் MY க்கு பெண்பால்ல என்ன சொல்வாங்கன்னு கேட்டேன். நல்ல வேளை அந்த டீச்சர் ரொம்ப நல்லவங்க. அடிக்கல்லை திட்டலை, சிரிச்சுட்டாங்க, அதுக்கும் MY தான் னு சொன்னாங்க. அது எப்படின்னு கேட்டதுக்கு, அதெல்லாம் அப்படிதான், உனக்கு அப்பறம் புரியும்னு ஒக்காத்தி வெச்சுட்டாங்க. நல்ல வேளை. க்ளாஸ்லயே நானும் சுப்ரமணியும்தான் இங்கிலீஷிலே கிங்கு. அதனால மத்தவங்க புரியாம பாத்துட்டிருந்தாங்க.
சரி போனாப் போவுது, டீச்சர் சொன்னாங்களேன்னு அதை அப்படியே மனப்பாடம் பண்ணோம். ஆனா அடுத்து தொடர்ந்து வெடிகுண்டு போட ஆரம்பிச்சாங்க. ஒருமை பன்மை இங்கிலீஷிலே சொல்லித்தர ஆரம்பிச்சாங்க (அப்பல்லாம் இங்கிலீஷ தமிழ்லதான் சொல்லித் தருவாங்க, 11ஆம் வகுப்பு வரை அப்படிதான்) மொதல்ல SINGULAR ஓட S சேத்தா PLURAL னு சொல்லித்தந்தாங்க, BOY, BOYS, GIRL, GIRLS, TOY, TOYS, எல்லாம் ஓகே, HOUSE, HOUSES அப்படின்னு சொன்னாங்க, ஆனா ,MOUSE க்கு MOUSES இல்லையாம், MICE ஆம். இது போல இன்னும் நெறய கொளறுபடி. HE க்கு HIM நா SHE க்கு SHIM தானே! HER ஆம். சத்தியமா பொண்டாட்டி சோறுபோடாத தொரத்தி விட்ட எவனோதான் இங்கிலீஷ கண்டு பிடிச்சிருக்கணும். மத்தவங்க திண்டாடட்டுமுன்னு.
மனசத் தேத்திக்கிட்டு சொல்லித்தந்ததை அப்படியே நெட்டுரு போட்டோம். திடீர்னு எனக்கும் சுப்ரமணிக்கும் ஒரு டவுட்டு. A, B, C, D மொத்தம் 26 எழுத்துன்னு தெரியும். ஆனா நமக்கு அத்தனையும் தெரியுமான்னு ஒரு சந்தேகம். சரின்னு சொல்லிப் பார்த்தோம். எத்தனை தடவை சொன்னாலும் 22 தான் வந்துச்சு, அசிங்கமாய் போயிடுச்சி, சரி இப்படியே விட்டுடக் கூடாதுன்னு அன்னிக்கே ரெண்டு பேரும் வீட்டுல கட உரு அடிச்சோம். (அடிச்சதுல இன்னி வரை மறக்கலேன்னா பாத்துக்கங்களேன்) அப்பறம்தான் நிம்மதி ஆச்சு.
இப்படியே நல்ல புள்ளையா ஸ்கூல்ல படிப்பு, வீதில வெளையாட்டுன்னு போயிட்டிருந்துச்சி. அப்ப வீதில டயர் ஓட்டுவோம். அதை வீட்டுக்குள்ள வெக்க எங்க பாட்டி விட மாட்டாங்க. அவ்வளோ ஆச்சாரம். அதுனால அதை பக்கத்து வீட்டு ஓட்டு மேல போட்டு வெப்போம். அவங்க வீட்டு ஓடு கொஞ்சம் தாழ்வா இருக்கும் சுலபமா எடுத்துடலாம். ஒரு நாள் அப்படி போட்டுட்டு, அவங்க வீட்டு ஜன்னல்லேர்ந்து கீழே இறங்கறப்ப கால் தடுக்கி விழுந்து வலது கை மணிக்கட்டுக்கு மேலே உடைஞ்சு போச்சு, அப்படியே Z மாதிரி ஆயிடுச்சி. சரியான வலி, வீட்டுல அப்பா, அம்மா கடைக்கு போயிருந்தாங்க நான் எங்க அக்கா, அண்ணன் 3 பேர் மட்டும்தான் இருந்தோம். அண்ணன் எங்க அப்பா அம்மாவை கூப்பிட போயிட்டான். பாவம் எங்க அக்கா என் கைய புடிச்சிட்டே அழுததுட்டு இருந்தாங்க. (ரொம்ப பாசம் ஜாஸ்தி, இன்னும் அப்படிதான், அண்ணன் வேற டைப், நான் இழுத்து விடற சண்டைல எல்லாம் அடி வாங்கிட்டு நிக்கற வீர ஜாதி அவன்).


அப்பா வந்து டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க, (ஹை, குதிரை வண்டில, ஹை ஹைன்னு போனேன்). அப்பல்லாம் இது மாதிரி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் ரெடிமேடா கெடைக்காது. டாக்டர்தான் மெடிக்கல் ஷாப்ல பௌடர் வாங்கி வந்து அப்பப்ப தயார் செய்யணும். அதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்ன்றதால டாக்டர் ஒரு அட்டைப்பெட்டியை பிரிச்சு, ஒரு மர ஸ்கேல் வெச்சு ஸ்ட்ரெயிட்டா கட்டுப் போட்டு அனுப்பிச்சிட்டாரு. அப்பறம் ராத்திரி 9 மணிக்கு வரச்சொல்லி, மாவுக்கு கட்டு போட்டு அனுப்பினார், 45 நாள் கழிச்சுத்தான் பிரிக்கணும்னு சொல்லிட்டாரு, ஆனா, ஸ்கூல் 3 நாள்தான் லீவு போட முடிஞ்சுது, ஸ்கூல்ல என்னை மட்டும் தனியா ஒக்கார வெச்சுட்டாங்க (ஒரு ரெண்டு 3 பொண்ணுங்க என்னை பரிவா பாத்தது வேற விஷயம்).
டீச்சர் சொல்லிட்டாங்க, நீ இந்த சமயத்துல கணக்கு நல்லாக் கத்துக்கணும். அப்பத்தான் பாஸ் போட முடியும், இல்லேன்னா ஆறாவது போக முடியாதுன்னு. சரின்னு கஷ்டப்பட்டு நல்லாக் கத்துக்கிட்டேன். கை சரியாகவும் கொஞ்ச நாள்ல முழுப் பரீட்சை வரவும் சரியா இருந்ததால ஸ்கூல்ல படிப்புலதான் கவனம், வேற ஒண்ணும் குறும்புக்கு வழி இல்ல. வீட்டுலயும் வெளில விளையாட விடல, கை ஒடிஞ்சு அப்பத்தான் சரியானதால. சரின்னு படிப்புல கவனம் செலுத்தி 5 ஆவது பாஸ் செஞ்சோம்.
அடுத்து 6ஆவது. ஹைஸ்கூல் போறோமில்லை.
(தொடரும்.)




