Wednesday, 22 March 2017

பால்குடி டேஸ் -6 (PAAL KUDI DAYS)
தருமபுரி நினைவுகள்.

ஹா, நாலாம் நாலாம் திருநாலாம்னு நாலாம் க்ளாஸ் போயாச்சு. முதல் நாள், லீவில் அப்பா தைத்து தந்திருந்த டிரௌசரா இல்லை மாவு மெஷினுக்கு மாட்டுற துணியான்னு கண்டே புடிக்க முடியாத மாதிரி ஒரு ட்ரஸ் மாட்டிக்கிட்டு சந்தோஷமா போனேன். (தருமபுரி ஸ்டோர்ஸ், இல்லேன்னா துரை துணிக்கடைலதான் துணி எடுப்பாரு. வாசல்லயே தையல் மெஷினோட உக்காந்திருக்கற சுந்தரம்தான் எங்கள் ஆஸ்தான டைலர். அவர் தைக்கறதே ரொம்ப நீளமா இருக்கும், இதுல எங்க அப்பா வளர்ற பசங்க இன்னும் கொஞ்சம் லெங்த் வைன்னு சொல்லிடுவார், இதுல லூசா வேற இருக்கும். அரணாக்கயிறை டிரௌசர் மேல விட்டுக்கிட்டு சட்டையை அதுமேல மூடி மறைச்சுக்குவோம், பெர்முடாஸ் கண்டு பிடிச்சது அமெரிக்காக்காரன் இல்ல, எங்க ஊரு சுந்தரம்தான். எங்க ஊருக்கு தேரு பாக்க வந்த ஒரு அமெரிக்காக்காரன் அதை காப்பி அடிச்சு ஒரு ஃபேஷனா மாத்திட்டான்).

அன்னிக்கு நிஜமாவே திருநாள்தான். க்ளாஸ் ஆரம்பிச்ச. கொஞ்ச நேரத்துல B உஷா ராணின்னு ஒரு பொண்ணு சேந்துச்சு (என்ன ஒரு ஞாபக சக்தி!). அதுவரைக்கும் இருந்த,அமுதா, ராதிகா, மஞ்சுளா எல்லாம் ஓரம் கட்டிட்டாங்க எங்க பசங்க. க்ளாஸ் முழுக்க அந்தப் பொண்ணைப் பத்தித்தான் பேச்சு. ஒரு ரெண்டு நாள் ஸ்வாரசியமா போச்சு.

நாலாம் க்ளாஸ் தான் என் பால்குடி டேஸிலேயே நான் மறக்கற விரும்ப ஒரு காலம். செய்யாத தப்புக்கெல்லாம் அடி வாங்குவேன். அந்த டீச்சரும் எங்களுக்கு தெரிஞ்சவங்கதான். அவங்களுக்கு என்மேல ஏதேனும் வெறுப்பா, இல்ல எங்க குடும்பத்து மேலேயே வெறுப்பான்னு தெரியல, யாராவது என்னைப் பத்தி எது சொன்னாலும் அடி பேத்துடுவாங்க. அதுனாலயே அவங்களைக் கண்டா வெறுப்பாயிடும். இப்ப மாதிரி தமிழுக்கு ஒரு டீச்சர், கணக்குக்கு ஒரு டீச்சர்னு எல்லாம் அப்ப கெடையாது, ஒரே டீச்சர்தான், அவங்களைக் கட்டிக்கிட்டுதான் அழணும் நாள் பூரா. ரொம்ப கஷ்டமான காலம் அது. சோதனையா உடம்புக்கு வேற எதுவுமே வரல லீவு போடவும் முடியாம.

இதுல இன்னொரு சோதனை. கொஞ்சம் மொரட்டுப் பசங்க எல்லாம் வந்து சேந்தாங்க. எல்லாரும் எம் ஜி ஆர் ரசிகங்க. அதுவரைக்கும் என் கூட நல்லபடி பழகிட்டிருந்த சில நண்பர்கள் அவங்க கூட சேந்துட்டாங்க. அவங்களும் எம் ஜி ஆர் ரசிகங்க. டெயிலி இடைவேளைல என்னை செவுத்துல சாய்ச்சிப் புடிச்சுக்கிட்டு சிவாஜி ஒழிக, எம்ஜியார் வாழ்க ன்னு சொல்ல சொல்லுவாங்க, நான் சிவாஜி வாழ்கன்னுதான் சொல்லுவேன். உடனே குத்தோ குத்துன்னு குத்துங்க. வலி தாங்க முடியாது. ஆனா சின்ன வயசுலேயே எனக்கு வீம்பு ஜாஸ்தி. எத்தனை குத்தினாலும் சிவாஜி வாழ்கன்னுதான் சொல்வேன். இதனாலேயே நான் தீவிர சிவாஜி பக்தன் ஆயிட்டேன். (இந்த தொல்லை 8 ஆம் க்ளாஸ் வரை தொடர்ந்தது. எட்டாவதுல இது மாதிரி என்னை அடிச்சப்ப நான் கோபம் வந்து ஒரு பெரிய பையனை தலைக்கு மேலே தூக்கி ரெண்டு சுத்து சுத்தி ஸ்டேஜிலேர்ந்து கீழே விசிறி எறிஞ்சேன், அந்த பையனுக்கு இடுப்புல நல்ல அடி. அதுலேர்ந்து யாரும் நம்ம கிட்ட வம்பு வெச்சிக்கிறதுல்ல)
அண்ணாதுரை , எம் ஜி ஆர் என்று வகுப்புல பயங்கர போட்டி நடக்கும். நான் என்ன அடி வாங்கினாலும் சரின்னு
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
அப்ப தமிழகத்துல தீவிர அரசியல் மாற்றம் வந்த சமயம். காமராஜர், சிவாஜி - எம்ஜியார் சிண்டு பறக்கட்டுமே
காமராஜர் பார்த்து சிரிக்கட்டுமே
அண்ணாதுரை பார்த்து அழுகட்டுமே "

என்றும். பிறகு "ஆமவடை, உளுத்த வடை, அண்ணாதுரை பல்லை உடை" என்றும் கோஷம் எழுப்புவேன், அடி தாங்காது. எதையும் தாங்கும் இதயம் நமது. (எம்ஜியார் மற்றும் அண்ணாதுரை நண்பர்கள் மன்னிக்கவும்,இது சிறுவயதில் நடந்தது,அதே போல் அவர்களும், எம்ஜியாருக்கு பதில் சிவாஜி என்றும் அண்ணாவுக்கு பதில் காமராஜர் என்றும் பாடுவார்கள்)
No automatic alt text available.

கொஞ்சம் குறும்பு செய்ய முடியல, ஏற்கெனவே அடி தானா விழும்.. கொஞ்சம் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்துச்சி. வாய்ப்பாடு 16 வரை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும், அதில் 13 ஆம் வாய்ப்பாடு எப்பவுமே தகராறுதான். அப்படி இப்படி அரசியலும் (!) படிப்புமா வாழ்க்கை ஓடிட்டிருந்தப்ப ஒரு நாள் என்னை ஸ்கூல் டேல வேஷம் கட்ட செலக்ட் பண்ணாங்க. எல்லா மாநில மக்கள் மாதிரி வேஷம் கட்டணும். நமக்கு காஷ்மீர். ஒரு பைஜாமா ஜிப்பா மாட்டி, ஸ்வெட்டர் போட்டு காஷ்மீர்வாசியா மாத்தினாங்க. அதுல என்ன பெருமைன்னு கேக்கறீங்களா? கூட ஜோடி மஞ்சுளா. நெஜமாவே மஞ்சுளா மாதிரியே இருக்கும். (நம்ம கலையுலக ஆர்வத்திற்கு இது ஒரு என்ட்ரினு நினைச்சுக்கிட்டு தலைவர் சிவாஜி கணேசனை மனசுல கும்பிட்டுக்கிட்டு தயாரானேன்). எதாவது நடிக்கவோ, பேசவோ பாடவோ சொல்லுவாங்கன்னு பாத்தா, "காஷ்மீர்" னு சொன்னவொடனே போய் நிக்கணுமாம். அதுக்கு ஒரு பெல்ட் ப்ரைஸ் தந்தாங்க (அது டிரௌசர இறுக்கிக் கட்ட யூஸ் ஆச்சுன்றது வேற விஷயம்) நம்ம நடிப்பு ஆர்வம் அப்பவே புஸ்ஸ்ன்னு ஆயிப்போயிடுச்சி. சரி, பின்னாடி நிஜ மஞ்சுளாகூட நடிப்போம்னு மனச தேத்திக்கிட்டேன். (நல்ல வேளை, நடிக்க வரலைடா சாமி, தப்பிச்சேன்)

இங்க இன்னொன்னு கண்டிப்பா குறிப்பிட்டே ஆகணும். அப்பத்தான் மொதமொதலா வெங்கடராமன் என்கிற ஜீவாவை பாத்தேன். எங்க ஸ்கூல்ல 8ஆம் க்ளாஸ் டீச்சரா இருந்த ஜெயலக்ஷ்மி டீச்சரோட பையன். அப்பாவு நகர் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தான். டீச்சர் பையன்கற பந்தாவோட எங்க ஸ்கூல் டேக்கு வந்தான். என்ன பந்தா. (இருடி, அப்பறம் கவனிச்சுப்போமில்ல)

இப்படியே அரசியலும் அடிதடியுமா காலத்தைஓட்டி 4 ஆவது ஒரு வழியா முடிச்சோம். அப்பறம் அஞ்சாவது பாப்போம்.
(தொடரும்).

No comments:

Post a Comment