Monday, 6 November 2017


பால்குடி டேஸ் 17 - தருமபுரி நினைவுகள்.
இறுதிப் பகுதி.

10 ஆவது பாஸ் பண்ணி 11 ஆவது போயாச்சு. இந்த வருஷம் கொஞ்சம் சீரியஸா படிக்க வேண்டிய வருஷம். அதுனால ஊர் சுத்தறத கொஞ்சம் கொறைச்சுட்டோம் நாங்களாவே. ஆனாலும் க்ளாஸ்ல கலாட்டா செய்யறது நிக்கல. எங்க இன்ஜினியரிங் சைன்ஸ் வாத்தியார் பேர் ரங்கநாதன். (கு.ரங்கநாதன் இல்ல, இன்னொரு ரங்கநாதன்) அவர் அப்பறம்னு சொல்றதுக்கு பதில் பிற்பாடுன்னு தான் சொல்லுவாரு. அதுனால அவருக்கு பிற்பாடுன்னே பேரு. நாங்களும் அவர் ஏதாவது கேட்டா பிற்பாடுன்னே சொல்லுவோம். ஒருதடவை அவருக்கு டவுட் வந்துடுச்சு. நீங்கள்லாம் என்னை கிண்டல் செய்ய பிற்பாடுன்னு சொல்றீங்களா இல்ல நெஜமாவே அப்படிதான் சொல்றீங்களானு கேட்டாரு. மோஹன்னு எங்க செட் பையன் ஒருத்தன், இல்ல ஐயா, தமிழ் ஐயா அப்படிதான் சொல்ல சொல்லிருக்காரு அதான்னு சொன்னான். ஏதோ அரைகுறையா நம்பிட்டாரு.

அவரு வந்த ஒடனே "எல்லாரும் ஓம் ஒர்க் (அப்படிதான் சொல்வாரு) எடுத்து வெளில வைன்னு சொல்வாரு. பிற்பாடு "ஓம் ஒர்க்" செய்யாதவன் எல்லாம் எந்திரிச்சி நில்லு அப்படிம்பாரு (அவரோட தமிழ் அப்படிதான்) பிற்பாடு "எந்திரிச்சி நின்னவன் எல்லாம் இங்க வா"ன்னு கூப்பிடுவார். ஒரு பய போக மாட்டான், அவருக்கு கிட்டப் பார்வை. எதையும் உத்துப் பாத்தாதான் தெரியும். கண்ணுக்கிட்ட வெச்சு உத்துப் பாப்பாரு. அதுனால பின்னாடி நிக்கற பையன் எல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க. சில பேரு வேணும்னே எழுந்து நிப்பாங்க, இவரு என்ன செஞ்சுடப் போறாருன்னு. யாரும் வரலைன்னதும் "உப்போ (இப்ப) நீ இங்க வரியா, இல்ல நான் அங்க வரட்டுமா"ன்னு கேப்பாரு. அவரோட பேச்சு இப்படியேதான் இருக்கும் எல்லாத்துக்கும். அதுனால பையன்களும் அப்படியே பேசுவானுக. நான் கொஞ்சம் மிமிக்ரி செய்வேன். அதுனால என்ன கடைசி பெஞ்சுல கூப்பிட்டு வெச்சுவாங்க இவர் பீரிட்ல (அப்படிதான் அப்ப சொல்வோம் யுவர் ஆனர், இன்னும் சில பேர் பிரீடுன்னு சொல்வாங்க) அவர் வந்து அவரோட வழக்கமான கேள்விங்கள முடிச்சவுடனே நான் அவர் கொரல்ல ஆரம்பிப்பேன். "யூனிஃபார்ம் போடாதவன்லாம் எந்திரி" னு, ஒரு 4, 5 பேரு எந்திரிப்பாங்க. "எல்லாம் இங்க வா"ன்னு சொல்வேன் பிற்பாடு. அதுக்கும் பிற்பாடு "உப்போ நீ யூனிஃபார்ம் போட்டுனு வரியா இல்ல நான் போட்டுனு வரட்டா"ன்னு நான் சொன்ன ஒடனே க்ளாஸே "கொல்"லுனு சிரிக்கும். இவருக்கு எவன் சொன்னான்னு கண்டு படிக்க முடியாது இவரோட ஷார்ட் சைட்னால.

அப்பல்லாம் ஸ்கூல் ஃபைனலா இருந்தா கூட லேப் கிடையாது. சும்மா பிப்பெட், பியூரெட் எல்லாம் எடுத்துட்டு வந்து ஒரு நாள் டெமான்ஸ்ட்ரேட் செய்வாங்க, அதோட சரி. இப்படித்தான் பியூரெட் எடுத்து வந்து அவர் டெமான்ஸ்ட்ரேட் செஞ்சாரு ஒரு வாட்டி. அதுல ஸல்யூஷன் எந்த ரீடிங்க்ல இருக்குன்னு அவரால கரெக்ட்டா பாக்க முடியல, அதுனால என்னைக் கேட்டாரு, நான் கரெக்ட்டா சொன்னேன். அவருக்கு நம்பிக்கை வரல. இன்னொருதனைக் கூப்பிட்டு கேட்டாரு, அவன் தப்பா சொன்னான். இன்னும் ரெண்டு பேரும் இப்படியே சொல்லவே, கடைசில அவரோட நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆல் ஃபிரெடை (ஆல் ஃபிரெடா அவன், ஆல் ஃபிராடு) அவன் சான்ஸே இல்லாத ஒரு ரீடிங் சொன்னான். அவர் நம்பிட்டாரு. எங்களுக்கெல்லாம் கடுப்பு. இப்படியே எங்க கடுப்பு ஏறிக்கிட்டே போச்சு.

ஏன்னா, அவரு ஆல் ஃபிரெடை நம்பித்தான் ஸ்பெஷல் டீ வாங்கியார சொல்லுவாரு. அவன் என்ன செய்வான்னா, சாதா டீ வாங்கி அதுல மாஸ்டர் டீ போட்டு வெளில கொட்டி வெச்சிருக்கற தூள எடுத்து இந்த டீல கலந்து வடிகட்டி எடுத்து வருவான். சார், "இன்னிக்கு டீ நல்லா இக்குதே"ன்னு சொல்வாரு, அதுக்கு அவன் "உங்களுக்காக ஸ்பெஷலா போட சொல்லி வாங்கி வந்தேன்னு சொல்லுவான். சாதா டீ 15 பைசா. ஸ்பெஷல் டீ 20 பைசா. மீதி 5 பைசாக்கு முறுக்கு, வடை இப்படின்னு வாங்கித் தின்னுட்டு வருவான். இது எங்களுக்கும் தெரியாது. நம்ம மோஹன் ஒரு நாள் அவன் கூட போயிட்டு இதை கண்டுக்கினு வந்துட்டான். எங்க கிட்ட சொல்லிட்டான். நாங்க சமயம் வரட்டும்னு வெயிட் பண்ணோம்.

ஒரு தடவ இவர் க்ளாஸு ரொம்ப போர் அடிக்கவே எல்லாம் சத்தம் போட்டு பேசிட்டிருந்தோம். இவர் கோவம் வந்து எல்லாசையும் நல்லா திட்டிட்டாரு. அதோட விட்டிருந்தா பரவாயில்ல. "ஆல் ஃபிரெட பாருங்க, எவ்வளோ நல்ல பையன், நீங்க எல்லாம் அவன மாதிரி இருக்கோணும்"னு சொன்னாரு, உடனே நம்ம மோகன் "எப்படி சார், ஸ்பெஷல் டீன்னு சொல்லி சாதா டீ வாங்கி உங்களை ஏமாத்தறானே, அப்படியா"ன்னு கேட்டான். வாத்தியாருக்கு, முகம் கறுத்துப் போச்சு. கோவத்துல வார்த்தை வரல. "ஆல் ஃபிரெடு, நீதான் நல்ல பையன்னு, நெனச்சேன், உப்பதான் தெரியுது நீ நல்ல பையன் இல்லன்னு" சொல்லிட்டு க்ளாஸ விட்டு வெளிய போயிட்டாரு. (அதுக்கப்பறமும் அவனேதான் டீ வாங்கி வந்ததும், அவன் டீ வெலைய அவனாகவே 25 பைசாவா ஏத்திட்டதும் வேற கத)

ஒரு நாள் இவரு "நாளைக்கி நான் பிரிஸம் மூலம் "ஒளி ஊடுருவல்" (REFRACTION OF LIGHT THROUGH PRISM) பாடம் நடத்தப் போறேன், அல்லாரும் ஆப்சென்ட் ஆகாம வந்துருங்கோ, பிற்பாடு நான் வரல, எனக்குத் தெரியலன்னு சொல்லாதீங்கோ"ன்னு சொன்னாரு. நாங்களும் இது புதுசா இருக்கேன்னு ஆர்வமா வந்தோம். இவருக்கு பீடி குடிக்கற பழக்கம் உண்டு. மிலிட்டரி கிரீன் கலர்ல ஒரு துணிப்பை எடுத்து வருவாரு. அதுலதான் அன்னிக்கு பாடம் நடத்த வேண்டிய புக், சாக்பீஸ், பீடிக்கட்டு எல்லாம் இருக்கும். வந்த ஒடனே மொதல்ல சாக்பீஸ் எடுத்து வெப்பாரு, அன்னிக்கு அவசரத்துல பீடிக் கட்ட எடுத்து வெச்சுட்டாரு. நாங்களும் கவனிக்கல, போர்டுல எதோ எழுதறதுக்கு சாக்பீஸ் எடுக்கறப்பதான் தெரிஞ்சுது அது பீடிக் கட்டுன்னு. அவசரத்துல அவரால அத பைக்குள்ள வெச்சுட்டு சாக்பீஸ எடுக்க முடியல. அப்பறம் என்ன ஒரே தமாஷ்தான். சரி சரி, பாடத்துக்கு வருவோம்னு சொல்லிட்டு பைலேர்ந்து பிரிஸம் எடுத்தாரு. ஒரு பையனை வெளில போயி நிக்க சொன்னாரு, ஒளி ஊடுருவி அவன் பிம்பம் அது வழியா அவர் பிரிஸம் பின்னாடி வெச்சிருக்கிற அட்டைல தெரியும்னு காமிக்கறது அவரோட ஐடியா, ஆனா போன ஆளு நம்ம மோகன்ராஜ். அவன் சும்மா நிக்காம அவர் பிரிஸத்த அட்ஜஸ்ட் செஞ்சிட்டிருக்கிறப்ப பரதநாட்டியம் எல்லாம் ஆடினான். இவருக்கு கடுப்பாயிடுச்சு. யாரும் வெளில நிக்க வேணாம், நான் ஒரு மெழுகுவத்தி கொளுத்தி டெமான்ஸ்ட்ரேட் செய்யறேன்னு சொல்லி பசங்க கிட்ட நெருப்புப் போட்டு கேட்டாரு. நம்ம மோகன் சார், உங்க பையிலேயே இருக்குமேன்னு சொன்ன ஒடனே மறுபடி குபீர் சிரிப்பு. சாருக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. சரின்னு மெழுகுவர்த்தியை கொளுத்தி டெமோன்ஸ்ட்ரேட் செய்ய ஆரம்பிச்சாரு. எல்லாரும் அவரை சுத்தி நின்னுக்கிட்டு குனிஞ்சி பாத்திட்டிருந்தாங்க. எங்க செட்ல ரவிச்சந்திரன்னு ஒருத்தன். ஸ்கூல்லயே பிரபலம். அவ்வளவு நல்லா படிப்பான். அவன் குனிஞ்சு பாத்திட்டிருந்தான். அவன் தலைக்கு மேல மோகன்ராஜ். அவன் லேசா ஒரு ஊது ஊதி மெழுகுவர்த்தியை அணைச்சுட்டான். வாத்தியார் ஏற்கெனவே கடுப்புல இருந்தாரு. ரவிச்சந்திரன்தான் மெழுவத்திக்கிட்ட நின்னிட்டிருந்ததால அவன்தான் அணைச்சுட்டான்னு ஓங்கி ஒரு அறை விட்டாரு அவன் கன்னத்துல. அவனுக்கு ஒரே கோவம், பின்னாடி வந்து நின்னுட்டான். அவன சமாதானப் படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.



இதெல்லாம் ஜெனெரலா ரெண்டு மூணு க்ளாஸ கூட்டி வெச்சு நடத்தினது. எங்களுக்கு எலெக்டிவ்ஸ் என்ஜினீரிங்க்ல சைன்ஸ் இன்ஜினியரிங் வாத்தியாரும் இவரேதான். நாங்க பதினாலு பேர்தான் அதுல. அதுனால இவர் ஒவ்வொருத்தரா வர சொல்லி நோட் வாங்கி கரெக்ஷன் செய்வாரு. நான் என் நோட்ட ரெடியா எடுத்து வெச்சிருந்தேன். நான் ரஃப் நோட்டுக்கு அந்த வருஷ புது டைரிதான் யூஸ் பண்ணுவேன். எதுக்கோ டைரிய எடுத்துப் பாத்தப்ப அதுல ஒரு மாச ஷீட் கிழிச்சிருந்தாங்க யாரோ, நான் பக்கத்துல இருந்த பையன் கிட்ட கேட்டப்ப அவன் ஜனார்தன் சிங்தான் கிழிச்சான்னு சொன்னான். அப்ப ஜனார்தன் சிங் சார் கிட்ட கையெழுத்து வாங்கிட்டிருந்தான். நான் கீழே குனிஞ்சு பாத்தேன், தரை அங்க இங்க பேர்ந்து சின்ன சின்ன செங்கலா இருந்துச்சு. நல்லா ஒரு எலுமிச்சம்பழம் அளவு இருக்கற கல்ல எடுத்து குறி பார்த்து அவன் மேல அடிச்சேன், அவன் கையெழுத்து வாங்கி நகந்துட்டான், கல் வாத்தியார் நெஞ்சுல விழுந்து நல்ல அடி பாவம். அவருக்கு படபடப்போட நல்ல கோவமும், யார் அடிச்சதுன்னு கேட்டப்ப யாரும் சொல்லல. ஆல்ஃபிரெட இன்னொரு கிளாஸ்லேர்ந்து குச்சி வாங்கி வர சொன்னாரு. அதுவரை குச்சியே யூஸ் பண்ணதில்ல, நல்ல மனுஷன் பாவம். அவன் வாங்கி வந்த ஒடனே அவனுக்குத்தான் மொதோ அடி , பழைய டீ வன்மத்தை தீத்துக்கிட்டாரு போல. வரிசையா ஒவ்வொருத்தரா அடிச்சிட்டே வந்தாரு. அப்பயும் ஒருத்தனும் சொல்ல யார் அடிச்சாங்கன்னு. நான்தான் 14ஆவதா ஒக்காந்திருந்தேன். எனக்கு முன்னாடி சுந்தர்னு ஒருத்தன், கிராமத்துப் பையன் வாட்ட சாட்டமா இருப்பான். அவனை அடிச்ச ஒடனே அவன் "சார் இவன்தான் அடிச்சான்"ன்னு என்ன கைய காமிச்சிட்டான், எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி, "யூ டூ ப்ரூட்டஸ்"னு அவன ஒரு பார்வ பாத்தேன். வாத்தியார் கோவம் உச்சிக்கு ஏற, என்ன அடிக்காம வெளில போடா க்ளாஸ விட்டுன்னு தொரத்திட்டாரு, அவர் அப்படி சொல்லவும், லஞ்சுக்கு ஸ்கூல் பெல் அடிக்கவும் சரியா இருந்தது. சந்தோஷமா வெளில வந்துட்டேன்.

என்னடா இந்த எபிசோட் பூரா பிற்பாடுதானான்னு பாக்கறீங்களா. ஸ்கூல் ஃபைனல்ங்கிறதால மத்த வாத்தியார் கிட்ட எல்லாம் வாலாட்ட முடியல. இவர்தான் மாட்டினார் கைப்புள்ள. அதான்.

ஃபைனல் எக்ஸாம் வந்தாச்சு. இங்கிலீஷ் மொதோ பேப்பர். நான் நல்லா எழுதிட்டேன் ஒண்ணேமுக்கால் மணி நேரத்துல முடிச்சிட்டேன், பேப்பரை நூல் கட்ட போனேன். சடார்னு பக்கத்துல இருந்த ஜனார்தன் சிங் என் பேப்பர இழுத்துக்கிட்டான். என்கிட்டே இப்ப ஒரு பேப்பர் கூட இல்ல. வாத்தியார் பாத்துட்டா இன்ன செய்யறதுன்னு இன்னும் ரெண்டு எக்ஸ்டரா ஷீட் வாங்கினேன், அதுல அவனுக்குத் தெரியாத கேள்விகள் ரெண்டுக்கு சுமாரா பதில் எழுதி நேரத்த கடத்தினேன். அவன் எழுதி முடிச்சப்பறம், எல்லாத்தையும் ஒழுங்கா பரிமாற்றம் செஞ்சு என்னோட பேப்பர நல்லா செக் செஞ்சு கொடுத்துட்டு வந்தேன், பலர சைலண்டா அலற விட்ட என்ன அன்னிக்கு சிங் நல்லா பதற வெச்சுட்டான். இதுதானோ "பிறர்கின்னா முற்பகல் செயின்?"

இத்துடன் பால்குடி டேஸ் முடிகிறது. ஏதாவது நினைவுக்கு வந்தால் அதை தனியாக எழுதுகிறேன். மற்றபடி தருமபுரி நினைவுகள் அதே தலைப்பிலேயே அவ்வப்போது தொடரும்.

பால்குடி டேஸ் முற்றும்.
பால்குடி டேஸ் - 16 தருமபுரி நினைவுகள்.

அப்பாடி! அப்படி இப்படி ஒழுங்கா படிச்சு பத்தாவது போயாச்சு. 10ஆவதுல எலெக்டிவ்ஸ் னு ஒரு சப்ஜெக்ட். விருப்பப் பாடம். கூடுதல் பாடமும். அது  ஒரு நல்ல ஸ்கீமா இருந்துச்சு. பின்னாடி காலேஜ்ல நம்ம எதுல படிக்கப் போறோமோ அதுக்கு ஸ்கூல்லயே நம்மள தயார் படுத்திடுவாங்க. நான் எஞ்சினீரிங். மத்தவங்க எல்லாம் என்ஜினீயர் ஆகற கனவோடு அந்த சப்ஜெக்ட் எடுத்தாங்களோ என்னவோ, நான் அந்த சப்ஜெக்ட் எடுத்தா, ஹிஸ்டரி ஜியாகிரஃபி, சயின்ஸ், தமிழ் இலக்கணம் இதெல்லாம் கிடையாதுங்கறதால இதுதாண்டா நம்ம சப்ஜெக்ட்ன்னு எடுத்துட்டேன். ஜெனரல் மேத்சும் கிடையாது. இந்த சுப்ஜெக்ட்களுக்கு பதில் எலெக்டிவ் மேத்ஸ், ஜெனரல் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் சயின்ஸ், என்ஜினீயரிங் டிராயிங், என்ஜினீயரிங் பிராக்டிகல் (கார்பெண்டரி &ஃபிட்டிங்).

மொதோ மாசம் மன்த்லி டெஸ்ட்ல எலெக்டிவ் மேத்ஸ்ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எல்லா பசங்களும் "டேய், இவன் எலெக்டிவ் மேத்ஸ்ல ஃபர்ஸ்ட்னு பேசிக்கிட்டப்ப கொஞ்சம் பெருமையாதான் இருந்தது. இங்கிலீஷிலேயும் நல்ல மார்க். எங்க அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். (பாவம்,வாழ்க்கைல என்னால அவர் பட்ட ஒரே ஒரு சந்தோஷம் இதுவாத்தான் இருக்கும்). ஒரு செகண்ட் ஹான்ட் சைக்கிள் வாங்கித் தந்தார். ஃபிலிப்ஸ் சைக்கிள். நல்ல தரமானது. மொதோ வேலையா அதுல என் பேர அழகா எழுதினேன். (அடடா, இப்பதான் ஞாபகம் வருது, நம்ம சைக்கிள் கத்துக்கிட்ட படலம் எழுத மறந்தே போச்சு. சரி அதை தனி ஒரு படலமா எழுதிடுவோம்)

ஒண்ணு ரெண்டு மாசத்துலயே எங்கள கார்பெண்டரில வாத்தியார் நல்லா தட்டி கொட்டி வேலை செய்ய பழக்கிட்டாரு. அவர் பேர் ஆரோக்கியசாமி. நாகேஷ் மாதிரி உடம்பு, அவ்வளவு ஆரோக்கியம். (ஆனா நல்ல ஸ்ட்ராங்கான பாடி). பசங்க கிட்ட ஜாலியா பழகுவாரு. சின்ன சின்ன ரிப்பேர் வேலையெல்லாம் வீட்டுல செய்யறதுக்கு டூல்ஸ் எடுத்துப் போறதுக்கு விட்டுடுவாரு.

எங்க இங்கிலீஷ் வாத்தியார் அமிர்தலிங்கம். அசப்புல அந்த கால நடிகர் M K ராதா (சந்திரலேகா ஹீரோ) மாதிரியே இருப்பாரு. மீசை கொஞ்சம் சின்னதா வெச்சிருப்பாரு. அதுனால அவருக்கு ஹிட்லர்னு பேரு. ரொம்ப நல்ல வாத்தியார்தான். தினமும் மனப்பாட செய்யுள் ஒப்பிக்கணும். எனக்குக் கொஞ்சம் கீச்சுக் கொரல். அதுனால ஒரக்க ஒப்பிப்பேன். பசங்க எல்லாம் சிரிப்பானுவ. வாத்தியாரும் லைட்டா சிரிச்சுப்பாரு. கொஞ்ச நாள் போன ஒடனே என்னையும் என் பக்கத்துல ஒக்கார்ற கமலாகரனையும் நீங்க ரெண்டு பெரும் சொல்ல வேண்டாம்னு சொல்லிடுவாரு. அவனும் நல்லா படிப்பான். இதுல எல்லாருக்கும் கடுப்பு, பின்ன காலைல வந்தவுடனே இங்கிலீஷுல செய்யுள் கேட்டா, கிராமத்துலேர்ந்து வர பசங்க என்ன செய்வாங்க, அவனுகளுக்கு தமிழ் செய்யுளே வராது. இதுல நம்ம என்ஜினீயரிங் பசங்கதான் ரொம்ப கடுப்பா இருந்தாங்க.

இந்த வருஷம்தான் ஆல்ஃப்ரெட் கனகராஜ் என்ட்ரி. கொஞ்ச நாள்லயே என்கூட நல்லா பழகி க்ளோஸ் ஃபிரெண்டாயிட்டான் (என்னை அன்று சிந்திய ரத்தம் கூட்டிட்டு போனவன் இவன்தான்) ஏதாவது செய்யணும்னு யோசிச்சு எஞ்சினீரியங் பசங்க திட்டம் தீட்டினாங்க. இவங்க திட்டம் தீட்ட என்கிட்டதான் ஐடியா கேப்பாங்க. எங்க வகுப்புக்கு கதவு கிடையாது. அப்பத்தான் புதுசா சில வகுப்புகள் கட்டினதால கதவு வெக்கல. உள் பக்கமும் சிமெண்ட் பூசல. அப்படியே செங்கல்செங்கலா இருக்கும். கார்பெண்டரி வாத்தியார் கிட்ட சொல்லி, உளி, மர சுத்தியல் (பெருசா இருக்கும்), ஸ்க்ரூ ட்ரைவர் எல்லாம் தேவையானது எடுத்துட்டாங்க. ஸ்கூல் 4.30 க்கு விடும். எல்லாரும் கிரௌண்ட்ல விளையாடிட்டு 6 மணிக்கு க்ளாஸ்ல நுழைஞ்சாங்க. முத வரிசைல இருக்கற ஒரு 4, 5 டெஸ்குக்கு டாப்ப ஓபன் பண்ணி பழையபடி அது இருக்காரா மாதிரியே வெச்சுட்டாங்க. எங்க வாத்தியாருக்கு ஒரு பழக்கம். நுழைஞ்சவுடனே நாங்க "குட் மார்னிங்" சொன்னவுடனே அத சிரிச்சுக்கிட்டே ஏத்துப்பாரு (எவ்வளோ நல்ல மனுஷன்) அதுக்கப்பறம் சட்டை கழுத்துல கைவெச்சு அதை ஒரு முறை மேல தூக்கி விட்டுப்பாரு. அடுத்ததுதான் இன்டெரெஸ்ட்டிங் மேட்டர். லைட்டா மேஜையை ஒரு முறை தூக்கி வெப்பாரு. அப்பறம் அவர் ஒக்கார்ற ஸ்டூல தூக்கி அடஜஸ்ட் செஞ்சுட்டு ஒக்காருவாரு. நம்ம பசங்க என்ன செஞ்சாங்க தெரியுமா. மேஜையை பார்ட் பார்ட்டா கழட்டி அப்பறம் அதே மாதிரி சும்மா செட் பண்ணி வெச்சுட்டாங்க. ஸ்டூலையும்தான். இது தவிர செங்கல் செவுரு பூரா "ஹிட்லர் ஒழிக" னு எழுதி வெச்சுட்டானுக.

மறுநாள் காலைல சார் வந்தாரு, வந்தவுடனே வழக்கம் போல எங்களை ஹோம்ஒர்க் நோட்ட எடுத்து வெக்க சொன்னாரு. பசங்க டெஸ்க்க ட்ரங்க் பொட்டி தொறக்கறா மாதிரி தொறந்து புஸ்தகத்த எடுத்து வெச்சாங்க. வாத்தியார் கடுப்பாயிட்டாரு. அப்பறம்தான் கவனிச்சாரு செவுத்துல பூரா ஹிட்லர் னு எழுதியிருக்கறத. அவர் அப்படி கோவப்படுவார்னு நான் எதிர்பார்க்கல. "எனக்கு ஹிட்லர்ன்னு பேர் வெச்சிருக்கீங்கனு எனக்கு தெரியும்டா. ஒரு வரலாற்றுப் புகழ் பெற்றவரின் பேர எனக்கு வெச்சிருக்கீங்கறதுல எனக்கு பெருமைதான்" அப்படின்னு கத்திட்டு மேஜையை தூக்கினாரு பாருங்க டாப் அவர் கைல மீதியெல்லாம் சரிஞ்சு விழுந்துடுச்சு. அப்படியே அதை கீழே போட்டாரு. ஸ்டூல்ல உக்கார்ந்தாரு. ஸ்டூல் பொத பொதன்னு சரிஞ்சு அப்படியே பின்னாடி சாஞ்சிட்டாரு. நான் இதை எதிர்பார்த்தேன். நானும் இன்னொரு ஃபிரெண்டும் ஓடிப் போயி அவரை கீழ விழாம புடிச்சுட்டோம்.அவர எங்க பெஞ்சுக்கு கூட்டி வந்து ஆசுவாசப் படுத்தினோம். தண்ணி குடுத்தோம். தண்ணி குடிச்சிட்டு ஒன்னும் சொல்லாம எழுந்து க்ளாஸ விட்டு போயிட்டாரு.
எனக்கு ஒரு வித கில்டி ஃபீலிங்.

அன்னிக்கு அவர் கிட்ட ட்யூஷன் படிக்க வந்த பசங்கள கண்னா பின்னான்னு திட்டியிருக்காரு. அந்தப் பசங்க ஒண்ணுமே செய்யல பாவம். எங்க குரூப்தான் செஞ்சது. இது யாருக்கும் தெரியாது. அந்தப் பசங்க கடுப்பாயி வீட்டுக்குப் போறப்ப பெரிய பெரிய செங்கலா அவர் வீட்டு ஓட்டுக் கூரை மேல வீசி எறிஞ்சிருக்காங்க. பாவம் அதுல அவருக்கு பிபி எகிறி அவர் ஒரு வாரம் லீவு போட வேண்டியதா போச்சு. இதுல எனக்கு ரொம்ப வருத்தம். ஒரு நல்லவர இப்படி செஞ்சுட்டாங்களேன்னு. ஆனா அவர் மறுபடி வந்து க்ளாஸ் எடுக்கறப்ப பசங்க ரொம்ப நல்லபடியா இருந்தாங்க. அவரும் ஒண்ணுமே கேக்கல யாரையும். ஹெட்மாஸ்டர் கிட்டக்க கூட ரிப்போர்ட் செய்யல.

நான் 9ஆவது படிக்கறப்ப காந்தி ஜயந்தி அன்னிக்கி (1975) காமராஜர் இறந்து போயிட்டாரு. எங்க தெருவுல வெங்கடேசன்னு ஒரு அண்ணன். எங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கற மாமாவோட பையன். அவர் காங்கிரஸ் அபிமானி. தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சிலவும் நிரந்தர மெம்பர். அவர நாங்க தலைவர் னு தான் கூப்பிடுவோம். அவர் யோசனைப்படி எங்க தெருவுல "காமராஜர் நினைவு நற்பணி மன்றம்" னு ஆரம்பிச்சோம். எங்க தெரு முட்டுத் தெரு. அந்த முட்டு ஒரு வீட்டோட பின் சுவர். அதுல மன்றத்தோட பேர் எழுதி ஆரம்பிச்சோம். நான்தான் எழுதினேன். மொதோ மொதோ ஒரு நல்ல காரியத்துக்கு எழுதினேன். இப்ப பத்தாவதுல ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு. அவருடைய மொதோ நினைவு நாளையும், மன்றத்தின் மொதோ ஆண்டு விழாவையும் ஒண்ணா கொண்டாட முடிவு செஞ்சோம். உங்களுக்கு நினைவு இருந்தா அப்பல்லாம் கரெக்ட்டா காந்தி ஜெயந்தி அப்பத்தான் ஆயுத பூஜை வரும். விழா கொண்டாட தெருல எல்லார் கிட்டயும் வசூல் பண்ணோம். விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டி, ஓவிய போட்டி எல்லாம் நடத்தினோம். ஷியாம் சுந்தர் னு ஒரு அண்ணன். கலை ஆர்வம் மிக்கவர். "பவளக்கொடி" நாடகம் போடலாம்னு முடிவு செஞ்சாரு. அதுக்கு அவரே ஸ்க்ரிப்ட் ரெடி செஞ்சு வசனம் எல்லாம் எழுதினார். கதை அப்படியே இருக்கும். ஆனா வசனம் எல்லாம் கொஞ்சம் தமாஷா இருக்கும். எல்லாருக்கும் சந்தோஷம். எங்க அண்ணன்தான் கிருஷ்ணர். அவனுக்கு நல்ல சுருட்டை முடி. அவன் முக அமைப்பு கிருஷ்ணர் வேஷத்துக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். ரமணி நீயும் நடிக்கறேன்னு சொன்னாரு சுந்தர். ஆஹான்னு நெனைக்கறதுக்குள்ள நீதான் பவளக்கொடின்னு ஒரு குண்டு போட்டாரு பாருங்க. என்னோட இது தகடூருக்கு வந்த சோதனைன்னு நெனச்சு நொந்து போயிட்டேன். ஆனா தப்பிக்க முடியாது. விழாவுக்கு முன்னால 3 நாள் ரிகர்சல். இதுல நாரதரா நடிக்க ஆள் கிடைக்கல, எங்க அண்ணனே நாரதர் வேஷமும். கிருஷ்ணரும் நாரதரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காத நாடகம் இதுவாத்தான் இருக்கும். நாரதரா வர்றப்ப ஒரு காவி வேஷ்டியை கிருஷ்ணர் வேஷத்து மேலேயே சுத்திண்டு வந்துடுவான்.

சுந்தர் எழுதின வசனம் எப்படி தெரியுமா? அர்ஜுனனுக்கும் பவளக்கொடிக்கும், அந்தக் காலத்துலே வடிவேலு-கோவை சரளா டைப். எங்க அண்ணன் கிருஷ்ணருக்கு தேங்காய் ஸ்ரீநிவாசன் டைப்.

பகல்ல வெளையாட்டுப் போட்டிகள். வயதுக்கேத்தாப்பல க்ரூப் பிரிச்சு ரன்னிங் ரேஸ். பெண்களுக்குத் தனியா ஸ்கிப்பிங் போட்டி. பப்ளிக்ல ஓட யாரும் வரல. அப்பறம் டிராயிங் போட்டி. டிராயிங்ல நான்தான் ஃபர்ஸ்ட். காமராஜர் படம் வரைஞ்சேன். (வேற யாருமே கலந்துக்கல) என்னோட வயசுப் பசங்க ரன்னிங் ரேஸ்லயும் நான் தான் ஃபர்ஸ்ட்.
No automatic alt text available.

மாலைல தெருவிலேயே ஒருத்தர தலைமை தாங்க சொல்லி விழா ஆரம்பமாச்சு. மொதல்ல பாட்டுப் போட்டி. அதுலயும் நான்தான் ஃபர்ஸ்ட், ரெண்டாவதா வந்த சுகுமார்ங்கிற பையன் என்ன விட நல்லா பாடுவான். அவன் ஒரு சரியான பாட்டு செலெக்ட் செய்யாததால எனக்கு மொதோ ப்ரைஸ். (அடுத்த வருஷம் அவன்தான் ஃபர்ஸ்ட் வந்தாங்கிறது வேற விஷயம். நான் செகண்ட். இதுல பெரிய விஷயம் என்னன்னா நாங்க ரெண்டே பேர்தான் பாடினோம்)

அப்பறம் ப்ரைஸ் டிஸ்ட்ரிபியூஷன் செஞ்சாங்க. அடுத்து எல்லாரும் எதிர்பார்த்திருந்த நாடகம் ஆரம்பம். சும்மா சொல்லக் கூடாது. தெரு மக்கள் அனைவரும் திரண்டு மேடைக்கு முன்னாடி உக்கார்ந்தாங்க. அடுத்த தெரு ஆளுங்களும் நெறைய பேர். சுமார் 100 பேராவது இருக்கும். நாடகத்துக்கு நல்ல வரவேற்பு. சுந்தர் எழுதிய வசனங்கள் குபீர் சிரிப்பை வரவழைத்தன. என் அண்ணன் கிர்ஷ்ணராக தோன்றியபோது உண்மையிலே ஒரு பெரியவர் உணர்ச்சி வசப்பட்டு விட்டார். ஒரு கணம்தான். உடனேயே தன்னிலைக்கு வந்து விட்டார். ஆனால் நாடகத்தின் ஹைலைட் பவளாகக்கொடியாக தோன்றிய நான்தான். கிருஷ்ணர், அர்ஜுனனைவிட நான் உயரம். நல்ல ஜடை பின்னி, கீச்சுக் குரலில் நான் நாதா என்று ஆரம்பித்தபோதே பலத்த கைதட்டல். பிறகு நான் வசனம் பேசும்போதெல்லாம் நல்ல சிரிப்பு. நாடகம் இனிதே முடிந்தது. எல்லாரும் மகிழ்வுடன் திரும்பினர். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது, எப்போதாவது கோயில் விழாக்களில் நடக்கும் ஆர்கெஸ்டராதான். அதனால் வந்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.  நாடகம் முடிந்தவுடனே, நான் புடவையைத் மேலே தூக்கிக்கொண்டு ஓடி வீட்டுக்கு வந்தபோது அனைவருக்கு சிரித்தார்கள். இதில் இன்னொரு காமெடி. வீட்டில் நான் புடவை கட்டிக் கொண்டு ரூமிலிருந்து வெளியே வரும்போது கொலுவுக்கு வந்திருந்த என் அக்காவின் சிநேகிதியும் அவர்களின் தங்கைகளும் என்னைப் பார்த்து "கொல்"லென்று சிரித்ததுதான் .

மூன்று வருடங்கள் இதை போல் நாடகம் நடத்தினோம். இரண்டாம் வருடம் அல்லியாக நடித்த பையன் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான். SSLC போயிட்டானாம். நானும்தான் SSLC. அதனால் நானே அவன் வேடத்தையும் நடித்தேன். டபுள் ஆக்ட். மூன்றாம்  வருஷம்தான் டாப். சுபத்திரையாக நடித்த பையன் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று விட்டான். நான் 3 வேடங்கள் போட வேண்டியதாயிற்று. அதற்கு அடுத்த வருடம் நானே இனி என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டேன். அதனால் நாடகம் நின்று ஒரு இசைக்கச்சேரி நடத்தினோம். சுமாராக இருந்தது. அதற்கப்புறம் நான் ஊரை விட்டு வந்து விட்டேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

அதற்கப்புறம் அந்த வருடம், ஸ்கவுட், கிரிக்கெட், பால் பேட்மிண்டன் என்று போயிற்று.
அடுத்த வரம் 11ஆவது வகுப்பில் நடந்தவை. நிறைவு வாரம் பால்குடி டேஸிற்கு.

சந்திப்போம்