பால்குடி டேஸ் - PAAL KUDI DAYS
தருமபுரி நினைவுகள் - 5
(இரண்டு வாரங்கள் விடுபட்டதற்கு மன்னிக்கவும். உடல்நிலை காரணமாக எழுத இயலவில்லை)
மூணாம் க்ளாஸ் போயாச்சு. புதுசு புதுசா பாடங்கள். A, B, C, D சொல்லித் தர ஆரம்பிச்சாங்க. (அப்பல்லாம் மூணாம் கிளாஸ்தான் சொல்லித்தர ஆரம்பிப்பாங்க, அது வரை தமிழ்தான். இது ஒரு நல்ல முறை தாய் மொழியை நன்கு கற்பதற்கு. இதில் பலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். எந்த மொழியையும் எவ்வயதில் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் தாய் மொழி தாய்ப்பால் போல், சிறுவயதிலேயே கற்றுக் கொண்டு விட வேண்டும்.) HOT CROSS BUNS, DING DONG BELL RHYMES எல்லாமே மூணாம் கிளாஸ்லதான். 🤔. கொஞ்சம் ஜாலியாதான் இருந்தது.
ஒரு வாரம் போனவுடனே கணக்கு டீச்சர் பெரிய குண்டு போட்டாங்க. வகுத்தலாம், பெருக்கலாம். அது வரை கூட்டிக் கழிக்கவே பெரும்பாடு. இதுல ஈவு இரக்கமே இல்லாம, வகுத்தல்ல ஈவு, மீதி ன்னு எல்லாம் வேற எழுதணும். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு, கழித்தல்லயும் கடன் வாங்கிக் கழிக்கணுமாம். (அப்பவே கடன் வாங்கப் பழக்கி விட்டாங்க) இதுல சரித்திர பூகோளம்ல வர பாடங்கள் அதிகம் ஆகி, உலகமே தரித்திர பூலோகம் ஆச்சு. கிங் சாலமனாம். யாருக்கு வேணும். உள்ளூர் அரசரைப் பத்தியே தெரியாது நமக்கு.
அப்ப தர்மபுரில சர்க்கஸ் நடந்திட்டிருந்துச்சி. டெய்லி காலைல சர்க்கஸ் யானைங்க மேல ஊர்வலமா விளம்பரம் செஞ்சுட்டு வருவாங்க. எங்க ஸ்கூல்ல பின்பக்கம் காம்பௌண்ட் ஓரமா நெறைய வாழை மரம் இருக்கும். அப்படி ஊர்வலம் வந்தப்ப யானைங்க குஷியாகி ரோட்லேர்ந்தே வாழைமரங்களை முறிச்சு தின்ன காம்பௌண்ட் செவுரு இடிஞ்சு விழுந்துடுச்சி. அதுக்குள்ளே யானைகளுக்கு மதம் புடிச்சுடுச்சுன்னு பீதியை கிளப்பி விட்டாங்க. எல்லாரும் டீச்சரங்க உட்பட நடுங்கிக்கிட்டு உக்காந்திருந்தோம். ஒருத்தருக்கும் முன்வாசல் வழிய வெளிய போகணும்னு தோணல. அங்கேயும் யானை வந்துடுச்சுன்னா. இதுல களேபரம் ஒரு குட்டி யானை செய்ஞ்சதுதான். குஷில அது ஸ்கூல் கிரௌண்ட்ல அங்கேயும் ஓடி ஆடி விளையாடவே எல்லாரும் விநாயகர் துதிதான். பாலா டீச்சர்னு ரெண்டாம் க்ளாஸ் டீச்சர் ஒருத்தவுங்க என்னதான் ஆவுதுன்னு பாக்க போனாங்க. அவங்க ரொம்ப தாட்டியான ஆளு, சரீரமும் சாரீரமும் கனம்தான். அதுக்குள்ளே யானைங்க டிஃபனை முடிச்சுட்டு போயிட்டுதுங்க. பாலா டீச்சர் வந்து யானைங்க எல்லாம் போயிட்டுதுங்க, எல்லாரும் வீட்டுக்கு போலாம்னு சொன்னாங்க. உடனே எல்லாரும் பாலா டீச்சரைப் பாத்து யானைங்க பயந்து ஓடிடுச்சுங்கன்னு நெனைச்சு அவங்க மேல ஒரு பயம் கலந்த ஒரு மரியாதையே வந்துடுச்சி. ரொம்ப நாள் அதை வெச்சு யாரையாவது மெரட்டணும்னா, "ஒழுங்கா இருக்கிறியா, இல்ல பாலா டீச்சர கூப்பிடவான்னு மத்த டீச்சருங்கல்லாம் சொல்லுவாங்கன்னா பாத்துக்கங்களேன்.
மூணாவது படிக்கும்போதுதான் எனக்கு டைஃபாயிடு வந்துச்சு. அப்பல்லாம் இப்ப மாதிரி ஒரே ஊசில சரியாகாது. 45 நாள் வைத்தியம் பாக்கணும். (45 நாளும் லீவுதான் ஸ்கூலுக்கு). வீட்டுலயும் ராஜ மரியாதை, தினமும் எனக்கு ஒரு கேக்கு. தனி கவனம்னு வாழ்க்கை நல்லாவே ஓடிச்சி. கனக்குப் பாடங்களிலேர்ந்து விடுதலை. பின்ன எப்படி பாஸ் பண்ணினேன்னு கேக்கறீங்களா. டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்குடுத்து ஒரு வழியா மூணாம் க்ளாஸ் பாஸ் பண்ணிட்டோம். லீவுல எங்க பாட்டி எனக்கு கணக்கு புரியறா மாதிரி சொல்லிக் கொடுத்தாங்க. லீவு முழுக்க கணக்கு பிராக்டீஸ்த்தான்.
லீவுக்கு மெட்றாஸ் போலாம்னாங்க, ரயில்ல. அது வரைக்கும் ரயில சினிமாவுலதான் பாத்திருந்தோம். மொத மோதலா நேர்ல பாக்கப் போறோம்ங்கிற ஆவலும், கூடவே பயமும். தர்மபுரிலேர்ந்து மொரப்பூர்னு ஒரு ஸ்டேஷன் போய் அங்கிருந்து ஒலவக்கோடு பாசஞ்சர் புடிக்கணும், மொரப்பூர்ல 4 மணிக்கு ஏறினா மறுநாள் காலைல 7 மணிக்கு மெட்றாஸ். அவ்வளோ வேகம். (இப்ப கோவை எக்ஸ்பிரஸ் 4 1/2 மணி நேரத்துல போயிடும். அப்ப அதோட வேகத்தைப் பார்த்துக்குங்க). பெருமை தாங்கல, எல்லார்கிட்டயும் ஜம்பம் அடிச்சுக்கிட்டேன் நாங்க மெட்றாஸ் போறோம்னு. (இந்த காலத்துல புள்ளைங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு போவுதுங்க).
ஒரு வழிய மெட்றாஸ்ல அத்தை வீடு வந்து சேந்தோம். வந்தவுடனே பெருசா ஒன்னும் தோணல. தருமபுரி இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா எப்படி இருக்குமோ அப்படிதான் தோணிச்சு. இங்கயும் ஸ்டோர் வீடுங்கதான். (எங்க தருமபுரில பெருசு பெருசா வீடுங்க அப்படின்னு அங்க ஜம்பம் அடிச்சுக்கிட்டோமில்ல). வாழ்க்கைல மொத மொதலா தண்ணி அடிக்கற பம்பு பாத்தேன். விளையாட்டா அதுல அடிக்கடி தண்ணி அடிக்கப் போயி, டெயிலி என்ன தண்ணி அடிக்க வெச்சுட்டாங்க. அத்தை வீட்டுல அவங்க பசங்க எல்லாம் ரொம்ப பெரியவங்க. கடைசி பையனே டிகிரி படிச்சிட்டிருந்தா பாத்துக்கங்களேன். அதுனால ரொம்ப இன்டெரெஸ்ட்டா அங்க ஒன்னும் இல்ல.
மூணு நாலு நாள் கழிச்சு எங்க பெரியம்மா வீட்டுக்கு போனோம். அங்க கொஞ்சம் ஜாலியா இருக்கும். வெளில எல்லாம் கூட்டிட்டுப் போனாங்க. ஜூ கூட்டிட்டு போனாங்க. அப்ப எங்க சித்தப்பாவும் வந்திருந்தார் அங்க. ஜூல மனுஷக்குரங்கு இருக்கற இடத்துல நெறய கூட்டம். ஒரு சேட்டுப்பையன் அதை சீண்டிக்கிட்டே இருந்தான். அது மௌனமா இருந்துச்சு. ஒரு கட்டத்துல தொல்லை தாங்காம போயி அது ரெண்டு கையையும் பின்னாடி கட்டிக்கிட்டு கூண்டுக்கு அந்தப் பக்கமா போயி நின்னு திரும்பி அவனை பாத்துச்சு. திடீர்னு வேகமா ஓடி வந்து புளிச்சுனு எச்ல்சி துப்பிச்சு பாருங்க அவன் மூஞ்சில, ஏறக்குறைய 1/2 லிட்டர் எச்சில் வழிஞ்சிச்சு அவன் மூஞ்சில, எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சிட்டாங்க, அவனுக்கு அவமானமா போயிடுச்சி.எச்சிலை தொடைக்கறதா, இல்ல மூஞ்சில வழியற அசடைத் தொடைக்கிறதான்னு புரியாம அவன் நடந்து போயிட்டான். நானும் சிரிச்சிக்கிட்டே திரும்பிப் பாத்தா எங்க மனுஷங்க ஒருத்தரையும் காணோம். ஒரே அழுகை எனக்கு, எங்க சித்தப்பா பேரும், கூட்டிக்கிட்டு போன எங்க பெரியம்மா பையன் பேரும்தான் தெரியும். அட்ரஸ், ஏரியா பேர் ஒன்னும் தெரியாது. ஆனா அப்பல்லாம் நல்ல மனுஷங்க நெறைய பேர் இருந்தாங்க. என்னைக் சமாதானப்படுத்தி தண்ணி கொடுத்து, இரு கண்டுபுடிச்சிடலாம்னு சொல்லிட்டிருந்தப்ப என்னோட சித்தப்பா என்னைத் தேடிட்டு வந்துட்டாரு. ஒரு கையால என்னை தூக்கி முதுகுல ஒரு அறை விட்டாரு பாருங்க. எனக்கு அழறதைவிட, "அப்பா, நம்ம மனுஷங்க நம்மளைக் கண்டுபுடிச்சிட்டாங்க"ங்கற ஆனந்தம்தான். (இவங்க நம்மளை கவனிக்காம விட்டுட்டுப் போயி அதுக்கு நம்மளை அடிக்கற பெரியவங்க உலகமடா சாமி இதுன்னு அப்ப நினைச்சுக்கிட்டேன்.)

அப்பறம் எங்க அப்பா வந்து பீச், எலெக்ட்ரிக் ட்ரெயின் எல்லாம் காமிச்சு, ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. ஆனா மெட்றாஸ் வெயில் தாங்காம என் மூஞ்சி பூரா கட்டி. இந்த மெட்ராஸ்ல நாய் கூட குடியிருக்காது. நம்ம செத்தாலும் மெட்றாஸ்ல மட்டும் குடியிருக்கக் கூடாதுன்னு உறுதிமொழி எடுத்துக்கிட்டோம் நாங்க சிஸ்டர் பிரதர்ஸ் எல்லாம்சேந்து (நம்ம நெனைச்சது எங்க நடக்குது)
நாலாம் க்ளாஸ் கதையை அடுத்த வாரம் பாப்போம்.
(தொடரும்)
No comments:
Post a Comment